புரிந்து கொள்ளுங்கள்…

நான் வீட்டில் இருக்கும்போது யாரிடமும் தொலைபேசியில் பேசுவதில்லை. பேசினால் வீட்டில் பெரிய ரணகளம் ஆகி விடுகிறது. இருந்தாலும் இந்தச் சூழலையும் மீறி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவிர்க்க முடியாமல் பேசி பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறேன். அப்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. ஒரு நண்பரிடம் ஒரு முக்கியமான இலக்கிய விழாவுக்கு நான் அழைக்கப்படாதது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அழைக்கப்பட்டிருந்தால் ஔரங்ஸேப் நாவலுக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும். தன் வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் அருகே வந்து நின்றுகொண்டு நான் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள் அவந்திகா.

நான் பேசி முடித்ததும் ஜெயமோகன் செல்கிறாரா என்றாள். ஆமாம் என்றேன். ம்… அவரைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், உன்னைச் சுற்றி அயோக்கியப்பயல்கள் இருக்கிறான்கள். அதனால்தான் உனக்கு நல்லது நடக்க மாட்டேன் என்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம், உன் சகவாசம்தான் என்றாள்.

சீனியும், வினித்தும்தான் அந்த அயோக்கியப்பயல்கள்.

இன்று நான் இருபது பூனைகளுக்கும் கொடுக்கும் உணவுக்கு ஆகும் செலவு மாதம் 60000 ரூ. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? சீனி கொடுக்கும் யோசனைகள்தான் காரணம். இந்தப் பூனைகளை நானா வளர்க்கிறேன்? வீட்டில் வைத்து எந்த விலங்கினங்களை வளர்ப்பதும் என் கொள்கைக்கு எதிரானது. பசு மட்டுமே விதிவிலக்கு. அவந்திகாவுக்காக நான் செய்யும் தியாகம் இது. சீனி இல்லாவிட்டால் நான் பிச்சைக்காரனாகத் தெருவில் அலைந்திருப்பேன். இந்தப் பண விஷயம் தவிரவும், என்னோடு சரிக்கு சரியாக, இண்டலெக்சுவலாக, எனக்கு இணையாகத் தமிழ்நாட்டில் பேசக்கூடிய ஒரே ஆள் எனக்குத் தெரிந்து சீனி ஒருத்தர்தான். இத்தனைக்கும் அவர் நான் படித்த மேற்கத்திய தத்துவ அறிஞர்களையோ இலக்கியத்தையோ படித்தது இல்லை. இது புத்திக்கூர்மை மற்றும் சுரணையுணர்வு சார்ந்த விஷயம். படித்து விட்டால் மட்டுமே இதெல்லாம் வந்து விடாது. நான் படித்ததை விட அதிகம் படித்த மூன்று பேரை எனக்குத் தெரியும். அவர்களைப் போன்ற முழு மூடர்களை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அவர்கள் யார் என்றும் உங்களுக்குத் தெரியும். த, நா, எம் என்ற ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டவர்கள். வயது முறையே 75, 60, 58.

இப்போது கேரள இலக்கிய விழாவில் மொழிபெயர்ப்பு பற்றி நான் பேச இருப்பதைத் தமிழில் எழுதி, இது போதுமா, இன்னும் விஷயங்கள் உள்ளதா என்று சீனியிடம்தான் கேட்க இருக்கிறேன்.

அது தவிர, இப்போது எனக்கு உடனடியாக மூணு லட்சம் ரூபாய் தேவை. சீலே செலவு. என் மகனுக்கு மூணு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறேன். திருப்பித் தர முடியுமா என்று மெஸேஜ் போட்டேன். தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். இரண்டு மாதம் ஆகியும் என் மெஸேஜுக்கு பதிலே இல்லை. ஆவணப்படம் எடுப்பதற்காக வாங்கிய கேமராவை விற்கலாமா என்று யோசிக்கிறேன். அல்லது, என் நண்பரிடம் கடன் கேட்கலாமா என்ற யோசனையும் இருக்கிறது. வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் கடன் கேட்டதில்லை. உஞ்சவிருத்தி செய்து வாழ்பவர்கள் கடன் கேட்க மாட்டார்கள். இப்போது தேவை கருதி அதைச் செய்யலாமா என்று யோசனை. ஆனால் நண்பரின் மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியது. எனவே அவர் வசம் பணம் இருக்க வாய்ப்பு இல்லாமலும் இருக்கலாம். இந்த இக்கட்டான நிலையில் சீனி சொன்ன யோசனைதான் உல்லாசம் நாவல் முன்வெளியீட்டுத் திட்டம்.

இப்படி என் வாழ்வில் எந்த இக்கட்டிலும் கைகொடுப்பவராக இருக்கிறார் சீனி. அது மட்டும் அல்ல. உல்லாசம் நாவலுக்கு அட்டை வேண்டும் என்றேன். சொன்னபோது இரவு எட்டு மணி. அதிகாலை மூன்றரை மணிக்கு அட்டை அனுப்பி விட்டார். நண்பர்கள் பணம் அனுப்ப ரேஸர்பே ஏற்பாடு வேண்டும் என்றேன். சொன்னது மதியம். அன்று இரவே மூன்றரைக்கு அனுப்பி விட்டார். இந்த உலகத்தில் எவன் ஐயா செய்வான் இதையெல்லாம்?

