எழுத்தாளனைக் கொண்டாடுதல் (2)

காயத்ரி சொன்ன இன்னொரு கருத்தையும் மறுக்க வேண்டியிருக்கிறது. தமிழில் ஒன்பது கோடி மக்கள் தொகைக்கு ஆயிரம் பேர் தீவிர இலக்கியம் படிக்கிறார்கள் என்றால், இதே விகிதாச்சாரம்தான் ஓர்ஹான் பாமுக்குக்கும் இருக்கும் என்பது காயத்ரி சொன்னது. இதை வேறு பலரும் சொல்லியிருக்கிறார்கள். தருண் தேஜ்பாலும் ஒருமுறை இதையே சொன்னார். உலக ஜனத்தொகை 800 கோடியில் நூறு கோடி ஆங்கிலம் பேசுகிறார்கள். அதில் ஒரு லட்சம் பேருக்கு ஓர்ஹான் பாமுக்கைத் தெரியுமா? ஆச்சரியகரமாக கணக்கு ஒத்துப் போகிறது. எந்நூறு கோடியில் ஒரு லட்சமும் எட்டு கோடியில் ஆயிரமும் ஒரே விகிதம் வருகிறது. எண்பதாயிரத்துக்கு ஒன்று. ஆக, ஓர்ஹான் பாமுக்கின் வாசகர் எண்ணிக்கையும் என் வாசகர் எண்ணிக்கையும் விகிதாச்சாரத்தில் சமம். ஆனால் ஒரு லட்சம் வாசகர்களால் ஓர்ஹான் பாமுக்குக்குக் கிடைக்கும் ராயல்டி தொகை கோடியில். எனக்கு ஆயிரத்தில். இதுதான் பெரிய வித்தியாசம். ஓர்ஹான் பாமுக் போன்ற பிரபலம் இல்லாமல் ஆலன் சீலி போன்றவர்களை எடுத்துக்கொள்வோம். ஆலன் சீலிக்கு உலக அளவிலேயே பத்தாயிரம் வாசகர்களுக்கும் குறைவாகவே இருப்பார்கள். நூறு கோடி பேருக்குப் பத்தாயிரம். எனக்கு பத்து கோடிக்கே ஆயிரம் பேர். இங்கேயும் கணக்கு சரியாகப் பொருந்துகிறது. ஆனால் ஆலன் சீலி ஆங்கிலத்தில் எழுதுவதால் அவருக்கு உலகம் முழுவதிலிருந்தும் வகுப்பு எடுக்க அல்லது இலக்கியச் சந்திப்புகளுக்கு அழைப்பு வந்து கொண்டேயிருக்கிறது. அவர் இந்தியாவிலேயே இருப்பதில்லை. அந்த வசதியெல்லாம் தமிழ் எழுத்தாளனுக்கு இல்லை. எனவே எந்த ஒரு வெளிநாட்டு எழுத்தாளரையும் தமிழ் எழுத்தாளரோடு எந்த வகையிலும் ஒப்பிடக் கூடாது.