சக எழுத்தாளருக்கு ஒரு கடிதம்…

சென்ற ஆண்டு என்னை body shame செய்து வெகுவாக அழவிட்ட என் சக எழுத்தாளருக்கு,

இந்த ஆண்டும் புத்தக விழாவில் அதே ஸ்டாலில் நாம் சந்திக்க இருக்கிறோம்.  அது எனக்கு மிகுந்த அச்சத்தையும் அவல உணர்வையும் கசப்பையும் உண்டாக்குகிறது.  உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.  நான் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியைப் பார்த்து விட்டு, “என்ன கேடராக்டா சாரு?” என்றீர்கள்.  எனக்குக் கொட்டையில் அடி வாங்கியதுபோல் இருந்தது. யாராவது உடல் பயிற்சி செய்து இளைத்திருந்தால் “என்ன இளைத்து விட்டீர்கள், ஷுகரா?” என்று கேட்கும் அசடுகளைப் போன்ற கேள்வி உங்களுடையது.  இந்த இளைத்துப் போன கேள்வியையும் புத்தக விழாவில் நான் எதிர்கொண்டேன்.  அந்த ஒரு நாளில் மட்டும் நீங்கள் தொடர்ந்து என்னை ஒரு டஜன் தடவை பாடி ஷேம் செய்து கொண்டும் நக்கல் அடித்துக் கொண்டுமே இருந்தீர்கள். 

ஒரு வாசகரின் பெயர் புரியவில்லை.  அவருடைய ஆதார் கார்டை வாங்கிப் பார்த்து அவர் பெயரைத் தவறில்லாமல் எழுதிக் கையெழுத்திட்டேன்.  உடனே நீங்கள் “என்ன சாரு, ஆதார் கார்டை நீட்டினால்தான் கையெழுத்துப் போடுவீர்களா?” என்று நக்கல் அடித்தீர்கள்.  இப்படியே போய்க்கொண்டிருந்தது அன்றைய மாலைப்பொழுது முழுவதும்.    

உங்களை இலக்கிய உலகில் மிகவும் சிநேகபூர்வமானவர் என்றுதான் எல்லோருமே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் என்னிடம் மட்டும் காய்ச்சிய இரும்பினால் என் குதத்தில் குத்துகிறீர்கள்.  அது என் வரம்.  என்ன செய்ய?

ஆனால் என்னுடைய சந்தேகம் என்னவென்றால், உங்களுக்கு மனைவி, மகன், மகள் எல்லாம் இருக்கிறார்கள்.  பேரன் பேத்திகள் இருக்கிறார்கள்.  இப்படியெல்லாம் நீங்கள் அவர்களை டார்ச்சர் செய்வீர்களா?  மாட்டீர்கள்.  அப்படியானால் ஒரு கேள்வி.  உங்களுக்கு எழுத்தே வாழ்க்கை.  எழுத்தே முதன்மை.  எனக்கும் அப்படித்தான்.  அப்படியிருக்கும்போது உங்கள் சகாவை மட்டும் இப்படி அவமானப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?  மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி எல்லோருடனும் அன்புடன் இருந்துவிட்டு சக எழுத்தாளன் மீது மட்டும் ஏன் நஞ்சைக் கக்குகிறீர்கள்?

இதை என் நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்ட போது அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்.  என்னிடம் நாற்பது பேர் கையெழுத்து வாங்கினால் உங்களிடம் ரெண்டு பேர்தான் வாங்குகிறார்களாம்.  அதனால் ஏற்படும் பொறாமையினால்தான் நீங்கள் என்னை அவமானப்படுத்துகிறீர்கள். 

இதை நீங்கள் இதைவிட எளிதாகக் கையாளலாம்.   நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால் சாரு நாசமாகப் போக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.  என்னை முகத்துக்கு நேராக அவமானப்படுத்தி எனக்கு மன உளைச்சல் தருவதை விட அது உத்தமமான வழி.  அது உங்களுக்கும் கடவுளுக்குமான விஷயம்.  நான் அங்கே இல்லை.  அல்லது, உங்கள் சாமியிடம் சாருவைவிட நான் பிரபலம் ஆக வேண்டும் என்றாவது வேண்டிக் கொள்ளுங்கள்.  அதுவும் நலமே. 

என்னை விட்டு விடுங்கள் சாமி.

அடியேன்,

இந்த ஆண்டும் புத்தக விழாவுக்குக் கருப்புக் கண்ணோடியோடே வர இருக்கும்,

சாரு