”சாரு, நான் போலீஸில் சேரவா? சிவிலில் சேரவா?”
என் வளர்ப்பு மகனைப் போன்ற ஒரு நண்பன் பத்தாண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி இது. பார்ப்பதற்கு முதலாண்டு படிக்கும் கல்லூரி மாணவனைப் போல் இருப்பான். ”டேய் தம்பி, நீ போலீஸில் சேர வேண்டாம், அப்புறம் போற வாற கான்ஸ்டபிளெல்லாம் நீ டெபுடி கமிஷனர் என்று தெரியாமல் டேய் தம்பின்னு கூப்பிட்ருவாங்க, உனக்குக் கஷ்டமா இருக்கும், அதனால் சிவிலிலேயே சேர்” என்றேன். அதற்கு அந்தத் தம்பி, “ஆமாம் சாரு, உங்கள் பிறந்த நாள் பார்ட்டியின்போது கூட உங்கள் நெருங்கிய நண்பர் என்னை டேய் தம்பின்னுதான் கூப்டார். அன்பாத்தான் கூப்டார். இருந்தாலும் சங்கடமா இருந்துது” என்றான்.
பத்தாண்டுகளில் உடம்பு போட்டு விட்டது. இப்போது நான் மட்டும்தான் அவனை டேய் தம்பி என்று அழைக்கிறேன்.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அவனை நான் போலீஸிலேயே சேரச் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சேர்ந்திருந்தால் என் வாழ்க்கை இப்போது இருப்பதை விட இன்னும் கொஞ்சம் சௌகர்யமாக இருந்திருக்கும். ஏனென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் எழுபது சதவிகிதம் பேர் கிரிமினல்களாக இருக்கிறார்கள். அதனால் ஏற்படும் சிரமங்கள் நம்மில் யாராவது போலீஸாக இருந்தால் சுத்தமாகக் குறைந்து விடும். போலீஸ் என்றால் பயப்படுகிறார்கள். பூனைக்கு சாப்பாடு போடுகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரன் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
என் வளர்ப்பு மகன் அவ்வப்போது போலீஸ் வண்டியில் என் வீட்டுக்கு வந்து போனான் என்றால் பக்கத்து வீட்டுக்காரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்க மாட்டான். போலீஸ் என்றால் துடுக்குத்தனத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். ஒரு ஐந்து ஆண்டுக் காலம் திலகவதி என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்த போது ஒரு பிரச்சினை இல்லாமல் இருந்தது.
நம்ப மாட்டீர்கள். என் பால்கனிக்கு எதிரே சிறுநீர் கழிக்கிறான். எனக்கு அது பற்றிப் பிரச்சினையே இல்லை. ஆனால் அவந்திகாவுக்கு அது உலக மகா பிரச்சினை. பெண். அவள் கேட்டால் தெருவில் மூத்திரம் போனால் உனக்கு என்னடீ என்கிறான். கேட்டது பிரச்சினை இல்லை. டீ தான் பிரச்சினை.
இதன் காரணமாகவே நான் என்னோடு தொடர்பு கொள்ளும் புதிய வாசகர் யாராக இருந்தாலும் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், எந்த ஊரில் வசிக்கிறீர்கள் என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இரண்டாவது கேள்விக்கு பலரும் தாங்கள் பிறந்து வளர்ந்து படித்த ஊரைச் சொல்வார்கள். பிறகு நான் திரும்பவும் அதே கேள்வியை இன்னும் விளக்கமாகக் கேட்பேன். ”அதெல்லாம் சரி, இப்போது எங்கே வசிக்கிறீர்கள் சாமி?” அப்போதுதான் சரியான பதில் கிடைக்கும்.
இந்த இரண்டாவது கேள்வியைக் கேட்கும் காரணம் படு முக்கியமானது. எனக்கு உலகில் பல தேசங்களுக்குப் போக வேண்டும். போகவே விரும்பாத நாடுகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. ஒருத்தர் தான் மெல்பேர்னில் வசிப்பதாகச் சொன்னால் அவரால் எனக்குப் பயன் இல்லை. ஏனென்றால், நான் போகவே விரும்பாத நாடுகளின் பட்டியலில் முதலில் இருப்பது ஆஸ்த்ரேலியா. அந்த நாட்டில் இலக்கியமும் இல்லை, சினிமாவும் இல்லை. அதன் நிலவியலும் என்னை அத்தனை ஈர்க்கவில்லை. இலக்கியம், சினிமா கூட முக்கியம் இல்லை. அந்த நிலம் ஈர்க்க வேண்டும். அமெரிக்காவில் எனக்குப் பிடித்த எதுவுமே இல்லை. அது ஒரு கிரிமினல் சமூகம். ஒரு மனிதன் இரவில் தனியாகச் செல்ல முடியாது என்பது கூடப் புரிகிறது, பகலில் கூடத் தனியாகச் செல்ல முடியாத ஒரு சமூகத்தை என்னவென்று சொல்வது? பத்து டாலருக்காகக் கொன்று விடுகிறார்கள். ஆனாலும் அமெரிக்க நிலம் என்னை ஈர்க்கிறது. முக்கியமாக அலாஸ்கா.
அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் எந்த ஊர் என்று கேட்டேன். மன்னார் என்றார்.
சாமி, இப்போது வசிப்பது எந்த ஊர்?
பெய்ரூத்.
உடனே நான் சொன்னேன். ”நான் அங்கே ஒரு வாரம் வருகிறேன். உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவீர்கள்தானே, அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் என்னோடு செலவிட்டால் போதும். காசு செலவும் வைக்க மாட்டேன். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.”
ஆஹா வாருங்கள், உங்களோடு பேசவும் பழகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.
ஒரே வாரத்தில் கிளம்பி விட்டேன். அந்த நண்பர்தான் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ். வாழ்வில் மறக்க முடியாத பயண அனுபவங்களில் ஒன்று அது.
வேலை விஷயம் பற்றியும், ஊர் பற்றியும் கேட்பதன் காரணம் இதுதான்.
சமீபத்தில் ஒரு புதிய வாசகரிடம் இதே கேள்விகளைக் கேட்டேன்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த ஊரில் வசிக்கிறீர்கள் ?
பதில்: இது ரொம்ப சாதாரண (popular) கேள்விதான்.
இப்போனு இல்ல, எப்போவுமே என்கிட்ட இந்தக் கேள்விக்கு பதில் இல்ல சாரு.
அசௌகரியமான நிலை தான்.
தற்போது நான் காஞ்சிபுரத்தில் சும்மாதான் இருக்கேன்.
நண்பருக்கு அசௌகரியம் என்றாலும் எனக்கு சௌகரியம்தான். சும்மா இருப்பவர்களிடம்தான் நேரம் ஏகமாகக் கிடக்கும். நான் காஞ்சீபுரம் போனால் அவரோடு சேர்ந்து சுற்றலாம். என்ன சுயநலம் இது, என்னோரு சேர்ந்து சுற்றுவதற்காக ஒருத்தர் வேலையற்று இருக்க வேண்டுமா என்றெல்லாம் என்னிடம் குதர்க்கம் பண்ணக் கூடாது. வேலையில்லாதவர்களிடம் பழகும் போது கிடைக்கும் ஒரு சௌகரியத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவ்வளவுதான்.
எனக்குக் காஞ்சீபுரத்தில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. இப்போது வியாபார ஸ்தலமாகப் போய் விட்டாலும் காமாட்சியம்மன் கோவிலைப் பார்க்க வேண்டும். (”டேய் தாயோளி, அந்த ஆள் என்னோட ஆள்டா, நீ அவரைத் தள்ளிண்டு போய்ட்டியேடா முட்டாக் கூதி” என்ற திவ்யமான வார்த்தைகளை கர்ப்பகிருஹத்தில் கேட்டதாக என் நண்பர் ஒருவர் துயரத்தோடு சொன்னார். அதாவது, ஒரு குருக்கள் அவருடைய பக்தரை இன்னொரு குருக்கள் தட்டிக் கொண்டது குறித்துத் தன் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தியதாம்!)
இப்போது நண்பர் காஞ்சீபுரம், அதுவும் சும்மா இருக்கிறார் என்றால் எனக்கு அது எத்தனை சௌகரியம்? அதனால்தான் ஒவ்வொருவரிடமும் ஊரையும் வேலையையும் பற்றி விசாரிக்கிறேன். குறிப்பாக யாரும் விமான நிலையத்தில் வேலை பார்க்கிறார்கள் என்றால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். என்னை வெகுவாக அச்சமூட்டும் இடங்களில் ஒன்று விமான நிலையம். இந்திய விமான நிலையங்கள்தான் இப்படி. மற்ற பல நாடுகளில் நிலைமை சௌஜன்யமாக உள்ளது. இவ்விஷயத்தில் தென்னமெரிக்க நாடுகள் இந்தியாவை விட மோசம். நான் சென்று வந்த முப்பது நாடுகளில் ஜப்பானிய விமான நிலையங்கள்தான் ஆக சிநேகபூர்வமானவை.
அமெரிக்கப் பாஸ்போர்ட் இருந்தால் உலகம் பூராவும் சலாம் போட்டு அனுப்புகிறார்கள் என்பதையும் வேதனையுடன் கவனிக்கிறேன்.