பெட்டியோ – என்.எஃப்.டி. & அச்சுப் புத்தகம்: ஒரு விளக்கம்

பெட்டியோ நாவல் அச்சுப் புத்தகமாக வராது, என்.எஃப்.டி.யில் மட்டுமே வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகமாக வருகிறது. இது என்னுடைய நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று காயத்ரியும் சீனியும் தெரிவித்தார்கள். அச்சுப் புத்தகமாக வர வேண்டாம் என்பது இருவரின் கருத்து. எப்போதும் சீனி சொல்வதையே கேட்கும் நான் சில சமயங்களில் அவர் பேச்சையும் மற்றும் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மாதிரி ஒரு நிலை இப்போது. நான் என்.எஃப்.டி.யில் நூறு பேர் வாங்குவார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால், பி.டி.எஃப்.பில் விற்றதற்கே ஆறு லட்சம் கிடைத்தது. உங்களால் முடிந்ததை அனுப்புங்கள் என்று எழுதியும்
ஆர்த்தோ நாடகத்துக்கு ஆறு லட்சம் கிடைத்தது. ஆனால் என்.எஃப்.டி.யில் இருபது பிரதி மட்டுமே விற்றதற்கு ஒரே காரணம், அதன் தொழில்நுட்பம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அது ஒன்றுமே இல்லை. பணத்தை எரித்ரியமாக மாற்றி வாங்க வேண்டும். அதற்காக உங்களுக்கு ஒருசில ஓடிபி எண்கள் வரும். நம் நண்பர்கள் சலித்துப் போய்விட்டார்கள். இதைவிட நீங்கள் பிடிஎஃப்பாக அனுப்பியிருந்தால் இந்தப் பத்தாயிரத்துக்குப் பதிலாக இருபதாயிரமே அனுப்பியிருப்போமே என்று கதறிவிட்டார்கள்.

அதனால் யோசித்தேன். இப்படி ஒரு முக்கியமான அரசியல் நாவலை – அதுவும் ஈழத்து அரசியலைப் பேசும் நாவலை – அதிலும் என் எழுத்து இயக்கத்திலேயே ஆக முக்கியமான படைப்பு என்று நான் நினைக்கும் நாவலை இப்படி பத்தொன்பது பேர் படிப்பது சரியாகாது என்று முடிவு செய்தேன். அதன் காரணமாகவே பெட்டியோ அச்சு நூலாகக் கொண்டு வர முடிவு செய்தேன். ”இப்பவும் இருநூறு பேர்தான் வாங்கப் போகிறார்கள். 200 x 500 = 1,00,000 ரூ. இதில் உங்களுக்கு 10000 ரூ ராயல்டி கிடைக்கும். என்.எஃப்.டி.யில் ஒரு புத்தகமே 15000 ரூ. பத்தாயிரமாக இருந்தது இப்போது 15000 ஆக உயர்ந்து விட்டது. ஆகவே அச்சு நூலாக வருவது வீண்தான்” என்றார் சீனி. இல்லை. என்.எஃப்.டி.யில் வாங்கிய வாசகர் யாவரும் – ஒரே ஒருவரைத் தவிர – என் நண்பர்கள். புதிதாக ஒருவர் கூட வாங்கவில்லை. எனவே அச்சு நூல் என்பது கிட்டத்தட்ட இலவசம் மாதிரிதான். ஒரு லட்சம் பிரதி விற்றால்தான் அச்சு நூலுக்குப் பெருமை. இருநூறு விற்றால் அது இலவசம் என்ற கணக்கில்தான் வரும். ஆகவே இந்த இலவசப் பிரதிகளை தமிழ்ச் சமூகத்துக்குப் பரிசாகக் கொடுப்பது என்.எஃப்.டி.யில் வாங்கியவர்கள்.

இல்லை, அச்சுப் புத்தகமாக வந்து விட்டதால் இனி எனக்கு என்.எஃப்.டி. பிரதி வேண்டாம் என்று நீங்கள் முடிவு எடுத்தால் எனக்கு எழுதுங்கள். என் அமெரிக்க நண்பர்களிடம் விற்றுக் கொடுக்கிறேன். இப்போது விலை உயர்ந்து விட்டது. அமெரிக்காவிலிருந்து இரண்டு நண்பர்கள்தான் வாங்கியிருக்கிறார்கள். ஒருவர் என் குடும்ப உறுப்பினர். இன்னொருத்தர் வளன். அவன் என் வளர்ப்பு மகன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருப்பவர்கள்தான் என்.எஃப்.டி. பிரதிகளை வாங்கலாம். அவர்களால் இங்கிருந்து அச்சுப் பிரதியை வாங்க இயலாது. வாங்கினால் தபால் செலவும் 5000 ரூபாய்க்கு மேல் ஆகும். அங்கேயே அச்சுப் பிரதி கிடைக்கிறது. 6000 ரூ. ஆகும். அங்கே ஒரு இசைக்கச்சேரிக்கு 100 டாலர் கட்டணம் வைக்கிறார்கள். பெட்டியோவுக்கு நான் 160 டாலர் வைக்கிறேன்.

