நேற்று நடந்த ஒரு அதிசயம்…

நேற்று நடந்த அதிசயத்துக்குக் காரணம் வினித் தான்.  அவர் இல்லாதிருந்தால் அந்த அதிசயம் என் வாழ்வில் நடந்திராது.  விரிவாகச் சொல்ல வேண்டும்.  ஏற்கனவே நான் சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தும் ஒரே ஒரு படத்துக்குத்தான் போக முடிந்தது, புத்தகப் பிழை திருத்தம் வேலையின் காரணமாக அதற்கு மேல் திரைப்பட விழாவுக்குப் போக முடியாத வருத்த்த்தில் இருந்தேன்.  அந்த நேரத்தில் மியூசிக் அகாடமியில் நடக்கும் அபிஷேக் ரகுராம் கச்சேரிக்கு வருகிறீர்களா என்று கேட்டார் வினித்.  அதற்குமுன் நான் அபிஷேக் ரகுராமின் பெயரைக் கேள்விப்பட்டதில்லை.  காரணம், சமீப காலமாக நான் கர்னாடக இசையே கேட்பதில்லை.  இப்போதைய பாடகர் யாரும் – ஆம், யாரும் – செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், வீணை எஸ்.  ராமநாதன், ஜி.என்.பி., கே.வி. நாராயணசாமி, செம்மங்குடி சீனிவாச அய்யர், எம்.எல். வசந்தகுமாரி போன்று பாடுவதில்லை என்பதால் நான் இப்போதெல்லாம் கர்னாடக இசை கேட்பதில்லை.  ஆனாலும் வினித் சொன்னால் கேட்கலாம்.  தீவிர இசை ரசிகன்.  ஆனால் டிக்கட் கிடைப்பது குதிரைக்கொம்பு.  காலையில் ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து ஏழு மணிக்கு மியூசிக் அகாடமி வந்து மூன்று டிக்கட் வாங்கி விட்டார்.  ஒரு டிக்கட் 2200 ரூ. 

மாலை ஆறே முக்காலுக்கு நான் ஆறரைக்கு அரங்கம் வந்தேன்.  ஆனால் அரங்கம் ஆறு மணிக்கே நிரம்பி விட்டது போல.  எங்களுக்கு அரங்கின் பக்கவாட்டில்தான் இருக்கை கிடைத்தது.  நடுப்பக்கத்தில் ஒரு இருக்கை இல்லை.  நான் இருக்கை எண் போட்டிருக்கும் என்று நினைத்துவிட்டேன்.  இல்லாவிட்டால் நானும் ஆறு மணிக்கே போய் இருக்கையைப் போட்டிருப்பேன்.  அபிஷேக் ரகுராம் மிகவும் பிரபலம் போல.  ஒரு இருக்கை கூட காலியாக இல்லை.  எல்லோருமே அறுபது எழுபதுக்கு மேலே.  எல்லோருமே பிராமணர்.  எல்லோருமே இசைத்துறையில் அனுபவம் பெற்றவர்கள் போல.  நம்முடைய இலக்கியக் கூட்டங்களுக்கு ஒரு காமன்மேன் வருவானா?  எல்லோரும் இலக்கியவாதிகள்தானே?  அந்த மாதிரிதான் இவர்களும் இசைத்துறை ஆர்வலர்கள்.  கலைஞர்கள்.  ஆனால் ஒன்று கவனித்தேன்.  எந்த ஆண் முகத்திலும் சிரிப்பே இல்லை.  வாழ்நாளில் ஒருமுறைகூட சிரித்திராத முகங்கள்.  பயங்கரமாக இருந்தது.  எனக்கு தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நினைவு வந்து விட்டது.  பெண்களோ முகத்தில் கடுமையாக ப்ளீச் அடித்து அடித்து சவக்களை தட்டியவர்களாக இருந்தார்கள்.  ஜப்பானிய பேய்ப்படங்களில் வரும் பேய்களின் முகங்கள் இப்படித்தான் வெள்ளை வெளேரென்று ப்ளீச் அடித்துக் கிடக்கும்.  தலையில் அட்டைக் கருப்பாக செயற்கை மை.  கடுஞ்சிவப்பில் உதட்டுச்சாயம்.  ஆனால் இருபதிலிருந்து முப்பது என்று ஒரு பெண்கள் கூட்டமும் இருந்தது. அம்மாதிரி அழகிகளை உலகில் எங்கே தேடினாலும் கிடைக்கப்போவதில்லை.  பயங்கரம்.  அதிபயங்கரம்.  ஏதாவது ஒரு கதையில் இந்தப் பார்வையாளர் கூட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறேன்.  இவர்களைப் பார்த்து எனக்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடின.  அதெல்லாம் இங்கே வேண்டாம்.  இங்கே நேற்று நடந்த அதிசயம் பற்றி மட்டும். 

