Vagina Monologues என்ற நாடகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். அது ஒரு மட்டமான நாடகம். நாடகமே இல்லை. ஆனால் அதன் பேசுபொருளாலும் தலைப்பாலும் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. நம் பெருமாள் முருகன் மாதிரி. ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) அப்படிப்பட்டவர் அல்ல. உண்மையான பெண்ணியவாதி. Cunt என்ற பெயரிலும், Suck என்ற பெயரிலும் பத்திரிகைகள் நட்த்தியவர். அப்பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் The Madwoman’s Underclothes என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. கேத்தி ஆக்கர் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பை கேத்தி ஆக்கருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஜெர்மன் க்ரேர் எழுத மட்டும்தான் செய்தார். கேத்தி ஆக்கர் தன் எழுத்தை வாழ்ந்தார். ”என் மாணவி மோட்டார் பைக் ஓட்டும்போது நான் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு ஆர்கஸம் வந்தது” என்று எழுதினார். ”ஒரு டில்டோ போதும், எனக்கு ஆண்களே தேவையில்லை” என்று எழுதினார்.
கேதரீன் ப்ரேயா (Catherine Breillat) என்ற ஃப்ரெஞ்ச் திரைப்பட இயக்குனர் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். சினிமா பற்றிய என் தொகுப்பு ஒன்றில் அது இருக்கிறது. அவருடைய ரொமான்ஸ் என்ற படத்தை இதுவரை பார்த்திருக்கவில்லையெனில் உடனே பாருங்கள்.
இப்படியெல்லாம் படிக்கிறோம். பார்க்கிறோம். ஆனால் அப்படி ஒரு பெண் நம் கண் முன்னே வந்தால் என்ன செய்வோம். அப்படி ஒரு பெண்ணை கேகேயின் குழுவில் சந்தித்தேன். அவர்தான் நதீகா பண்டார. சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், கவிதை, நாவல் என்று பலவும் எழுதியிருக்கிறார். எதுவும் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அவருடைய Wetland, உல்லாச விஷாத ஆகிய இரண்டு நாடகங்களையும் பார்த்தேன். வெட்லாண்டை ஒளிப்பதிவாகவும், உல்லாச விஷாதவை நேரடியாகவும்.
நான் ஏன் நாடகத்தின் பக்கம் போகவில்லை என்று எழுதியிருக்கிறேன். என் நாடகத்தில் பலரும் ஆடை அணிந்திருக்க மாட்டார்கள் என்பதே நான் நாடகத்தின் பக்கம் தலை காட்டாததற்குக் காரணம். வெட்லாண்டில் நதீகா முழு நிர்வாணமாக மேடையில் வருகிறாள். உல்லாச விஷாதவில் முக்கால் நிர்வாணம். இரண்டுமே யோனி பற்றிய நாடகங்கள்.
நதீகாவின் ரத்து சப்பாத்து (சிவப்புக் காலணிகள்) என்ற திரைப்படம் எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு இதுவரை சுமார் ஐநூறு பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. நேரடியாக அல்லாமல் மறைமுகமாகத் தடை செய்யப்பட்டிருக்கும் திரைப்படம். தனிப்பட்ட முறையில் பார்த்துக் கொள்ளலாம்.
மூன்று ஆண்கள். ஒரு பெண். நதீகாதான் அந்தப் பெண். நால்வருமே படம் முழுவதும் நிர்வாணம்தான். ஒரு காட்சியில் ஒருவன் நதீகாவின் கை கால்களைக் கட்டிப் போட்டு புணர்கிறான். காட்சி அப்படியே பட்டவர்த்தனமாகக் காண்பிக்கப்படுகிறது. ஒரு காட்சியில் ஒருவன் நதீகாவின் முன்னே கரமைதுனம் செய்கிறான். காட்சிகளில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அந்த நடிகர்கள் அத்தனை பேருமே நதீகாவின் நாடகக் குழுவைச் சேர்ந்தவர்கள். என்னோடு சேர்ந்து மது அருந்துபவர்கள். என் நண்பர்கள். கேகேயின் மாணவர்கள்.
கேதரீன் ப்ரேயாவின் ரொமான்ஸை சிங்களத்தில் காண்பது போல் இருந்தது. ஆனால் நதீகாவுக்கு கேதரீன் ப்ரேயா பற்றியெல்லாம் தெரியாது. சர்வதேசப் புகழ் பெற்றிருக்க வேண்டிய பெண் இலங்கையின் ஒரு கிராமத்தில் விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். சர்வதேசத் திரைப்படங்களைக் காண்பதற்கு அந்த கிராமத்தில் இண்டர்நெட் வசதி கூட இல்லை. நதீகாவின் தகரக் கொட்டகையிலிருந்து அவளால் யாருடனும் தொலைபேசியில் கூடப் பேச முடியாது. தொலைபேசிக்கான சிக்னல் இல்லாத கிராமம்.
உன் திரைப்படத்தை சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தால் இந்நேரம் நாற்பது நாடுகளைச் சுற்றி வந்திருக்கலாமே என்றேன். அனுப்புவதற்கு நுழைவுக் கட்டணம் கட்ட வேண்டும், அதற்குப் பணம் இல்லை என்றார் கேகே. இந்த உரையாடல் நடப்பதற்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ஓர் உயர் அரசு அதிகாரி ஒரு படகுக் காரில் வந்து கேகேயை சந்தித்து விட்டுப் போயிருந்தார். அவர் கிளம்பிச் சென்ற ஐந்து நிமிடத்தில் கேகே என்னிடம், ”சாரு, ஒரு சின்ன உதவி வேண்டும், தவறாக நினைக்க வேண்டாம், ஒரு நூறு ரூபாய் இருந்தால் கொடுங்கள், டீத்தூள் வாங்கி எல்லோரும் ப்ளெய்ன் டீ அருந்தலாம்” என்றார். இலங்கை நூறு நம்மூர் இருபத்தைந்துக்கு சமம்.
