தமிழ்ச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்ற கருத்தை வைத்து சுமாராக ஐநூறு புலம்பல் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தப் புலம்பல் கட்டுரைகளாலேயே நண்பர்களிடமிருந்து நிறைய திட்டும் வாங்கியிருக்கிறேன். ஒரு நண்பர் பிரிந்தே போய்விட்டார்.
இனிமேல் அப்படி எழுத மாட்டேன். காலம் மாறி விட்டது. எல்லா எழுத்தாளர்களையும் அந்தந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் எனக்கு ரகுபதி என்ற வாசகர் அறிமுகம் ஆனார். இருபது ஆண்டுகளாக தீவிர இலக்கிய வாசகர். அவர் மனைவி தேவிகாவுக்கு இப்போதுதான் என் எழுத்து அறிமுகம். அன்பு, எக்ஸைல் இரண்டையும் படித்து விட்டார். என் யூட்யூப் பேச்சுக்களைக் கேட்கும்போது ஏதோ சுப்ரபாதம் கேட்பதுபோல் ஆனந்தப் பரவசமாக இருக்கிறது, வார்த்தைகளால் அந்த உணர்வை விளக்க முடியவில்லை என்று எழுதினார். அவருடைய மகன் தருணனோ இதற்கும் மேல். அவன் கத்தாரின் வளர்ந்தவன் என்பதால் ரஜினி, கமல், அஜித் என்றால் யார் என்று கேட்பான். காரணம், அவனும் தீவிர வாசகன். டொனால்ட் பார்த்தெல்மேயின் குழந்தைக் கதைகளிலிருந்து டேவிட் வில்லியம்ஸ் வரை படிக்கிறான். நான் அவனைப் பார்த்தபோது டேவிட் வில்லியம்ஸின் கேங்ஸ்டா க்ரானி என்ற நாவலைப் படித்துக்கொண்டிருந்தான். (டேவிட் வில்லியம்ஸை நான் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.) எழுத்தாளர்களைக் கொண்டாடும் தருணனுக்கு ஏழெட்டு வயது இருக்கும். விடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டேயிருக்கிறான். அப்புறம்தான் தேவிகா சொன்னார், அவனுக்கு எழுத்தாளர்கள்தான் ஹீரோவாம். விஷ்ணுபுரம் விருது விழாவில் ஏதோ ஒரு போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்து விட்டு சாரு சாரு என்று கத்திக்கொண்டே போய் புகைப்படம் எடுத்துக்கொண்டான் என்றும் சொன்னார். (தருண் என்னை சாரு என்றே அழைக்கிறான். வெளிநாட்டில் படித்ததால் இருக்கலாம். இங்கே வந்து விட்டான். இனிமேல் அங்கிள் வந்து விடும்.) இப்படி குடும்பம் குடும்பமாக எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள்.
ஆர்த்தோ நாடகத்தை நான் சில வாசகர்களுக்கு பிடிஎஃப்பாக அனுப்பியபோது சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையாக அனுப்பினார்கள். இன்ன தொகை அனுப்புங்கள் என்று நான் கேட்கவில்லை. அப்படியும் அனுப்பினார்கள். அதில் நூறு அனுப்பியவரும் உண்டு, அம்பதாயிரம் அனுப்பியவரும் உண்டு. இது எல்லாமே எழுத்தாளனைக் கொண்டாடுவதுதான்.
