பெட்டியோ நாவலுக்கான முதல் மதிப்புரை அந்த நாவலை யாருக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கிறேனோ அவரிடமிருந்தே வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சித்த மருத்துவரும் என் நண்பருமாகிய பாஸ்கரன் பெட்டியோவுக்கு ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். எந்நேரமும் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இத்தனை பெரிய நாவலைப் படிக்க எங்கே நேரம் இருக்கும், ஒரு வருடத்தில் படியுங்கள் என்றே சொல்லியிருந்தேன். அவரோ ஓரிரு தினங்களிலேயே படித்து மதிப்புரையும் எழுதி விட்டார்.
அவந்திகா பொதுவாக யாரையும் எதையும் பாராட்ட மாட்டாள். அப்படி ஒரு நல்ல குணம். நேற்று அவள் என்னைப் பார்த்து “நீ இப்போதெல்லாம் ரொம்ப உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறாய். பாஸ்கரனின் சித்தா மருந்துகள் உன்னைப் பெரிதும் மாற்றியிருப்பது நன்றாகவே தெரிகிறது” என்றாள். பாஸ்கரனுக்கு இதை விடப் பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.
நண்பர்களே, இன்றைய உடல் நலப் பிரச்சினையில் தலையாயது, சர்க்கரை வியாதி, இதய ரத்தக் குழாயில் அடைப்பு, டிப்ரஷன், தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்றவைதான். இதற்கெல்லாம் சித்த வைத்திய முறையில் பிரமாதமான மருந்துகள் உள்ளன. திரும்பத் திரும்ப சொல்கிறேன். பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஊர் உலகமெல்லாம் நான் சொல்வதைக் கேட்டு பாஸ்கரனை அணுகுகிறார்கள். என் நெருங்கிய நண்பர்கள் என் பேச்சு கேட்பதில்லை. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிறார்கள். விதியை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்று விட்டு விட்டேன்.
கீழே வருவது பெட்டியோ நாவல் பற்றி பாஸ்கரனின் மதிப்புரை:
ஓர் எளிமையான சித்த மருத்துவனுக்கு இதை விட வேறென்ன பெருமை கிடைத்து விடப்போகிறது?! என் இனிய நண்பரும் பெருமதிப்புக்குரிய எழுத்தாளருமான சாரு நிவேதிதா எழுதி, என்.எஃப்.டி. எனப்படும் அதிநவீன பதிப்பக உத்தியுடன் வெளியிடும் ‘பெட்டியோ’ நாவலை எனக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்! நாவலின் ஒருசில பக்கங்களை மட்டும் சுடச்சுட படித்துப் பார்க்கும் அனுபவம் பெற்றேன்.
‘என் இனிய நண்பரும் சித்த மருத்துவருமாகிய பாஸ்கரனுக்கு…’ என நாவலின் முதல் பக்கத்தில் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருப்பதால் அதனைப் பார்த்து மகிழும் பரவசம் எனக்குக் கிடைத்தது. முழுநாவலையும் முதலில் படிக்கும் உரிமையும் பெருமையும் அதனை விலை கொடுத்து வாங்கும் முதல் வாசகருக்குத் தான்!
பெட்டியோ என்றால் சிங்களத்தில் செல்லம் என்று நாவலுக்கான பெயர் அறிமுகத்திலேயே ஆயுபவன் சொல்லி இலங்கைக்கு அழைத்துச் சென்று விடுகிறார் சாரு. பெருமாள், வைதேகி, மோகன், தமலி, கொக்கரக்கோ என ஒவ்வொருவரையும் தொட்டுத்தொடர வைத்துவிடுகிறார். நதிநதினி.. பெயரே பெரும்போதையூட்டுகிறது!
வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் நினைவலைகளில் மோதித் திமிறும் உள்நாட்டு அனுபவப் பதிவுகள் போல குமார் மெஸ், நாகேஸ்வரராவ் பார்க், ஏன்.. பொள்ளாச்சி அருண் தோப்பில் குடித்த கள்ளும் கூட ‘பெட்டியோ’வில் அப்பிக்கிடக்கிறது. வாசகனுக்கு போதையூட்டக் காத்திருக்கிறது!
