இலங்கைப் பயணம் – 3

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஊர் ஊராக சிறு பத்திரிகை நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கி, அங்கிருந்து காசு வாங்கிக் கொண்டு இன்னொரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன்.  தனியாகப் போவதில்லை.  கூடவே ஓரிரு சிறுபத்திரிகை நண்பர்களும் இருப்பார்கள்.  அதிகம் காசு கிடைத்தால் குடிப்போம்.  அப்படி ஒருமுறை தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்குக் கூட விக்ரமாதித்யனுடன் சென்றிருக்கிறேன்.  அப்போது அஜிதன் நாலு வயதுப் பையன்.  ஜெயமோகன் வீட்டுக்கு எதிர் வீடு பிரம்மராஜன் வீடு.  பிரம்மராஜனும் ஜெயமோகனும் பேசிக் கொள்வதில்லை.  நாங்களும் பிரம்மராஜன் வீட்டுக்குப் போகாமலேயே காலையில் ஜெயமோகன் வீட்டில் சுடச் சுட இட்லி சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டோம். 

அப்படித் திரிந்து கொண்டிருந்தபோது திருநெல்வேலியில் ஒரு நண்பர் வீட்டில் மூன்று நாள் தங்கியதை மறக்க முடியாது.  வீடு என்பது ஒரு அறைதான்.  அதிலேயே படுக்கை, அதிலேயே சமையல், அதிலேயே ஒரு ஓரத்தில் குளியல்.  அறையிலிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலை எனக்குக் கொடுத்து விட்டு, நண்பரும் இரண்டு குழந்தைகளும் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொள்ள, நண்பரின் மனைவி அடுப்புக்கு அருகில் படுத்துக் கொண்டார்.  விறகு அடுப்புதான்.  கக்கூஸ் பொதுக் கக்கூஸ்.

நண்பர் ஒரு சிறுபத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். 

இப்படித்தான் கொழும்புக்கு அருகில் உள்ள பாதுக்க என்ற ஊரில் வசிக்கும் கே.கே. என்றும் சர்ப்பயா என்றும் அழைக்கப்படும் சிங்கள எழுத்தாளர் சமன் குமார வாழ்கிறார் என்று நினைக்கிறேன்.  அவரது அழைப்பில்தான் வரும் ஒன்பதாம் தேதி இலங்கை செல்கிறேன்.  போக்குவரத்து செலவு, சாப்பாடு எல்லாம் என் செலவுதான்.  தங்குவது மட்டும் கேகே வீட்டில். 

இங்கிருந்து உங்களுக்கு என்ன எடுத்து வரட்டும் என்று கேகேயிடம் கேட்டேன்.  ”நான் ஒரு காஃபி அடிக்ட், ஒரு நாளில் ஆறு ஏழு காஃபி குடிப்பேன்.  காஃபித் தூள் வாங்கி வாருங்கள்” என்றார். 

அதில் எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் ஏற்பட்டன.  இப்போதெல்லாம் காஃபி டிகாக்‌ஷன் வெளியிலிருந்தே வர ஆரம்பித்து விட்டன.  ஸ்விக்கியில் போட்டால் ஏழு நிமிடத்தில் வீட்டு வாசலில் நிற்கிறது டிகாக்‌ஷன்.  நாம் போடுவது போலவே டிகாக்‌ஷன் நன்றாகவும் இருக்கிறது.  ஃபில்டரில் காஃபித்தூளைப் போட்டு அதில் வெந்நீரை ஊற்றி, டிகாக்‌ஷன் வடிவதற்குப் பதினைந்து நிமிடம் காத்திருந்து… அந்த பேஜார் வேலையெல்லாம் இனி தேவையில்லை.  தயாராகக் கிடைக்கிறது ரெடிமேட் டிகாக்‌ஷன். 

ஆக, கேகேவுக்குத் தேவை இம்மாதிரி ரெடிமேட் டிகாக்‌ஷனா, அல்லது காஃபித் தூளா, அல்லது இன்ஸ்டண்ட் காஃபி போடுவதற்கான தூளா?  ரெடிமேட் டிகாக்‌ஷனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் காணும்.  என்னால் கேகேயின் வீட்டையும் வாழ்வையும் யூகிக்க முடிந்தது.  அதனால் அவரிடம் ஃப்ரிட்ஜ் இருக்கிறதா என்று கேட்டேன்.  நான் எதிர்பார்த்த பதிலே வந்தது.  கொரோனா காலத்தில் ஃப்ரிட்ஜை காயலாங்கடையில் விற்று விட்டேன் என்றார்.  காரணம் என்னவாக இருக்கும் என்பதை உங்களால் யூகித்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.  அப்படியானால் ரெடிமேட் டிகாக்‌ஷன் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

அநேகமாக திருநெல்வேலி நண்பர் வீட்டில் படுத்தது போல்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  கேகேவுக்கு மனைவி மற்றும் சிறு குழந்தைகள் எதுவும் இல்லை.  கயிற்றுக் கட்டிலும் இருக்காது.  தரையில் பாய் விரித்துத்தான் படுக்க வேண்டியிருக்கும்.  பாயில் படுத்து வெகுகாலம் ஆயிற்று.  எல்லாம் அனுபவம்தான்.  வீட்டில் அசௌகரியப்பட்டால் நீங்கள் ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று அரைமனதுடன் சொன்னார் கேகே.  அவருக்கு நான் அவருடனேயே தங்குவதுதான் விருப்பம்.  நானும் சரி என்று சொல்லி விட்டேன். 