ஆனால் நண்பர்களே, எழுத்தாளனைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடவில்லை என்று நான் சொல்வது இதை அல்ல. வேறு எதை? முடிந்த அளவு விளக்குகிறேன். ஏனென்றால், என்ன விளக்கியும் காயத்ரிக்கு நான் சொல்வதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால்தான் ’விளக்க முயல்கிறேன்’ என்கிறேன். எனக்கு ஐந்து முறை அமெரிக்கத் தூதரகத்தில் வீஸா மறுக்கப்பட்டது. இரண்டு காரணங்கள். முறையான அழைப்பு இல்லை. நண்பர்களிடமிருந்து வரும் ”அழைப்புகளை” தூதரகத்தினர் மதிக்கவில்லை என்று தாமதமாகப் புரிந்து கொண்டேன். அழைப்பு என்றால் அமைப்புகளிடமிருந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, தமிழ்ச் சங்கம். என் நண்பர் ஒருவர் ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கிறார். தேவாலயம் மூலம் அழைக்கலாம், இங்கே நீங்கள் சிறியதொரு உரை ஆற்ற வேண்டும் என்றார். ஓ, ஆற்றலாமே என்றேன். ஆனாலும் அதில் ஒரு சிக்கல் வந்து விட்டது. உரையாற்றினால் தேவாலயம் எனக்குக் கொஞ்சம் பணம் தர வேண்டும். அது மரபு. ஆனால் தேவாலயத்தில் பணம் இல்லை. (அமெரிக்கா!) சரி, பணம் வேண்டாம் ஐயா, ஒரு அழைப்புக் கடிதம் போதும், நான் அமெரிக்க வர முடியும் என்றேன். ம்ஹும். பணம் கொடுக்காமல் அழைப்பது அறம் அல்ல என்று சொல்லிவிட்டார்கள். பாருங்கள், இந்த “அறம்” என்னை எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணுகிறது என்று!
யுனைட்ட் கிங்டம் தூதரகத்தில் ஒருமுறை வீசா மறுக்கப்பட்டேன்.
கனடா வீசாவும் மறுக்கப்பட்டது.
போயும் போயும் ஜெர்மன் வீசாகூட (ஷெங்கன் வீசா) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது.
இரண்டு காரணங்கள்: முக்கியக் காரணம், முறையான அழைப்பு இல்லை. இதுவரையிலான என் வெளிநாட்டுப் பயணங்கள் யாவுமே என் வாசகர்கள் எனக்கு அளித்த பணத்தில்தான் நடந்தது. சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு அழைப்பைத் தவிர இதுவரை என்னை எந்த ஒரு இலக்கிய, கலாச்சார அமைப்பும் தங்கள் நாட்டுக்கு அழைத்ததில்லை. அமெரிக்காவில் மட்டுமே ஒரு இருபத்தைந்து தமிழ்ச் சங்கங்கள் இருக்குமா, எந்த ஒன்றிலிருந்துமே இதுவரை அழைப்பு இல்லை. ஆனால் மிமிக்ரி தாமுவும், பட்டிமன்றப் பேச்சாளர்களும் ஒவ்வொரு தீபாவளி பொங்கலுக்கும் அமெரிக்கா போய்விடுகிறார்கள். ஆனால் என்னால் எழுபது வயது வரை அமெரிக்கா போக முடியவில்லை. இப்போது சொல்லுங்கள், எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடவில்லை என்று நான் சொல்வது சரியா, தவறா?
சில மாதங்களுக்கு முன் ஜப்பான் சென்றேன். செந்தில்குமாரும், கமலும், குன்றாளன் போன்ற நண்பர்களும் சேர்ந்து செயல்படுத்திய ஒரு காரியம் அது. என் எழுபதாவது வயதில் இதோ இங்கே இருக்கின்ற ஜப்பானுக்குப் போக முடிந்தது. இத்தனைக்கும் ஜப்பான் என் தாய்நாடு என்று எழுதியிருக்கிறேன். சென்னையிலேயே ஜப்பானிய சாகேதான் குடிக்கிறேன். ஜப்பானிய சுஷிதான் விரும்பி உண்கிறேன். ஐம்பதாவது வயதில் ஆசைப்பட்டு எழுபதாவது வயதில் சென்றேன். சரியாகச் சுற்ற முடியவில்லை. பப்பில் பாங்காக வேலை செய்யும் உடம்பு மற்ற நேரத்தில் வணையமாட்டேன் என்கிறது. ஒருநாள் செந்தில் என்னை தோக்யோவின் மிகப் பெரிய பூங்காவுக்கு அழைத்துச் சென்றார். அது ஒரு பெரிய வனம்போல் தெரிந்தது எனக்கு. ஒரு ஃபர்லாங் தூரம்கூட என்னால் நடக்க முடியவில்லை. வெளியேறி விட்டோம். ஆனால் வெளியேறுவதற்கே அரை மணி நேரம் நடக்க வேண்டியிருந்தது.
