பெட்டியோ நாவலின் விற்பனை தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் நான் என்ன சாதனை செய்தாலும் அது இங்கே செய்தி இல்லை என்பதால் நானேதான் வழக்கம்போல் என் தளத்தில் அந்தச் செய்தியை வெளியிட வேண்டியிருக்கிறது.
முதலில் கீழே உள்ள விவரங்களைப் பாருங்கள்.
இதுவரை பெட்டியோ நாவல் பதினோரு பிரதிகள் என்.எஃப்.டி.யில் விற்பனை ஆகியிருக்கின்றன. முதல் பிரதியாக இரண்டாம் எண்ணைக் கொண்ட பிரதி 1260 டாலர், அதாவது, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது. வாங்கியவர் யார் என்று தெரியாது. இருபத்தைந்தாம் எண்ணைக் கொண்ட பிரதியை என் நண்பர் வாங்கினார். 1231 டாலர். ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய். இந்த இரண்டையும் தவிர ஒன்பது பேர் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். பத்து என்றால் பதினொன்று கூட போகும். அன்றன்றைக்கான சந்தை நிலவரத்தைப் பொருத்தது.
என்னைப் பொருத்தவரை பெட்டியோ நாவல்தான் என் நாவல்களில் ஆகச் சிறந்ததாகக் கருதுகிறேன். அதில் உள்ள தீவிரம் மற்ற என்னுடைய நாவல்களில் உள்ளதை விட அதிகம். ஸீரோ டிகிரியை விடவும் அதிகம். குறிப்பாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு ஆறாம் தேதி அம்பாறை மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமத்தில் நடந்த படுகொலைகளைப் பற்றிய பெட்டியோ நாவலின் கதைகளைப் படித்தால் வயிறு கலங்கிப் போகும்.
அதேபோல் பெட்டியோவில் வரும் காதல், காமம் ஆகிய பகுதிகளும் ஒருவரைக் கலங்கடிக்கக் கூடியவை.
பெட்டியோ போன்ற ஒரு நாவல் ஒரு மொழியில் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்க வேண்டும். விற்கக் கூடிய சூழல் இருந்தால் இப்படி பத்து பிரதிகளும் பதினோரு பிரதிகளுமாக நிற்காது. ஆனால் பாருங்கள், பதினோரு பிரதியிலேயே விற்பனை மூன்று லட்சம் ரூபாயைத் தாண்டி விட்டது. நேற்றுதான் பணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இதுதான் நான். பயணத்துக்குப் பணம் தேவை என்றால், அதற்கான திட்டமிடுதலைச் செய்வேன். உங்களுக்கும் பணம் தேவை என்றால் அதற்கேற்றபடி திட்டமிடுங்கள். அதற்கேற்றபடி உழையுங்கள். அஞ்சி நடுங்காதீர்கள். நான் இப்போதும் பதினைந்து மணி நேரத்துக்கு மேல் உழைக்கிறேன்.
பத்து கோடி மக்கள் தொகையில் வெறும் ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்கும் என்ற நிலை இருப்பதால்தான் இப்படி பெட்டியோவை என்.எஃப்.டி.யில் பத்தாயிரம் ரூபாய்க்கும் லட்சம் ரூபாய்க்கும் விற்கிறேன். இப்போது என் பெட்டியோ கிட்டத்தட்ட வான்கோவின் ஓவியம் போல் ஆகி விட்டது. வான்கோவின் ஓவியத்தை நீங்கள் வாங்கித் தின்னும் பஜ்ஜியைச் சுற்றியிருக்கும் காகிதத்தில் கூட காணலாம். ஆனால் வான்கோவின் மூலப் பிரதி யாரிடம் இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம். உங்களிடம் இருக்கும் பெட்டியோ பிரதியில் உள்ள எண் தான் உங்கள் பிரதியின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
காலத் தாமஸ் எழுதிய நாவல் நூறு பிரதிகள்தான் அச்சடிக்கப்பட்டன. The Testament of the Dead Daughter. அந்தோனின் ஆர்த்தோவின் காதலி. மூன்று மாதங்கள் முயன்று அந்த நாவலின் புகைப்படப் பிரதியை நான் அடைந்தேன். லண்டன், பாரிஸ், யு.எஸ். என்று பல இடங்களிலும் என் நண்பர்கள் அந்தப் பிரதியைத் தேடினார்கள். கடைசியில் பாரிஸில் ஒரு நூலகத்தில் கிடைத்தது. நாவலின் புகைப்படப் பிரதியில் 89 என்ற எண் இருந்தது. நூறு பிரதிகளில் எனக்குக் கிடைத்த புகைப்படப் பிரதியின் மூலம் 89ஆவது பிரதி. அப்படியானால் என்னிடம் காலத் தாமஸ் நாவலின் 89ஆவது பிரதி இருக்கிறது என்று சவடால் அடிக்க முடியுமா? என்னிடம் இருப்பது நகல். மூலப் பிரதி அல்ல.