ஆனால் சீனி இங்கே என் வீட்டுக்குள் ஜென்ம விரோதி. ஏன் தெரியுமா? என்னுடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவந்திகா சீனியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டாளாம். சீனி மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போய் விட்டாராம்.

எப்பேர்ப்பட்ட அயோக்கியன்!

அதிலிருந்து நான் – சொன்னால் நம்ப மாட்டீர்கள் – புத்தக வெளியீட்டு விழாவே வைப்பதில்லை. எதுக்கு வம்பு?

புத்தக வெளியீட்டு விழா வைத்தால் வீடே அமளிதுமளி ஆகி விடுகிறது. நீ இவளைப் பார்த்து இளித்தாய். அவளைப் பார்த்து இளித்தாய். இவளை மேடைக்கு அழைத்தாய். என்னை அழைக்கவில்லை. இப்படி நூறு புகார்.

இப்போது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பெட்டியோ நாவலுக்கு வெளியூரில் வெளியீட்டு விழா வைக்கலாம் என்கிறார். சரி என்றேன். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்த ஊருக்குப் போய் வந்தால் முடிந்தது கதை. இல்லை, நண்பர் இன்னொரு விபரீதமான யோசனையும் வைத்திருக்கிறார். அவந்திகாவையும் விழாவுக்கு அழைக்க இன்று வெளியூரிலிருந்து என் வீட்டுக்கு வருகிறார். அவந்திகாவை மனநோய் விடுதிக்கு அனுப்புவதற்கான சிறப்பான ஏற்பாடு.

சாமி, நான் என்ன சமூக நாவலா எழுதுகிறேன்? அல்லது, சரித்திர நாவல் எழுதுகிறேனா? அல்லது, பக்தி நாவல் எழுதுகிறேனா? பெட்டியோ நாவலைப் படித்தால் அவந்திகாவின் நிலை என்ன ஆகும்? நான் அந்நியன் பட ஹீரோ மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வெளியில் ஒரு சாரு. வீட்டில் ஒரு சாரு. இரண்டையும் பார்த்தால் அவந்திகா காலி. ஏன் சாமி அவளை இப்படித் துன்புறுத்துகிறீர்கள்? எந்தப் பெண்ணுக்காவது தன் கணவனின் காதல் கதைகளைப் படிக்க மனம் வருமா? விஷம் வைத்துக் கொன்று விட மாட்டார்களா?

இப்போது பெட்டியோ வெளியீட்டு விழா வைத்தால் அதில் பெட்டியோ நாவலே இருக்கக் கூடாது. ஒரு பாராட்டு விழா மாதிரி வைத்து எனக்கு ஒரு சால்வை போர்த்தலாம். அவ்ளோதான். அன்பு என்ற நாவல் பிரதியே என் வீட்டில் கிடையாது. பெட்டியோவும் அப்படித்தான். என் எழுத்து எதையுமே அவந்திகா படித்ததில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அப்படி இருப்பதால்தான் நானும் நிம்மதியாக எழுத முடிகிறது. அவளும் நிம்மதியாக வாழ முடிகிறது. இரண்டையும் இணைத்தால் அவள் வாழ்க்கை நாசம். என் வாழ்க்கையும் காலி.
என் எழுத்து, என் குடும்பம் இரண்டையும் தயவுகூர்ந்து இணைக்காதீர்கள். இதனால் யாருக்கும் எந்த அனுகூலமும் இல்லை.

இன்னொரு முக்கியமான விஷயம். என் வீட்டில் பணிப்பெண்கள் யாரும் இல்லை. நானும் அவந்திகாவும்தான் மாற்றி மாற்றி பாத்திரம் தேய்க்கிறோம். பணிப்பெண்ணின் மகனுக்கு 42000 ரூ. பள்ளிக்கட்டணம் கட்டினாள். பணிப்பெண் நின்று விட்டார். மட்டுமல்லாமல் வீட்டில் பத்து பூனைகள் உள்ளன. கீழே தரைத்தளத்தில் பத்து பூனைகள். அவளும் என்னோடு கிளம்பி ஊருக்கு வந்து விட்டால் இந்தப் பத்து பூனைகளுக்கும் யார் உணவு கொடுப்பார்கள்? என் மகன் திருமணம் மும்பையில் நடந்தபோதே நான் காலையில் போய்விட்டு இரவு திரும்பி விட்டேன். நாய்கள் இருந்தன. அவைகளுக்கு உணவு கொடுப்பதற்காகவும், அவைகளை வெளியே மலஜலம் கழிக்க அழைத்துச் செல்வதற்காகவும். இப்படி இருக்கும்போது புத்தக விழாவுக்கெல்லாம் அவள் வெளியூர் வருவாளா?

இன்னொரு முக்கியமான விஷயம். அவள் கடந்த முப்பது ஆண்டுகளாக என்னோடு சேர்ந்து வெளியூர் போனதில்லை. நாய்கள் இல்லாதபோது 28 ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் இலக்கியச் சந்திப்புக்குப் போனதுதான் விதிவிலக்கு. அவளுக்கு வெளி சாப்பாடு ஒத்துக்கொள்ளாது. ஒரு வேளை வெளியில் சாப்பிட்டால் ஒரு மாதம் வாந்தி எடுப்பாள். செத்துப் பிழைப்பாள். அவளுக்கு வீடுதான் சொர்க்கம். அதனால்தான் பிட் நோட்டீஸ் கொடுப்பது போல அன்பு நாவலை என் நண்பர்கள் அனைவருக்கும் படிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.