அடப் போய்யா என்று சொல்லி விட்டு, நதீகாவும் நானும் போய் இரண்டு டஜன் பியர் போத்தல்களை வாங்கி வந்தோம்.
சரி, இப்படி வாழ்பவர்கள் எப்படி திரைப்படம் எடுக்கிறார்கள், எப்படி நாடகம் போடுகிறார்கள்?
பிச்சை எடுத்துத்தான்.
***
நதீகா பண்டாரவின் இயக்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு நகரில் நான் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் என்ற நாடகம் சிங்களத்தில் பிரம்மாண்டமான முறையில் அரங்கேற இருக்கிறது.
தமிழின் முக்கியமான எழுத்தாளராகிய நான், தமிழில் எழுதிய நாடகத்தைத் தமிழ்நாட்டில் அரங்கேற்ற முடியவில்லை. கேரளத்திலும் முடியவில்லை. கர்னாடகாவிலும் முடியவில்லை. நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதிலிருந்து சிங்களத்தில் மொழிபெயர்த்து அதை அரங்கேற்றம் செய்ய இருக்கிறார்கள்.
”பிரம்மாண்டமான முறையில்” என்று ஏன் சொன்னேன்? நதீகாவின் திரைப்படமும் நாடகங்களும் அதிகம் வசனம் இல்லாதவை. உல்லாச விஷாதவில் வசனமே இல்லை. ஆர்த்தோவின் நாடகக் கோட்பாடு அப்படிப்பட்டதுதான். ஆனால் ஆர்த்தோ குறித்த என் நாடகம் வசனங்களால் ஆனது. அதனால் அது பிரம்மாண்டமான முறையில்தான் அரங்கேற்றப்பட வேண்டும். ஒளியமைப்பும் அரங்க அமைப்புகளும் பிரம்மாண்டமாக இருந்தால்தான் வசனங்களால் ஆன அந்த நாடகம் சரியாக வரும்.
அப்படி அரங்கேற்றுவதற்குப் பணம் வேண்டும். சிங்கள மக்களிடம் நிதி திரட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என் தமிழ் வாசகர்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இலங்கைத் தமிழர்கள் பணம் தர மாட்டார்கள். அது தெரியும். சிங்களவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
நான் கேகே அல்ல. இந்த விஷயத்தில் நானும் கேகேயும் எதிரெதிர் துருவங்கள்.
உல்லாச விஷாத நாடகத்தை எழுபது பேர் பார்த்தார்கள். ஒருவர் கூட டிக்கட் வாங்கவில்லை. ஒருவர் கூட நன்கொடை தரவில்லை. என் நாடகம் அப்படி இருக்காது. கொழும்பில் தெருத்தெருவாக நோட்டீஸ் கொடுத்து, கொழும்பில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் நின்று டிக்கட்டை விற்றுத்தான் ஆர்த்தோ நாடகத்தை அரங்கேற்றுவேன்.
கேகே ஒரு பிரமாதமான நடிகர். அவர் பேசுவதே நாடகீயமாகத்தான் இருக்கும். ஆர்த்தோவும் அப்படித்தான் பேசுவார். என் ஆர்த்தோ நாடகத்தில் ஆர்த்தோ பேசும் வசனங்களை கேகே பேசிக் காண்பித்தார். அச்சு அசல் ஆர்த்தோ. ஆர்த்தோவைப் போலவே கேகேவுக்கும் முன்பல் கிடையாது. அதே உணர்ச்சி. அதே பாவம். அதே உன்மத்தம். ஆர்த்தோ நாடகத்தில் கேகேதான் ஆர்த்தோவாக நடிக்கிறார். பாதுக்கவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிமலை என்ற நதிக்கரையில் அமர்ந்து கேகே என்னுடைய ஆர்த்தோ நாடகத்தின் பாதிப் பகுதியை வாசித்து நடித்துக் காட்டிய அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க இயலாது.
நாடகத்தைப் படித்து விட்டு நதீகா சொன்னாள், இந்த நாடகம் எங்களுடையது. இது எங்கள் வாழ்க்கை. ஒரே வித்தியாசம், எங்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கவில்லை.
அதற்குப் பதிலாகத்தான் விறகு அடுப்பைக் கொடுத்திருக்கிறார்களே என்றேன்.
ஜூன் மாதம் ஆர்த்தோ நாடகம் கொழும்பில் அரங்கேறும். கேகேதான் ஆர்த்தோ.
உல்லாச விஷாத நாடகம் கொழும்பில் நடந்த போது ஒரு தமிழர் கூட வரவில்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம். தமிழில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு சிங்களத்தில் அரங்கேற்றம் செய்யப்பட இருக்கும் என்னுடைய ஆர்த்தோ நாடகத்துக்கு எத்தனை தமிழர்கள் வருகிறார்கள் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்தே என் நண்பர்கள் ஒரு முப்பது பேர் வருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் மாதத்தில் ஒரு சனிக்கிழமையை அதற்காக ஒதுக்கி வையுங்கள். தேதியைப் பிறகு சொல்கிறேன்.