சீரும் சிறப்பும் கொண்ட சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கையையும், சித்த மருத்துவத்தின் சிறப்புக்களை உலகறியச் செய்யும் நோக்கத்தையும் கொண்டிருக்கும், அதற்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் சாரு நிவேதிதா ’பெட்டியோ’விலும் அதைச் செய்திருக்கிறார் என்பது பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.
நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் ‘பெட்டியோ’வில் குங்குமாதித் தைலம், நல்பமராதி தைலம், குருபாத தாசர் அருளிய குமரேச சதகத்தில் குறிப்பிடப்படும் சுகந்தாதி எண்ணெய்க்கும் இடம் கொடுத்து சித்த மருத்துவத்தை சிறப்பித்திருக்கிறார். அகத்தியரும், புற்று மகரிஷியும், போகரும், திருமூலரும், பதினென் சித்தர்களும் சாருவைக் கட்டியணைப்பார்கள்!
சரீர சேர்க்கைக்கு சாருவின் எழுத்துக்கள் கொடுத்திருக்கும் விளக்கம் மரண ருசி! வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்ப வெளி அது! அந்த வார்த்தைகளைப் படித்ததும், நாள் முழுவதும் சாருவின் ஒப்புமைச் சொல்லாடலை அசை போட்டு ரசித்துக்கொண்டே இருந்தேன்! நலம்நாடியாக அறிமுகமாகி, நலம் விரும்பியாக அடுத்துக்கடந்து, இப்போது நல்ல நண்பராகவும் நெருங்கியிருக்கும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை அவரது அறிமுகத்துக்குப் பின்னர்தான் தேடிப்படிக்கிறேன்.
’‘பெட்டியோ’வின் பக்கங்கள் எனக்குக் கொடுத்த அனுபவம் அலாதியானது. சாரு நிவேதிதா எனும் எழுத்தாளனை ஏன் அவரது வாசகர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள் என்ற சூட்சுமம் எனக்கு இப்போது முழுமையாகப் புரிகிறது. வானத்தைக் கிழித்துக்கொண்டு கோட்டும் மழை நீர் போல வளைந்தும் நெளிந்தும் வெகுண்டும் குளிர்ந்தும் வேகவேகமாகத் தன் வழியில் தானே பயணிக்கிறது அவரது நடைப்பிரவாகம்! தான் துய்க்கும் உணர்வுகளையெல்லாம் தன்னகத்தே அள்ளிக்கொண்டு பயணிக்கிறது! வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வுக் கம்பளியை அப்படியே போர்த்துகிறது!
நானெல்லாம் தொழில் நிமித்தமாகவும் தோழமை நிமித்தமாகவும் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிமித்தமாகவும் பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன். போன வேலையை முடித்துக் கொண்டு பூமராங் பந்து போல சொந்த ஊருக்குத் திரும்பி விடுவேன். வாகனத்தில் ஏறிவிட்டால் பத்து நிமிடங்களில் தூங்கிப்போவேன். ஆனால், ஒரு எழுத்தாளனின் பயணம் என்னவெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறது என்பதை வியந்து ரசித்து யோசிக்க வைக்கிறது சாருவின் ‘பெட்டியோ’ பக்கங்கள்!
மூன்று வாரங்கள் இலங்கைக்குப் பயணப்பட்டார்.. ‘பெட்டியோ’ பிறந்திருக்கிறது. பத்து நாட்கள் ஜப்பான் போய் வந்தார்.. ‘ரொப்பங்கி இரவுகள்’ கர்ப்பத்தில் இருக்கிறது. இப்போது ‘பெட்டியோ’ விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தென்னமெரிக்கப் பயணத்திற்கு திட்டமிடுகிறார். எல்லைகள் எல்லாம் கடந்து எல்லா நாடுகளுக்கும் போய் வாருங்கள் சாரு சார். அள்ளிக்கொண்டு வாருங்கள் அத்தனை அனுபவங்களையும். வாசகனாக காத்திருப்பேன். ஆண்டுகள் நூறு கடந்தும் நீங்கள் வாழ பிரார்த்திக்கும் அன்பு நண்பனாகவும், என்றும் உங்கள் ஆரோக்கியம் காக்கும் நல்ல மருத்துவனாகவும் நானிருப்பேன். வேறென்ன சொல்ல!
அழியா அன்புடன்…
சித்த மருத்துவன் பாஸ்கரன் 08.11.2023