கேரள இலக்கிய விழா – 1

நண்பர்கள் பலரும் கோழிக்கோடு வருவதற்கு டிக்கட் போட்டு விட்டார்கள்.  என் அமர்வு 13ஆம் தேதி காலை பத்து மணிக்கும் அதே நாள் மதியம் இரண்டு மணிக்கும் உள்ளது.  காலை அமர்வு ஔரங்ஸேப் பற்றி.  மதிய அமர்வு மொழிபெயர்ப்பு பற்றியது. 

நான் கோழிக்கோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி இரவு எட்டு மணி அளவில் வந்து சேருவேன்.  பதினோராம் தேதியே சென்றிருக்க வேண்டும்.  தேதியில் கொஞ்சம் குழப்பி விட்டேன்.  எனவே இரண்டு இரவுகள்தான் அங்கே தங்குவேன்.  பன்னிரண்டு, பதின்மூன்று. 

பன்னிரண்டாம் தேதி இரவில் நண்பர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஏனென்றால், எந்த இலக்கிய விழாவுக்கும் அதற்கு முந்தின தினமே போய் விடுவதால், அந்த இரவு முழுவதும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, காலையில் ஐந்து மணிக்கு உறங்கி ஒன்பது மணிக்கு எழுந்தால் உடல் களைத்து விடுவது வெளியில் தெரிகிறது.  கேட்கிறார்கள்.  நான் ஓடியாடி விளையாடினாலும் முகம் காட்டிக்கொடுத்து விடுகிறது போல.  அதனால் பன்னிரண்டாம் தேதி நான் யாரையும் சந்திக்க இயலாது.  பத்து மணிக்கே உறங்கினால் ஐந்துக்கு எழுந்து விடுவேன்.  எத்தனை மணி நேரம் நித்திரை கொள்கிறோம் என்பதைவிட எப்போது நித்திரை கொள்கிறோம் என்பதையே என் சரீரம் எடுத்துக் கொள்கிறது. 

எனக்கு ஆறு மணி நேர உறக்கம் போதும்.  ஆனால் நள்ளிரவு ஒரு மணிக்குப் படுத்து ஏழு மணிக்கு எழுந்தால் உடல் ஆட்டம் கண்டு விடுகிறது.  ஆனால் பதினோரு மணிக்குப் படுத்து ஐந்து மணிக்கு எழுந்தால் எந்தப் பிரச்சினையும் தெரிவதில்லை. 

பதின்மூன்றாம் தேதி இரவு முழுவதும் விழித்திருக்கலாம்.  பிரச்சினை இல்லை.  எனக்கு பதினான்கு மாலைதான் விமானம். 

இப்படி இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த விருப்பமும் இருப்பதில்லை.  காரணம், ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனைத் தூக்கி கால்பந்தாட்ட மைதானத்தில் விடுவதைப் போன்றது அது.  நான் தமிழிலேயே தத்தளிப்பேன்.  ஆங்கிலத்தில் விட்டால் என்ன ஆகும்? 

ஆனாலும் ஏன் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்கிறேன்? சும்மா கலந்து கொள்வதில்லை.  வெறி பிடித்ததுபோல் முயற்சி எடுத்துக் கலந்து கொள்கிறேன்.  அவர்களாக என்னை அழைக்காவிட்டால் நானே நிர்வாகிகளுக்கு போன் போட்டு ஆளைப் பிடித்துத் தேளைப் பிடித்துக் கலந்து கொள்கிறேன்.  ஒரு மனிதனிடமும் பேச முயற்சிக்காத நான் ஏன் இந்த அவலமான, அவமானகரமான காரியங்களைச் செய்கிறேன்? 

எழுபது வயது வரை நான் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எழுபது வயது வரை நான் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.  அமெரிக்காக்காரன்கூட எனக்கு விருது கொடுத்துவிட்டு நாகர்கோவில்காரர் பேச்சையும் லண்டன்காரர் பேச்சையும் கேட்டு விருதை மறுக்கிறான்.  இன்று வரை ஒரு முக்கியமான இலக்கிய விழாவுக்கு எனக்கு அழைப்பு இல்லை. ஜெயமோகன் செல்கிறார்.  போட்டுத் தள்ளு, போட்டுத் தள்ளு என்று என்னைப் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.  அதனால்தான் நான் அவமானகரமான காரியங்களைச் செய்து இம்மாதிரி விழாக்களில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறேன்.  (உங்களையெல்லாம் சாரு திட்டி எழுதியிருக்கிறார் என்று இலக்கிய விழா நிர்வாகிகளுக்கு நாளையே நாகர்கோவிலிலிருந்து செய்தி போய்விடும் பாருங்கள்! அதன் பிறகு அவர்கள் என்றென்றைக்கும் என்னை விழாவிலிருந்து விலக்கி வைப்பார்கள்!)

