எழுத்தாளனைக் கொண்டாடுதல் (3)

சென்ற ஆண்டு சென்னை அண்ணா நூலகத்தில் என் உரையைக் கேட்பதற்காக சிவசங்கர் என்ற மாணவர் மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். இப்போது அவரிடமுருந்து இப்படி ஒரு கடிதம்:

ஜனவரி மாதத்தில் கேரளாவில் நடைபெற இருக்கும் ‘இலக்கியத் திருவிழாவில்’ பங்கேற்பதற்கு சிறு சேமிப்பையும், சின்னதான கடனும் வாங்கி பதிவு செய்துகொண்டேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் நாம் அங்கு சந்திப்போம், சாரு.

ஜனவரி 11 முதல் 14 வரை கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் நான் பதின்மூன்றாம் தேதி பேச இருக்கிறேன், வாசகர்களுடன் உரையாட இருக்கிறேன் என்ற விஷயத்தை எழுதியபோது இதெல்லாம் என்ன வீண் வேலை, யார் நமக்காகத் தமிழ்நாட்டிலிருந்து கோழிக்கோடு வரை வரப்போகிறார்கள் என்று நினைத்தே எழுதினேன். அதிலும் 15ஆம் தேதி பொங்கல் வேறு. வினித்தைக் கேட்டபோது அவர் வர முடியாமல் இருப்பதற்குப் பொங்கல்தான் காரணம் என்றார்.

இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே ஒருவராவது தமிழ்நாட்டிலிருந்து வருகிறார். அதிலும் மாணவர் என்பதால் பணம் கடன் வாங்கிக்கொண்டு. சீக்கிரம் அவர் எழுதும் போட்டித்தேர்வில் வெல்ல வேண்டும்.

Kerala Literature Festival என்று போட்டுப்பாருங்கள். விவரம் தெரியும். ஜெயமோகன், பெருமாள் முருகன் ஆகிய இருவரும் தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நான் பன்னிரண்டு இரவு செல்கிறேன். ஆக, பதின்மூன்றாம் தேதி என்னுடைய அமர்வுக்கு மட்டுமே செல்ல முடியும். ஜெயமோகன், பெருமாள் முருகன் அமர்வுகள் 13, 14 தேதிகளில் இருந்தால் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

***

என்னுடைய புத்தக விலைத் திட்டத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அபிஷேக் ரகுராம் கச்சேரியின் டிக்கட் கட்டணங்களைப் பார்த்து விட்டு நம் புத்தக விலைகளைப் பற்றியும்,
ஒரு புத்தகத்துக்குக் கிடைக்கும் இருபதாயிரம் முப்பதாயிரம் ராயல்டி பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சீனி ஃபோனில் வந்து மேற்படி ஆலோசனையை வழங்கினார். புத்தக விலை இனி 500 – 1000 – 2000 – 5000 – 25000 – 50000 – 100000 என்று இருக்கும்.

நேற்றைய கட்டுரைகளில் சில விடுபடல்கள்.
”எனவே எந்த ஒரு வெளிநாட்டு எழுத்தாளரையும் தமிழ் எழுத்தாளரோடு எந்த வகையிலும் ஒப்பிடக் கூடாது” என்று எழுதியிருந்தேன். வெளிநாட்டு எழுத்தாளர் மட்டும் அல்ல, இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளரோடும்கூட ஒப்பிடக் கூடாது. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பலர் பெருமாள் முருகனைவிட மட்டமாக எழுதுபவர்கள். ஆனாலும் ஆங்கிலம் என்பதால் அவர்கள் வண்டி ஓடுகிறது. அதனாலேதான் அவர்கள் பெருமாள் முருகனையும் கொண்டாடுகிறார்கள்.

அபிஷேக் ரகுராமின் நிகழ்ச்சி இன்று நாரதகான சபாவில் இல்லை. வேறு பல இடங்களில் நடக்கிறது. தேடிப் பாருங்கள். கர்னாடக சங்கீதத்தின் நிலை நான் நினைத்தபடி மோசமாக இல்லை என்று தெரிகிறது. நேற்று ரமணா பாலச்சந்திரன் என்ற இளைஞரின் கச்சேரிகள் சிலவற்றின் இணைப்புகளை எனக்கு வித்யா சுபாஷ் அனுப்பியிருந்தார். உண்மையிலேயே இந்தப் பையன் Prodigyதான், சந்தேகமே இல்லை. நீங்களே தேடிக் கேட்டுப் பாருங்கள்.

ப்ரூரூமில் தேவிகாவுடன்…