சொல்கடிகை – 2 ஸ்காட்ச் & சோடா சட்டை

ஏன் நீங்கள் ஒரு அசோகமித்திரன் மாதிரி, லா.ச.ரா. மாதிரி சாத்வீகமான நபராக வாழ மறுக்கிறீர்கள்?  ஏன் இப்படி eccentric-ஆக, எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டே வாழ வேண்டும்? 

-இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுவதுண்டு.  நானும் யோசித்துப் பார்ப்பேன்.  அசோகமித்திரன், லா.ச.ரா. மட்டும் அல்ல, ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் போன்ற பலரும் சமூகத்தோடு ஒட்டித்தானே வாழ்ந்தார்கள்? 

விதிவிலக்காக பாரதியையும் புதுமைப்பித்தனையும் மட்டுமே சொல்லலாம்.

ஆனால் என்னுடைய வாழ்க்கையும் எழுத்தும் மேலே குறிப்பிட்ட யாரோடும் இணைத்தோ, ஒப்பிட்டோ பார்க்க இயலாதது. 

மார்க்கி தெ ஸாத் பஸ்த்தில் சிறையில் எட்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த போதுதான் அவரது The 120 Days of Sodom என்ற நாவலை எழுதினார்.  அந்த நாவல் அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் குடும்பத்தினரால் கொளுத்தப்பட்டது.  அந்த நாவல் மட்டுமல்லாமல் அவர் எழுதிய எல்லாமே அவர் குடும்பத்தினரால் கொளுத்தப்பட்டது.  ஸொடோம் நாவலின் ஒரே ஒரு பிரதி ஜெர்மனியில் கிடைத்ததால் அது இன்று நமக்குக் கிடைக்கிறது.  1950க்குப் பிறகுதான் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்த அவரது நூல்கள் ஒவ்வொன்றாக அச்சிடப்பட்டன.  

இதேபோல் எனக்கும் ஆகி விடுமோ என்று உண்மையிலேயே அச்சப்படுகிறேன்.  இன்றைய தினம் கையெழுத்துப் பிரதிகளை எரித்து நூல்களை அழித்து விட இயலாது.  ஆனால் எஸ். சம்பத் குடும்பத்தினர் செய்தது போல் செய்து விடலாம்.  எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலை யாரும் வெளியிடவில்லை என்றே நினைக்கிறேன்.  சம்பத்தின் குடும்பத்தினரை மீறி வெளியிடுவதற்கு எந்தப் பதிப்பகமும் முன்வரவில்லை.  வழக்குத் தொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கமே காரணம். 

என் காலத்துக்குப் பிறகு என்னுடைய காமரூப கதைகள் என்ற நாவலுக்கு அப்படி ஒரு கதி ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்.  என்ன செய்யலாம் என்று இப்போதைய நிலையில் எனக்குத் தெரியவில்லை.

மார்க்கி தெ ஸாத்-இன் எழுத்துக்கள் அனைத்தையும் 150 ஆண்டுகள் யாருக்கும் கிடைக்காமல் செய்ய முடிந்தது.  காரணம், அவர் எழுத்து சமூகத்துக்கு விரோதமானதாகக் கருதப்பட்டது.  ஒருவன் அல்லது ஒருத்தியின் உடலைச் சித்ரவதை செய்வதை நியாயப்படுத்தி எழுதினால் அதை சமூகம் தனக்கு விரோதமானதாகத்தானே கருதும்?  ஒரு சிறுமியை வன்கலவி செய்வதை நியாயப்படுத்தி எழுதி விட்டு ஒருவர் சமூகத்தில் நடமாட முடியுமா?  அதன் காரணமாகத்தான் கிட்டத்தட்ட தேசத்துரோகம் அளவுக்குக் கருதப்பட்டது மார்க்கியின் எழுத்து.  ஸாத் ஒரு நிலப்பிரபுவாக (மார்க்கி) இருந்திருக்காவிட்டால் அவரை கில்லட்டினில் வைத்துத் தலையைத் துண்டாக்கியிருப்பார்கள்.  அந்தக் காலத்தில் மார்க்கிகள் எத்தனை பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த்து. 

மார்க்கியின் எழுத்து அனைத்தும் அவர் குடும்பத்தினரால் எரிக்கப்பட்டு விட்டதால் அவர் எழுத்து சரித்திரத்தில் காணாமலே போயிருந்திருக்கும், இரண்டாம் உலக யுத்தமும் நாஜிகளின் வதைமுகாமும் நடந்திருக்காவிட்டால்.  அதற்குப் பிறகுதான் மார்க்கியின் எழுத்தை சமூகம் திரும்பிப் பார்த்த்து.  ’அட, மார்க்கி தெ ஸாத் எழுதியதுதானே இப்போது நடக்கிறது’ என்று சமூகம் அவர் எழுத்தைத் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தது.  மனித மனதின் வன்முறை குறித்தும் காமம் குறித்தும் அவர் எழுதினார்.  தான் எழுதினபடியே வாழவும் செய்தார்.   

உலகில் வாழ்ந்த ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்கள் யாருமே அசோகமித்திரன் மாதிரியோ லா.ச.ரா. மாதிரியோ வாழவில்லை.  வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி (ப்யூக்கை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர் என்று சொல்ல முடியாது), ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரோவாக், ஜான் ஜெனே போன்ற யாருமே லா.ச.ரா. போல் வாழ்ந்ததில்லை.  லா.ச.ரா. எழுதிய ஜனனி போல் வாழ்ந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். 

நானும் ஜனனி போல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  என்ன, ஜனனி கிழிந்த சட்டை போட்டிருந்தாள்.  நான் ஸ்காட்ச் அண்ட் ஸோடா சட்டை போடுகிறேன்.  அவ்வளவுதான் வித்தியாசம்.