இப்படியெல்லாம் செய்து நான் இம்மாதிரி இலக்கிய விழாக்களில் ஏன் பங்கெடுக்க வேண்டும்?

இல்லாவிட்டால் என் பெயரே இலக்கியத்திலிருந்து அழிக்கப்பட்டு விடும்.  ஔரங்ஸேப் நாவலை இந்தியாவின் ஆக முக்கியமான பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  ஆனாலும் நான் முரட்டுத்தனமாகவும், மூர்க்கமாகவும் பிரச்சாரம் செய்யாவிட்டால் அந்த நாவல் டப்பாவுக்குள் போய் விடும்.  எனக்குக் கொலை மிரட்டல் விட்டு என்னை அகில உலக இலக்கிய சூப்பர் ஸ்டாராக மாற்றித் தருவதற்கு ஜாதிக்கட்சி எதுவும் முன்வரவில்லை.  அதனால் நானே என் பெயரை உரக்கக் கூவிக்கொள்ள வேண்டிய அவலநிலையில் இருக்கிறேன். 

இதற்கெல்லாம் ஒரே காரணம், தமிழ்ச் சமூகம்தான்.

ரியூ முராகாமியோ அல்லது வேறு எந்த ஜப்பானிய எழுத்தாளரின் நூலோ வெளியானால் குறைந்த பட்சம் ஆறே மாதங்களில் ஒரு லட்சம் பிரதி விற்கிறது.  தமிழில் ஐநூறு.  வித்தியாசம் புரிகிறதா?  இந்த ஒரே காரணத்தினால்தான் ரியூ முராகாமியின் நாவலின் இரண்டாம் பதிப்பில் இருபது சர்வதேசப் பத்திரிகைகளின் மதிப்புரையை வெளியிடுகிறார்கள்.  என் புத்தகங்களுக்கு இரண்டாம் பதிப்பே இல்லை.  ஏனென்றால், முதல் பதிப்பே குடோனில் கிடக்கிறது.  அல்லது, ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்.  அம்பது பிரதிதான்.  அப்படியே மதிப்புரை வந்தாலும் நான் எழுதிய புத்தகத்தை மொழிபெயர்ப்பு நூல் என்று போடுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.  இந்த சமூகம் விளங்குமா?  ஆனாலும் எனக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.  என் வீட்டுக்கு வந்த சமையல்காரப் பெண்மணிக்கு எரிவாயு அடுப்பு பற்ற வைக்கத் தெரியாது என்று சொன்னார்.  அனுப்பி வைத்து விட்டோம்.  இந்த நிலையில் பத்திரிகையாளரிடம் மட்டும் திறமையை எதிர்பார்த்தால் எப்படி?  தேசமே சாக்கடையில் விழுந்து கிடக்கும்போது ஒரு சாரார் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

என்னுடைய நாவல் ஒரு லட்சம் பிரதி விற்றால் நான் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த ஊரிலும் நடக்கும் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டேன்.  என்னைச் சந்திப்பதே சிரமமாகி விடும்.  தாமஸ் பிஞ்ச்சோன் உலகப் பிரசித்தி பெற்றவர்.  ஆனால் அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருப்பார் என்று யாருக்குமே தெரியாது.  அவருடைய புகைப்படம்கூட யாரிடமும் இல்லை.  எந்தப் பேட்டியும் கொடுத்ததில்லை.  

சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மேடையில் ஒரு பானையை வைக்கச் சொல்லுவாராம்.  எப்போதுமே போதையில் இருப்பதால் வாந்தி வந்தால் எடுப்பதற்காக பானை.  நாங்களோ இங்கே எல்லோரையும் நக்க வேண்டியிருக்கிறது. 