இப்படித்தான் தமிழ்ச் சமூகத்துக்கும் எழுத்தாளர்களுக்குமான உறவு இருந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் – இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் – வாசகர் உலகம் தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமோ எழுத்தாளர்களையே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று, ஒரு நாவல் ஒரு லட்சம் பிரதி விற்க வேண்டும். அப்படி நடந்தால் யாரும் யாரையும் கொண்டாட வேண்டாம். எந்தப் புகாரும் இருக்காது. இல்லையென்றால், சுந்தர் பிச்சை போன்ற ஆசாமிகள் தமிழ் எழுத்தாளர் பெயரைச் சொல்ல வேண்டும். அது ஆயிரம் கமல்ஹாசன்கள் ஆயிரம் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சொல்வதற்குச் சமம். சுந்தர் பிச்சை சொன்னால் நோபல்காரன் காதுகளில் விழும். அப்படிச் சென்றதால்தான் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சுந்தர் பிச்சை போன்றவர்களுக்குத் தமிழ் எழுத்தாளர் பெயர் தெரியப்போவதில்லை என்பதுதான் எதார்த்தம்.
நேற்று மியூசிக் அகாதமியில் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். இரண்டாயிரம் பேர் இருப்பார்கள். அதில் மூன்று பேருக்குத்தான் என்னைத் தெரிந்திருந்த்து. ஒருவர், நான் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது நண்பரானவர். வாசகர். இன்னொரு குடும்பம். ஹைதராபாத். வந்திருந்த அத்தனை பேரும் சமூகத்தில் உச்சநிலையில் இருக்கும் மேல்தட்டினர். பிராமணர்கள். எண்ணி நானும் வினித்தும் அவர் அண்ணனும் மட்டுமே அ-பிராமணர். ஏன் சாதியைக் குறிப்பிடுகிறேன் என்றால், இரண்டாயிரம் பேர் குழுமியிருக்கும் ஒரு கலாச்சார நிகழ்வில் (என்னுடையது முன்வரிசை டிக்கட் விலை 2200 ரூ.) யாருக்குமே ஒரு எழுத்தாளனைத் தெரியவில்லை என்றால் அந்த சமூகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் கோபால்சாமி. முன்னாள் தேர்தல் கமிஷனர். இப்படி அதிகாரம், மருத்துவம், பத்திரிகை, ஆன்மீகம் என்று அத்தனை துறைகளிலும் மேல்தட்டில் இருக்கும் வகுப்பினரின் நிலையே இப்படி இருக்கிறது. இப்படி இலக்கியம் அறியாதவர்களை விலங்குகளோடு ஒப்பிடுகிறார் ஒரு ஞானி. பெயர் பர்த்ருஹரி. எனக்குப் பிடித்த சம்ஸ்கிருத்ததில் எனக்குப் பிடித்த ஞானி.
ஆக, ஒரு தமிழ் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பி வாழ முடியாத நிலையிலும், தன் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருப்பவர்களிடம் கைகட்டி நிற்கவுமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இந்த அவலத்தைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன். மற்றபடி தமிழ் எழுத்தாளர்களை அந்தந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் கொண்டாடவே செய்கிறார்கள். பெட்டியோ… நாவல் என்.எஃப்.டி.யிலும் விற்பனையாகும், அச்சுநூலாகவும் வெளிவரும் என்று நேற்று எழுதினேன். என் நம்பகத்தன்மைக்குப் பாதகம் வந்து விடும் என்று நண்பர்கள் எச்சரித்தார்கள். ”என் நேர்மை, வாக்கு சுத்தம், அறம், நம்பகத்தன்மை எல்லாவற்றையும் என் வாசகர்களின் நன்மை கருதி மீறுவேன்” என்று எழுதியிருந்தேன். இத்தனைக்குப் பிறகும் ஒரு வாசகர் 15000 ரூ. அனுப்பி ஒரு என்.எஃப்.டி. பிரதிக்கு ஏற்பாடு செய்யுங்கள், உங்கள் நினைவாக வைத்துக்கொள்கிறேன் என்கிறார். இது எல்லாம் எழுத்தாளனைக் கொண்டாடுதல்தான். ஆனால் அச்சுப் புத்தகம் எத்தனை விற்கிறது? பத்து கோடி பேரில் 500 பிரதி. ஒரு பிரதி 600 ரூ. 600 x 500 = 3,00,000. மூணு லட்சத்தில் எனக்குக் கிடைக்கப் போகும் ராயல்டி 30,000. இது எனக்கு வெட்கக்கேடாகவும் அவமானமாகவும் இருக்கிறது. இனிமேலும் ஒரு எழுத்தாளன் தன் நாவலுக்கு முப்பதாயிரம் ரூபாய் ராயல்டி வாங்கும் அவலநிலை இருக்கக் கூடாது. அதற்கு என்ன செய்யலாம்?
