முதல்முறையாகக் குழம்புகிறேன். நான்கு பேர் – சீனி, வினித், மற்றும் இரண்டு நண்பர்கள் – உல்லாசம், உல்லாசம்… நாவல் தேறாது என்று சொல்லிவிட்டார்கள். அதாவது, ஒரு பிரமாதமான கதைக்களன் கொண்ட நாவலை நான் பலஹீனமாக எழுதி வீணடித்து விட்டேன். சம்பவங்கள் யாரையும் சரியானபடி போய்ச் சேரவில்லை. சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன.
ஆனால், நாவலைப் படித்த வேறு சில நண்பர்கள் இது பெட்டியோவைவிட கனமான நாவல் என்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம் பயின்றவர்கள். ஒருவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர். அவர் பெட்டியோவைவிட உல்லாசம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்லி நீண்ட நேரம் நாவல் பற்றிப் பேசினார். மற்றொருவர் ஃப்ரெஞ்சில் ஆய்வு மாணவர். ஈஷ்வர் என்று பெயர். அவருடைய கடிதம் இது:
Hi Charu. Very sorry for the late reply.
I have started reading the novel Ullasam, Ullasam… Impossible to pause in between, such is the flow and your language. But I have to stop, reflect and go back and refer Bataille, Fassbinder, but also Krasznahorkai and Ba. Venkatesan, then only I think I could do justice to the text. This is only taking some time. Will get back to you as soon as I can.
Love you Charu
இன்னொரு நண்பர் ஐரோப்பாவில் வசிக்கிறார். விஞ்ஞானி. அவரும் உல்லாசம், உல்லாசம்… பற்றி வெகுவாக சிலாகித்தார். நேற்று ஒரு வாசகர் வட்ட நண்பரிடம் கொடுத்தேன். சீனிக்கு நெருக்கமானவர். சீனி போலவே சிந்திப்பவர். அவர் பின்வருமாறு இன்று எழுதியிருக்கிறார்.
தலைவா… முடித்துவிட்டேன்… எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது… சில அலுவல் வேலைகளில் சிக்கி விட்டேன்… நாளை விரிவாக வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் தல… மிக மிக நன்றி தல எனக்கு அனுப்பியதற்கு… தேகம் , கலகம் காதல் இசை வந்த காலத்தில் இருந்த அதே கொண்டாட்டம்… அதே வேகம்… அதே இன்னோவேஷன்… அதை விட சிலமடங்கு தாண்டியும்… திசை பார்த்து கும்பிடுகிறேன் ஜென் துறவியே…
இந்த நிலையில் சீனி, வினித் சொல்வதைக் கேட்டு நாவலில் மீண்டும் வேலை செய்யலாமா அல்லது மற்ற நண்பர்களின் உற்சாகமான வரவேற்பை முன்வைத்து நாவலை வெளியிட்டு விடலாமா என யோசித்தேன். நாவலின் ஒரே விஷயம், கொண்டாட்டம், விடுதலை. அது சரியான அளவில் வெளிப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
ஆனாலும் மீண்டும் மீண்டும் யோசித்துவிட்டு நடுவாந்தரமாக ஒரு முடிவு எடுத்தேன். Sade, my neighbour போன்ற படைப்புகளை உருவாக்கிய பியர் க்ளொஸோவ்ஸ்கி போன்ற சில எழுத்தாளர்களைப் படித்து விட்டு உல்லாசத்தினுள் மீண்டும் நுழைவது. உள்ளே மாற்றம் எதுவும் தேவையில்லையெனில் வெளியே வந்து விடுவது. தேவைப்பட்டால் வேலை செய்வது.
உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கு நீங்கள் சற்றே காத்திருக்க வேண்டும்.