பெட்டியோ ஒரு எழுபத்தைந்து பிரதிகளாவது விற்றால்தான் உல்லாசம் உல்லாசம் நாவலை வெளியிட முடியும். பெட்டியோவை நான் அச்சடித்த நூலாக பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் பலர் என்னை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள். அத்தனை விமர்சனங்களைக் கொண்டிருந்தது பெட்டியோ. சிங்களத்தில் வெளிவந்தால் சிங்கள மக்களுக்குப் பிடிக்கும்; ஆனால் சிங்கள அரசு அந்த நாவலைத் தடை செய்யக்கூடும். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
பெட்டியோவை எழுத நான் எத்தனையோ சிரமங்களை மேற்கொண்டேன். தென் இலங்கை தவிர மற்ற பகுதிகள் அனைத்தையும் சுற்றினேன். ஒரு மாதம் தங்கி நூற்றுக்கணக்கானவர்களிடம் பேசினேன். பல புத்தகங்களைப் படித்தேன். என் மொழியையும் நடையையும் செழுமைப்படுத்திக் கொள்ள பியர் க்யூத்தா (Pierre Guyotat) போன்ற பலரையும் வாசித்தேன். காலத் தாமஸின் ஒரே ஒரு நாவலை மூன்று மாதங்கள் தேடினார்கள் என் நண்பர்கள். என் இலங்கைப் பயணத்துக்கும் ஏராளமாக பணம் செலவாயிற்று. ஆனால் இத்தனை சிரமங்களை மேற்கொண்டு எழுதிய நாவலை இருநூறு ரூபாய்க்கு வாங்கிப் படித்து விட்டு என்னைத் தாக்குவீர்களா, நண்பர்களே?
என்னை விமர்சிப்பதாக இருந்தால் நீங்களும் சிரமம் மேற்கொள்ளுங்கள். பணம் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்து விட்டு விமர்சியுங்கள்.
என் வாசக நண்பர் ஒருவர் மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புகிறார். நான் அவருக்கு எழுதினேன். ”நீங்கள் ஒன்றரை வருடத்துக்குப் பணம் அனுப்ப வேண்டாம். சேர்த்து வைத்து பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்குங்கள்.” அதற்கு அவர் எழுதினார், இந்த ஐநூறு வேறு, இதையும் தவிர நான் பத்தாயிரம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று.
ஆனாலும் என் நெருங்கிய நண்பர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருமே வாங்கவில்லை. அப்படி ஒரு உள்வட்ட நண்பரை இன்று போன் செய்து அழைத்துக் கேட்டேன். வாங்கி விட்டீர்களா? கேட்டதற்குக் காரணம், அவர் எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அனுப்புபவர். அதனால் உரிமையுடன் கேட்டேன். அவர் இரண்டு நாட்களாக வினித்தைப் பிடிக்க முடியவில்லை, இன்று வாங்கி விடுகிறேன் என்றார். அப்படிப் பிரச்சினை உள்ளவர்கள் பணத்தை எனக்கு அனுப்புங்கள். நான் வினித்தைத் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கி அனுப்புகிறேன்.
மேலும் சில நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸப்பில் மெஸேஜ் அனுப்பினேன். உடனே வாங்கி விடுகிறேன் என்று சொல்லி இதயம் படத்தை அனுப்பினார்கள். சிவப்பு நிற இதயக் குறி. இன்று அந்த நண்பர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் செய்யப் போகிறேன். மீண்டும் இதயக் குறி வரும். பார்ப்போம். இவர்களெல்லாம் எனக்குப் பண உதவி செய்து வருபவர்கள். ஏனோ தெரியவில்லை, என்.எஃப்.டி. மூலம் பெட்டியோவை வாங்குங்கள் என்றால் சிவப்பு நிற இதயக் குறி அனுப்புகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து ஒருத்தர் கூட வாங்கவில்லை. வளன் மட்டும் அடுத்த மாதம் வாங்கி விடுகிறேன் சாரு என்று சொன்னான். மற்றவர்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. இலங்கையை விட அமெரிக்கா ஏழை நாடா என்ற சந்தேகமே வந்து விட்டது எனக்கு. இலங்கையில் ஒரு குமாஸ்தாவின் சம்பளமே இந்தியப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய்தான். இங்கே சென்னையில் வீட்டுப் பணிப்பெண்களின் சம்பளம் பத்தாயிரம். அமெரிக்கா இலங்கையை விட வறுமையில் இருக்க வேண்டும். ஒருத்தர் கூட பெட்டியோவை வாங்கவில்லை. தயங்காமல் எனக்கு நூறு டாலரை அனுப்புபவர்கள் கூட வாங்கவில்லை என்பதுதான் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
சிங்கப்பூர் நண்பர் ஒருவருக்கும் வாட்ஸப் மெஸேஜ் அனுப்பினேன். பதிலுக்கு வந்தது சிகப்பு நிற இதயக் குறி.
பெட்டியோவுக்கு நீங்கள் கொடுக்கும் பணம்தான் என் தென்னமெரிக்கப் பயணத்துக்கான நன்கொடை. பெட்டியோவை வாசிக்கும்போது உணர்வீர்கள், அது விலை மதிக்க முடியாத பெட்டகம் என்று.
பெட்டியோவை வாங்க விரும்புபவர்கள் வினித்தையோ என்னையோ தொடர்பு கொள்ளலாம். வினித்தின் தொலைபேசி எண்: +91 84384 81241
என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com