மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு… (இரண்டாவது கடிதம்)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு…

அடியேனின் இரண்டாவது கடிதம்.

தங்களுடைய அதீதமான வேலை நெருக்கடிகளுக்கு இடையே இரண்டாவது கடிதமும் எழுதித் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.

இந்தக் கடிதத்தை நான் எழுதினாலும் பல நூறு பதிப்பகங்களின் குமுறலையே நான் பிரதிபலிக்கிறேன். காரணம், எப்போதுமே நான் ஒருவனே பூனைக்கு மணி கட்டுபவனாக இருந்து வருகிறேன்.

சென்னை புத்தக விழாவுக்காக அரசு புத்தக விழா நிர்வாகத்துக்கு (பப்பாஸி) ஆண்டு தோறும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் தருகிறது. இந்தப் பணத்துக்கு என்ன செலவு என்று யாருக்குமே தெரியாது. இந்தப் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கும் உரிமை அரசுக்கு இருக்கிறது.

சமீபத்தில் வெள்ள நிவாரண உதவித் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டபோது ஒரு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதில் உங்களிடம் கார் இருக்கிறதா, வெள்ளம் வீட்டுக்குள் வந்ததா என்பது போன்ற பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டன. என்னால் இத்தனை பொய் சொல்ல முடியாது என்று சொல்லி உதவித் தொகையை வாங்க மறுத்து விட்டாள் என் மனைவி. மூவாயிரம் ரூபாய்க்கே இத்தனை கண்காணிப்பு இருக்கும்போது 75 லட்சத்துக்கு எத்தனை கண்காணிப்பு இருக்க வேண்டும்? அரசுப் பணம் 75 லட்சமும் சரியானபடி செலவாகவில்லை; இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் பதிப்பகத்துக்கும் அந்தப் பணம் போய்ச் சேரவில்லை.

தாங்கள்தான் கவனிக்க வேண்டும்.

அன்புடன்,

சாரு நிவேதிதா