நானே இன்றைய கர்னாடக இசைக்கலைஞர்கள் மீது மிகுந்த வருத்தத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கிறேனா, எந்த மனநிலையில் அங்கே போயிருப்பேன்?  ஆனால் ஐந்தே நிமிடத்தில் அபிஷேக் என்னை மனமாற்றம் செய்து விட்டார்.  நடந்தது ஒரு நாத வேள்வி.  நாத உபாசனை.  எனக்கு உடனடியாக செம்பை, செம்மங்குடி காலத்துக்குப் போய் விட்டதுபோலவே இருந்தது.  க்ளாஸ் கின்ஸ்கியின் நடிப்பு பற்றி எழுதியிருக்கிறேன்.  அந்த நடிப்பில் இருக்கும் பித்தநிலையை நேற்று மியூசிக் அகாதமி மேடையில் கண்டேன்.  அதை அங்கே கூடியிருந்த இரண்டாயிரம் பேருமே உணர்ந்தார்கள் என்பதை அவர்களின் எதிர்வினையிலிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது.  பார்வையாளர்களையும் அபிஷேத் தன் சங்கீத உன்மத்த்த்தினால் உன்மத்தர்களாக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும். 

என்னுடைய் சங்கீத ரசனை பற்றி நானே நேற்று என்னை மெச்சிக்கொண்டேன்.  ஏனென்றால், எனக்கு டி.எம். கிருஷ்ணா, சஞ்சய் சுப்ரமணியம் போன்ற இன்றைய கலைஞர்களைக் கொஞ்சமும் பிடிக்காது.  இலக்கியத்தில் பெருமாள் முருகனைப் போன்றவர்கள் அவர்கள் இசையில்.  இன்றைய தினம் பெருமாள் முருகனை யாராவது விமர்சிக்க முடியுமா?  போய்யா உனக்கு இலக்கிய ரசனை இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.  அப்படித்தான் ஆகி விட்டது சங்கீத உலகமும்.  பிரபலமாகி விட்டால் அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்.  இப்படிப்பட்ட சூழலின் காரணமாகவே நான் கர்னாடக சங்கீதத்துக்கு வெளியில் போய் விட்டேன்.  எந்நேரமும் கேட்பது ஹிந்துஸ்தானிதான். 

இந்தச் சூழலில்தான் அபிஷேக் ரகுராமைக் கேட்டேன்.  இசைக்கே தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த ஒருவரால்தான் இத்தனை வெறியுடன் இத்தனை உன்மத்தத்துடன் பாட முடியும். ஆறே முக்காலுக்கு ஆரம்பித்த ஆலாபனை ஏழேகாலுக்கு முடிந்து கீர்த்தனையின் முதல் வார்த்தையான மனசுலோனி மர்மமுலு (தியாகராஜர் கீர்த்தனை) உச்சரிக்கப்பட்டதுமே சபை ஆரவாரம் கொண்டது.  ஆலாபனையின் இடையே – ஏழிலிருந்து ஏழாகாலுக்குள் – அபிஷேக் மேலே உச்சத்தில் சஞ்சரிக்க எழுந்த போது இரண்டு முறை தவறி, இரண்டு முறையுமே தன் மேதமையாலும் உச்சக்கட்ட ஒன்றுதலாலும் அதை அனாயாசமாகத் தட்டிவிட்டுவிட்டு மேலே எழுந்து பறக்க ஆரம்பித்து விட்டார்.  மற்றபடி மூன்று மணி நேரமும் செம்பை, செம்மங்குடி தரத்தில் ஒரு மகத்தான கலைஞனை சந்தித்தேன்.  இப்போதைய பிரபலங்களைப் பார்த்துவிட்டு இனிமேல் கர்னாடக சங்கீதம் அவ்வளவுதான் என்ற விரக்தியான முடிவுக்கு வந்திருந்தேன்.  ஆனால் அபிஷேக் ரகுராமைக் கேட்டபோது இனி காலம் உள்ளளவும் அபிஷேக் போன்ற கலைஞர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்று தோன்றியது. 

abhishek raghuram

நாளையும் நாரதகான சபா போய் மீண்டும் அபிஷேக்கைக் கேட்கலாமா என்று யோசிக்கிறேன்.  மாலை ஏழு மணி.  நாரதகான சபா.

கச்சேரி முடிந்த பிறகு வினித் சொன்னார்.  அவர் ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டாராம்.  ஆறே முக்காலிலிருந்து ஒன்பதே முக்கால் வரை மூன்று மணி நேரமும் நான் அபிஷேக்கை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தேனாம்.  தலையைக்கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர்த்தவில்லையாம்.   அது ஒரு நம்ப முடியாத விஷயமாக இருந்தது என்று இரண்டு மூன்று முறை குறிப்பிட்டார்.  உண்மைதான்.  நானுமே அதை உணர்ந்தேன்.  எப்படி நம்மால் இப்படி மூன்று மணி நேரம் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க முடிகிறது?  கண்கள் ஒரு நிமிடம்கூட அபிஷேக்கை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. மூன்று மணி நேரம் அல்ல; அபிஷேக் ஆறு மணி நேரம் பாடியிருந்தாலும் அப்படித்தான் சிலைபோல் அமர்ந்து கேட்டிருப்பேன்.