எனக்குத் தெரிந்த வழியை காயத்ரியிடம் சொன்னேன். காயத்ரி அதை மறுத்து என்ன கூறுவாள் என்பதும் எனக்குத் தெரியும் என்பதால் உடனே பேச்சை மாற்றி விட்டேன். என் யோசனை இதுதான். இனிமேலும் ஒரு நூலின் அச்சுத்தயாரிப்புக் கூலி 100 ரூ. என்றால் அதன் விலை 300 ரூ. என்று வைக்கலாகாது. அப்படி வைத்தால் எழுத்தாளனுக்கு ராயல்டி 30 ரூ கிடைக்கிறது. இந்த பஜனையே இனிமேல் என் விஷயத்தில் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இந்த எழுபது வயதுக்கு மேலும் பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய் ராயல்டியில் வாழ முடியாது. மொழிபெயர்ப்புக்கே நான் பல லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இனிமேல் என் புத்தகங்களின் பின்பக்க அட்டையில் புத்தக விலையாக ஆறு கட்டங்கள் இருக்கும். ஒரு புத்தகத்தின் விலை 500 ரூ என்றால், 500 – 1000 – 2000 – 5000 – 10000 – 50000 – 100000 என்று ஏழு கட்டங்கள். எந்த விலை கொடுத்து வாங்க விரும்புகிறீர்களோ அந்த விலைக்கு டிக் அடித்து பணத்தைக் கொடுக்கலாம். இது சாத்தியமே இல்லை என்று சொல்லிவிட்டாள் காயத்ரி. இரண்டு காரணங்கள். ஒன்று, எல்லா எழுத்தாளர்களும் இப்படிக் கேட்பார்கள். அத்தனைக்கும் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது. இரண்டு, புத்தக விழா சமயத்தில் இப்படி பிரித்துப் பிரித்துப் பணம் வாங்கிக் கணக்கு வைத்துக் கொள்வதெல்லாம் கற்பனைகூட செய்ய முடியாத வேலை. பதிப்பகத்தாரின் சிரமம் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் இனிமேலும் என் புத்தகத்திலிருந்து கிடைக்கும் பத்தாயிரம் ரூபாய் ராயல்டி பஜனையில் வாழ முடியாது. இனிமேல் என் புத்தகங்களின் விலை விவரம் மேலே நான் சொன்னது போலத்தான் இருக்கும். இந்த விஷயம் பெட்டியோவுக்குப் பொருந்தாது. அதற்கு விலை 600 என்று நினைக்கிறேன். ஒரே விலைதான். அதற்கு மேலும் நீங்கள் கொடுக்க நினைத்தால் ஸீரோ டிகிரி அரங்கில் பில் போடும் பேரழகியின் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பேன். என் பாக்கெட்டில் மீதிப் பணத்தை வைத்துவிடுங்கள். நூறு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை, கூச்சப்படாமல் என் சட்டைப் பாக்கெட்டில் வைக்கலாம். அன்றைய பீடி செலவுக்காவது ஆகும். ஒருவேளை கையில் பணம் இல்லாமல், நாவலை அதிக விலைக்கு வாங்க விரும்பினால் ஜிபே மூலம் அனுப்பி விடுங்கள். கேட்டால் போன் நம்பர் தருகிறேன்.
உல்லாசம், உல்லாசம்… நாவலிலிருந்து மேற்கண்ட திட்டத்தைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.