நான் ஒரு எழுத்தாளன்.  எழுதுவது மட்டுமே என் வேலை.  நான் எதுக்கு ஐயா என் நாவலைப் பற்றிப் பேச வேண்டும்?  நான் எதுக்கு ஐயா மொழிபெயர்ப்பு பற்றிப் பேச வேண்டும்?  சென்னையிலிருந்து கோழிக்கோடு வரை வந்து என்னைச் சந்திக்க நினைக்கும் நண்பர்களை ”பன்னிரண்டாம் தேதி என்னைச் சந்திக்காதீர்கள், நான் பத்து மணிக்கே தூங்கப் போகிறேன், காலையில் பத்து மணிக்குப் பரீட்சை இருக்கிறது” என்று எழவு எடுக்க வேண்டும்?  எத்தனை கேவலம் இது?  அங்கே அமெரிக்காவில் என்னடாவென்றால், மேடையில் கலயம் வையுங்கள், குடித்து விட்டு வாந்தி எடுப்பேன் என்கிறான் எழுத்தாளன்.  இங்கே நாங்களோ ஸ்தாபனங்களின் குண்டியைக் கழுவ வேண்டியிருக்கிறது!  எப்பேர்ப்பட்ட அவலம் பாருங்கள். 

இதையெல்லாம் செய்யாமல் விடலாம்.  அசோகமித்திரன் மாதிரி சாக வேண்டும்.  சாவுக்குப் பத்து பேர் வருவான்.  நான் தமிழர்களுக்கா எழுதுகிறேன்?  என் எழுத்து சர்வதேசத்துக்கும் ஆனது.  ஆகவேதான் வெளியே செல்ல முயல்கிறேன். 

ஆனால் என் சமூகம் என் புத்தகத்தை ஒரு லட்சம் பிரதி வாங்கினால் வெளிநாட்டுக்காரன் என்னைத் தேடி வருவான்.  இப்போது ஹாருகி முராகாமியையும், ரியூ முராகாமியையும் தேடி வருவதைப் போல. 

எழுபது வயது ஆகிறது.  இன்னும் என் ராஸ லீலா மொழிபெயர்ப்பு ஆகவில்லை.  பெட்டியோ மொழிபெயர்ப்பு ஆகவில்லை.  அன்பு மொழிபெயர்ப்பு ஆகவில்லை.  காமரூப கதைகள் மொழிபெயர்ப்பு ஆகவில்லை.  அப்படியே ஆனாலும் பதிப்பகம் கிடைக்கவில்லை.  மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்பு ஆனது.  ஆனால் என் பக்கத்து வீட்டு நண்பர்கள்தான் வெளியிட வேண்டியிருந்தது.  உலகம் செல்ஃப் ப்ப்ளிஷிங் செய்துகொண்டதாகச் சொல்லி மார்ஜினல் மேனை நிராகரித்து விட்டது.  இப்போது நான் மற்ற மொழிபெயர்ப்பு வெளியீட்டுக்காக ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன்.  நக்கிக்கொண்டிருக்கிறேன் என்றும் நீங்கள் இதை மாற்றி வாசிக்கலாம். 

இந்த அவலத்துக்கும், என்னுடைய அவலத்துக்கும் தமிழ்ச் சமூகம்தான் காரணம்.  ஒரு கன்னட எழுத்தாளர் – நாற்பது வயது – பத்து புத்தகம் எழுதியிருக்கிறார் – ஒரு புதினம் பதினைந்தாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டில் விற்கிறதாம்.  கன்னட மொழியில்தான் எழுதுகிறார்.  பெங்குவின், ஹார்ப்பர்காலின்ஸ் என்று அத்தனை பதிப்பகங்களும் அவருடைய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன.  ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு மெக்ஸிகோவில் நடந்ததாம்.  வெளியீட்டு விழாவுக்கு மெக்ஸிகோ போய் வந்தாராம்.  நாற்பது வயது.  பத்து புத்தகம்.  எனக்கு எழுபது வயது.  நூறு புத்தகம்.  தொகுக்கப்படாமல் இன்னும் ஐம்பது புத்தகம் உள்ளன. எனக்கு சென்னையை விட்டு வெளியே செல்ல சாத்தியமே இல்லாமல் இருக்கிறது. கன்னடம் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது.  நான் பிறந்த சமூகம் சினிமாவைக் கொண்டாடுகிறது.  எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம் போல் இருக்கிறது. 

அதனால் கோழிக்கோடு வரும் நண்பர்களே, நாம் பதின்மூன்றாம் தேதி காலை பத்து மணிக்கு என்னுடைய அரங்கில் சந்திப்போம்.  இன்னும் பலவற்றை அன்றைய இரவு சீலே வைனோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.