விதவிதமாகத்தான் கொண்டாடுகிறார்கள். நேற்று ஒரு வாசகி எழுதியிருந்தார். ”புத்தக விழாவில் உங்களை சந்தித்தால் எலும்பு நொறுங்கக் கட்டி அணைப்பேன்.” உண்மையில் ஒரு ராக்ஸ்டாருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியம் இது. அந்த வன்முறைச் சம்பவத்துக்காகவே புத்தக விழாவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
டிசம்பர் 18 என் பிறந்த நாள் இல்லையா? மைலாப்பூர் பூராவும் என் புகைப்படத்தோடு சுவரொட்டிகள் மிளிர்ந்தன. யார் காரியம்? கீழ்க்கண்ட கடிதத்தைக் காணுங்கள்.
வணக்கம் ஐயா தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை உள்ள மாணிக்கம் அண்ட் கோ தங்க நகை மேல மாளிகை சார்பாக ஒவ்வொரு மாதமும் எழுத்தாளர் பிறந்த நாளுக்கு சுவரொட்டிகள் ஒட்டி மிக விமர்சையாகக் கொண்டாடி வருகிறோம் சார் அந்த வகையில் இந்த மாதம் உங்களுக்கு பிறந்த நாளுக்கு எங்களின் ஏரியாக்களிலும் சுவரொட்டிகள் ஒட்டிய புகைப்படம் உங்களுக்கு அனுப்பி உள்ளேன் சார் மற்றும் வீடியோ கோடை எஃப்எம் இல்லை ஒளிபரப்பு செய்யப்படும் ஆடியோ உங்களுக்கு அனுப்பி உள்ளேன் ஐயா நன்றி
நகைக்கடை நண்பர்கள் சொன்னது போலவே செய்தார்கள். மட்டுமல்லாமல் டிசம்பர் 18 அன்று அவர்களின் கடையில் நகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு என் புத்தகங்களையும் பரிசாக அளித்துள்ளார்கள். கீழே புகைப்படங்கள்.
இப்படியெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போது எழுத்தாளன் மட்டும் இருநூறு பிரதி விற்று அதற்கான இருபதாயிரம் ரூபாய் ராயல்டியில் வாழ்ந்து பிச்சையெடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் என் புத்தகங்களுக்கான விலை 500 இலிருந்து ஒரு லட்சம் வரை என்று சில தினங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் என் அன்புக்குரிய நண்பர் ஒருவர் ஒரு இலக்கிய விழாவில் பேச அழைத்தார். அதில் பேசுவதற்காக நான் இரண்டு வார காலமாவது படிக்க வேண்டும். தயார் செய்ய வேண்டும். அதனால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்றேன். ஆனால் அந்தப் பணத்தை நீங்கள் தர வேண்டாம், தனவந்தர்களிடம் கேட்டுப் பெறுங்கள் என்று யோசனை சொன்னேன். தனவந்தர்கள் எல்லா விஷயங்களுக்கும் தானம் செய்கிறார்கள் அல்லவா? இலக்கியத்துக்கும் செய்யட்டுமே? பட்டிமன்றப் பேச்சாளர் என்று ஒரு கும்பல் திரிகிறது. அந்தக் கும்பல் ஒரு பேச்சுக்கு ஒரு லட்சம்தானே வாங்குகிறது? அந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது? எழுத்தாளனுக்கும் கொடுத்தால் என்ன? சங்கீதக் கச்சேரியை 2000 ரூ. கொடுத்துப் பார்க்கிறோம். சங்கீதம் ஒரு பொழுதுபோக்குக் கலை. ஆனால் இலக்கியம் ஞானம் சம்பந்தப்பட்டது. மானுட வாழ்வை மேம்படுத்துவதற்கானது. அப்படிப்பட்ட ஞானத்தை வழங்குபவனைப் பிச்சை எடுக்க விடுவதா?