சிங்கள மொழியின் முதன்மை எழுத்தாளராக அறியப்படுபவர் கேகே.  ஆனால் அவரும் அவருடைய மாணவர்களும் காபாலிகர்கள் போல் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  ஆனால் அவருடைய சில நண்பர்கள் இலங்கை அதிபர் ரணிலுக்கு வேண்டப்பட்டவர்கள். 

அங்கே சென்ற முறை சென்றது போல ஜாலி பண்ண முடியாது போல் தெரிகிறது.  நிகழ்ச்சி நிரல் அப்படி இருக்கிறது.  அதை கீழே தருகிறேன்.

ஒன்பதாம் தேதி மதியம் கொழும்பிலிருந்து 33 கி.மீ. தூரத்தில் உள்ள பாதுக்க செல்கிறேன்.  பாதுக்கவில்தான் கேகே வசிக்கிறார்.

ஒன்பதாம் தேதியும் பத்தாம் தேதியும் விவாதங்கள், உரையாடல்கள்.

11 நவம்பர் – காவ்யா தத்ஸர பாதுக்க வருகிறார்.  பத்து மணியிலிருந்து மூன்று மணி வரை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து பற்றி காவ்யா தத்ஸர என்னுடன் விவாதிக்கிறார். 

12 நவம்பர் – Balalaika Gallery Cafeஇல் இனோகா பள்ளியகுருவும் நானும் உரையாடல்.  காலை பத்து மணிக்குத் தொடங்கும்.  இனோகா என்னுடைய நான் லீனியர் சிறுகதைகளையும், அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடகத்தையும் ஆங்கிலம் வழியாக சிங்களத்தில் மொழிபெயர்த்தவர்.   இனோகா கண்டியைச் சேர்ந்தவர்.  தத்துவம் பயிலும் கல்லூரி மாணவி. 

உரையாடல் முடிந்து என் எழுத்து குறித்து தும்பலினா பேசுகிறார்.  தும்பலினா கேகேயின் புதல்வி. 

13 நவம்பர் – Gihan Sachintha, Mawbima என்ற சிங்கள செய்தித்தாளுக்காக என்னை நேர்காணல் செய்கிறார். 

இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே என்னைப் பற்றி கேகே இயக்கும் ஆவணப்படத்துக்காக கேகேவினால் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.

நவம்பர் 14, 15, 16 : ஆங்கில தினசரிகளுக்கான நேர்காணல். 

நவம்பர் 17: நதீகா பண்டாரவின் நாடகம் பார்ப்பதற்காக கொழும்பு செல்கிறோம்.  அன்றைய இரவு நாடகக் கலைஞர்களுடன் விருந்து.

நவம்பர் 18: ஓய்வு

நவம்பர் 19: திரும்பவும் பாதுக்க சென்று நதீகாவுடன் அவரது நாடகம் பற்றிய உரையாடல். 

பிறகு, நேநோ சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்படும். 

அதை அடுத்து, நதீகாவின் Peacock Egg நாவலிலிருந்து சில பகுதிகளை கேகே வாசிக்கிறார்.  வாசிப்பு சிங்களத்தில் இருக்கும்.   ஆங்கில மொழிபெயர்ப்பு: தும்பலினா. 

நவம்பர் 20: ஓய்வு

நவம்பர் 21: பாதுக்கவுக்கு அனுசூர வீரசிங்க வருகிறார்.  அவருடனான உரையாடல். 

நவம்பர் 22: கொழும்பு திரும்புதல்.

இடையில் ஓரிரு தினங்கள் சுஜித் அக்கரவத்தவுடன் உரையாடல், விவாதங்கள். 

கேகேயின் கவனம் முழுக்கவும் ஆவணப்படத்தை இயக்குவதிலேயே இருக்கும் என்று கூறினார்.  அதற்கான கேமராவையும் வாங்கிக் கொண்டு போகிறேன்.  வெறும் ஐந்தாயிரம்தான்.  என்னிடமே ஒரு ஆறு லட்சம் ரூபாய் பெறுமான ஒரு தரமான மூவி கேமரா இருக்கிறது.  ஆனால் என்னால் அவ்வளவு கனத்தைத் தூக்கிச் செல்ல இயலாது.  அப்படியே சிரமப்பட்டு தூக்கிச் சென்றாலும், பாதுகாப்புச் சோதனைகளின்போது அதைப் பிரித்து, கழற்றி, மறுபடியும் இணைக்கும் வேலையெல்லாம் என்னால் செய்ய இயலாது.  அதனால் இந்த அஞ்சாயிரம் ரூபாய் சாதா கேமராவையே எடுத்துச் செல்கிறேன்.  இதில் படம் எடுத்தால் அம்பது வருடங்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்த படு மட்டமான செக்ஸ் படங்களின் தரத்தில்தான் இருக்கும் என்றும், இருந்தாலும் நமக்கு உள்ளடக்கம்தானே முக்கியம் என்றும் சொன்னார் கேகே. 

கொழும்பிலும் கொழும்பின் சுற்று வட்டாரங்களிலும் வசிக்கும் நண்பர்கள் நதீகா பண்டாரவின் நாடகத்துக்கு நவம்பர் 17 அன்று வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.  விளம்பரம் நேற்றைய தினம் நம்முடைய தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.  அவசியம் அந்த நாடகத்தைப் பார்க்க அழைக்கிறேன்.