இப்படிச் செய்தால் உங்கள் நம்பகத்தன்மை (credibility) போய் விடும் என்று இருவரும் நீண்ட நேரம் விளக்கினார்கள். என் நூல் சமூகத்துக்குக் கிடைக்கும் என்றால் என் நம்பகத்தன்மை போனால் பரவாயில்லை. ஸ்ரீராமானுஜர் செய்தது போலத்தான். எனக்கு நரகம் கிடைத்தாலும் மக்கள் சொர்க்கம் செல்வார்கள் அல்லவா? என் நம்பகத்தன்மையை நான் இழந்தாலும் மக்களுக்கு பெட்டியோ நாவல் வாசிக்கக் கிடைக்கும் அல்லவா? அது போதும். என் எழுத்து மக்களுக்குப் போய்ச் சேரும் என்றால், நான் அதன் பொருட்டு எந்த அதர்மமான வேலையையும் செய்யத் தயார்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் இந்த நாவலைப் படிக்க வேண்டும். அவர்கள் நிலம் பற்றிய நாவல் இது. அவர்களின் வாழ்க்கை பற்றிய நாவல் இது. அவர்களில் சிலர் எனக்குச் சொன்ன கதைகள் கிடக்கும் நாவல் இது. ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்கூட பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்கவில்லை என்பதும் நான் இதை அச்சுநூலாகக் கொண்டு வர முடிவு செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம்.

மற்றபடி என் பெயர், என் இமேஜ், என் நம்பகத்தன்மை, என் வாழ்க்கை, என் பணம் என்று எதுவுமே இல்லை. நான் மானுட சமூகத்துக்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்து உழைத்துக்கொண்டிருக்கிறேன். என் பயணங்களுக்காக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இப்படி என்.எஃப்.டி. போன்ற செயல்பாடுகளில் இறங்குகிறேன். இது பற்றிய என் பழைய பதிவுகளைப் பாருங்கள். என்.எஃப்.டி.யில் வெளியிடுவதில் எனக்கு உடன்பாடே இல்லை, பணம் தேவை என்றுதான் வெளியிடுகிறேன் என்று எழுதியிருப்பேன். சினிமாவுக்குப் போனால் பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும். ஆனால் அங்கே போய் நான் கைகட்டி நிற்கவில்லை. நான் ஒரு கலைஞனாக வாழ்பவன். யார் முன்னாலும் இதுவரை கைகட்டியதில்லை. இனிமேலும் கட்ட மாட்டேன். ஆனால் உங்களுக்கு என் எழுத்தை அளித்துவிட்டு உண்டியல் நீட்டுவேன். அதில் எனக்கு எந்த கௌரவக் குறைச்சலும் இல்லை. சினிமாவில் கலைஞனின் நிலை பற்றி பெட்டியோவில் ஒரு அத்தியாயம் உண்டு. அதைப் போன்ற ஒரு நகைச்சுவைக் காட்சியை சமீப காலத்தில் நீங்கள் வாசித்திருக்க முடியாது.

என்.எஃப்.டி. விற்பனை பற்றி இன்னொரு விஷயம். என்.எஃப்.டி.யில் நீங்கள் பணம் கட்டிவிட்டு எனக்கு எழுதினால் நான் அந்த எண்ணுள்ள நூலை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவேன். அதை ஒருவர் பத்தாயிரம் பேருக்கு, லட்சம் பேருக்குக்கூட அனுப்பலாம். ஆனாலும் அந்தக் குறிப்பிட்ட எண்ணுள்ள பிரதியின் சொந்தக்காரர் அவர்தான். அவர் மட்டுமே என்.எஃப்.டி. மூலம் அதை மற்றவருக்கு விற்க முடியும்.

அமெரிக்க – ஐரோப்பிய நண்பர்களை என்.எஃப்.டி.யில் பெட்டியோவை வாங்க அழைக்கிறேன். இந்திய, இலங்கைத் தமிழர்களை பெட்டியோ அச்சுநூலை வாங்க அழைக்கிறேன். பெட்டியோ அச்சுநூல் ஜனவரி மூன்றாம் தேதி வெளியாகிறது.

பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்க:

Petiyo by Charu Nivedita – Collection | OpenSea

இதில் வாங்க இயலாதவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்:

charu.nivedita.india@gmail.com