உல்லாசம், உல்லாசம்… நாவலை ஆறு ஏழு நண்பர்களுக்கு வாசிக்க அனுப்பி வைத்தேன். இரண்டு பேரைத் தவிர வேறு யாரிடமிருந்தும் தகவல் இல்லை. சிலரைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். அவர்களுக்கு நேரம் இல்லை. பொதுவாக ஸ்ரீராம் உடனடியாகப் படித்து கருத்து தெரிவித்துவிடுவார். அவரிடமிருந்தும் தகவல் இல்லை. முதல் நண்பர் உல்லாசம், உல்லாசம்… பெட்டியோவை விட பிரமாதமாக வந்திருக்கிறது என்றார். உற்சாகமாக இருந்தது. இரண்டாவது நண்பர், ஒரு நல்ல சப்ஜெக்டை வீணாக்கி விட்டீர்கள், நாவலில் tranquility இல்லை, அது இருந்திருந்தால் நாவல் வெற்றி பெற்றிருக்கும் என்று எழுதியிருந்தார். இதே வார்த்தைகளில் அல்ல. நீண்ட கடிதம். அதை வெளியிட்டு நானும் ஒரு பதில் எழுதினால் அது இலக்கிய வாசகர்களுக்குப் பெரும் விருந்தாக இருக்கும்.
இதுவரை நான் இரண்டு நாவல்களைத்தான் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்து கருத்து கேட்டிருக்கிறேன். எக்ஸைல். இப்போது உல்லாசம், உல்லாசம்… எக்ஸைலை நான் என் உள்வட்ட நண்பர்களிடம் கொடுத்தேன். பத்து பேர். அந்தப் பத்து பேர்தான் என் வாசகர் வட்டத்தின் தூண்கள். அதில் அராத்துவும் அடக்கம். அந்தப் பத்து பேருமே எக்ஸைல் ஜெயமோகன் எழுதியதுபோல் உள்ளது என்றார்கள். அதை விட பயங்கரமான தாக்குதல் வேறு இல்லை. ஆனாலும் நான் சோர்வடையவில்லை. கோபப்படவில்லை. அவர்கள் கருத்து கூறிய பிறகு எங்கெல்லாம் பலஹீனமாக இருக்கிறது, அதை நீக்கி விடலாம் என்று சொன்னார்களோ, அந்தப் பகுதிகளை மேலும் விரிவாக எழுதி பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் நீக்கச் சொன்ன பகுதிகளை மேலும் விரிவாக்கினேன். ஏனென்றால், எனக்கு நான் என்ன செய்கிறேன் என்று மிக நன்றாகத் தெரியும். உல்லாசமும் அப்படித்தான். அநேகமாக இனிமேல் அராத்துவைத் தவிர வேறு யாரிடமும் என் நாவலை வாசிக்கக் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். முக்கியமான காரணம், யாருக்கும் நேரம் இல்லை. அதனால் மற்றவர்களின் நேரத்தை எடுத்துக் கொள்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. இன்னொரு காரணம், அப்படி வாசிக்கக் கொடுத்து அவர்கள் கூறும் அபிப்பிராயம் என்னுடைய இயல்பை மாற்றி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. சரியோ தவறோ, மற்றவர்களுக்காக நம் இயல்பிலிருந்து மாறிவிடக் கூடாது இல்லையா? நான் மற்றவர்களிடம் நாவலை முன்கூட்டியே தருவது நாவலை இன்னும் செழுமைப்படுத்த முடியுமா என்று பார்ப்பதற்காகத்தான். ஆனால் நாவலே தேறாது, தண்டம் என்று கருத்து வந்தால் அது என் நாவலை செழுமைப்படுத்தாதது மட்டும் அல்ல, என் எழுத்து இயக்கத்தையே கொஞ்சம் தடுமாறச் செய்யலாம். அதாவது, நேராகத் தடையின்றி ஓடுவதற்கும், குறுக்கே கம்புகளை வைத்து ஓடச் செய்யும் தடை ஓட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?
இன்னொரு விஷயமும் இருக்கிறது. Pierre Guyotatவின் நாவல்களைப் போல் ஃப்ரெஞ்சில் எழுதப்பட்டதே இல்லை. புனைவெழுத்தின் உச்சம் என்று ரொலாந் பார்த் சொல்கிறார். ஆனால் க்யூத்தாவின் இரண்டு நாவல்களையுமே என்னால் பத்து பக்கத்துக்கு மேல் வாசிக்க முடியவில்லை. ஆனாலும் ரொலாந் பார்த் சொல்கிறாரே என்று முக்கி முக்கிப் படித்து முடித்தேன். உலக அளவிலேயே பியர் க்யூத்தாவின் நாவல்களைப் படித்த மூன்று பேரைத்தான் கேள்விப்படுகிறேன். ஒன்று, அவரை மொழிபெயர்த்தவர். இரண்டு, முன்னுரை கொடுத்தவர். மூன்று, ரொலாந் பார்த். நான்காவது நான். பியர் க்யூத்தாவின் எழுத்தில் ட்ராங்க்விலிட்டி என்பது மருந்துக்குக்கூட கிடையாது. மார்க்கி தெ ஸாத், ஜார்ஜ் பத்தாய், ஜார்ஜ் பெரக், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றவர்களிடம் ட்ராங்க்விலிட்டி கொஞ்சமும் கிடையாது. எனவே ஜார்ஜ் பத்தாயின் மதாம் எத்வார்தா, மை மதர் ஆகிய இரண்டு நாவல்களையும் வாசித்தவர்களுக்கே உல்லாசம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பெட்டியோவை விட உல்லாசம் பிரமாதம் என்று சொன்ன நண்பர் ஜார்ஜ் பத்தாயைப் படித்ததில்லை. பார்க்கலாம், வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று.