இன்று ஃபேஸ்புக்கைத் திறந்தால்தான் தெரிகிறது, நேற்று எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் நடந்திருக்கிறது என்று. ராம்ஜி எனக்காக சுஸ்வாதிலிருந்து முறுக்கு, மைசூர் பாகு, மாலாடு என்ற தெய்வீகப் பண்டங்களை வாங்கி, புத்தக விழாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்த விஷயமே இன்று ஃபேஸ்புக்கில் காயத்ரியின் பதிவைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. நான் கொஞ்சம் தாமதாகப் போனேன். அங்கே கைமுறுக்கு இருந்தது. மைசூர் பாகு, மாலாடு விஷயங்கள் அடியேன் அறியேன். முறுக்கு மட்டும் சாப்பிட்டேன். மற்ற ரெண்டும் முன்பே முடிந்து விட்டிருக்கிறது போல. என் பொருட்டு இரண்டிலும் ஒவ்வொன்று எடுத்து வைக்காத காயத்ரியின் அறமற்ற செயலை மன்னிக்கவே முடியவில்லை. எப்படியாவது இந்த ஆண்டிலாவது அவளை விஷ்ணுபுரம் வட்டத்திலிருந்து கடத்திக் கொண்டு வர அந்த விஷ்ணுதான் எனக்கு போதிய தந்திரோபாயங்களைத் தந்துதவ வேண்டும்.
பெங்களூர் சந்திப்பில் எனக்காக பனங்கிழங்கு, சின்ன எலந்தப் பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள் நண்பர்கள். இங்கே இந்த ஆண்டு புத்தக விழாவில் ராம்ஜி வாங்கிக் கொண்டு வந்தது கூட கைக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறது. அன்னபூரணியும் வெளியூரில் இருக்கிறார். என்னய்யா வாழ்க்கை இது என்று மன உளைச்சல் ஏற்படுகிறது.
இன்னொரு நகைமுரண். சுஸ்வாத் என் வீட்டுக்கு எதிரேதான் உள்ளது. அப்புறம் என்ன, நீரே வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே என்று கேட்கலாம். ரெண்டு தடைகள் அதற்கு. ஒன்று, வாங்குவதற்குக் காசு வேண்டும். அதையாவது எப்பாடு பட்டாவது திரட்டி, சுஸ்வாதில் வாங்கி விடலாம் என்றால், என் வீட்டுக்குள் சுஸ்வாதுக்கு அனுமதி கிடையாது. தாலிபான் ஆட்சியில் சுஸ்வாதுக்குத் தடை. இதையெல்லாம் அறிந்துதான் ராம்ஜி அந்த மைசூர்பாகு, மாலாடு என்ற தெய்வீகப் பண்டங்களை வாங்கியிருக்க வேண்டும். தாமதமாகப் போனதால் கிடைக்காமல் போயிற்று. ஓகே. யாதெனின் யாதெனின் நீங்குவான் நோதல் அதனின் அதனின் இலன். வள்ளுவன் வாழ்க!
சுஸ்வாதுக்கு ஏன் தடை என்ற நியாயமான கேள்வி உங்களுக்கு எழலாம். நான் எழுதிய அன்பு நாவலைப் படித்துப் பாருங்கள். தெரியும். நேற்று பல இளம் பெண்கள் அன்பு நாவலைப் படித்து அரிய பெரிய உண்மைகளைப் பெற்றடைந்ததாகச் சொன்னார்கள். அன்பு நாவல் வந்ததிலிருந்தே இந்த அபிப்பிராயங்களை நான் பெண்களிடமிருந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஆம், உண்மைதான். அன்பு பெண்களுக்கான நாவல். அத்தனை பெண்களும் படிக்க வேண்டிய நாவல். அதில் செக்ஸ் இல்லை. ட்ரான்ஸ்கிரஸிவ் விஷயங்கள் இல்லை. கிறித்தவர்கள் எப்படி பைபிள் படிக்கிறார்களோ அந்த அளவுக்குப் பெண்களும் ஆண்களும் படிக்க வேண்டிய நாவல் அன்பு.
நேற்று பெட்டியோ இருபது பிரதிகள் வந்தது. இருபதும் விற்று விட்டன. இன்றும் இருபது வந்தால் போதாதே? மாண்புமிகு அச்சகத்தார்தான் என் மீது கருணை காண்பிக்க வேண்டும். ஒரு அம்பது அம்பதாக அனுப்பினால் இந்தப் புத்தக விழாவில் ஐநூறாவது போகும். இருபது இருபதாக அனுப்பினால் இந்த ஜென்மத்தில் என்னால் சுஸ்வாதில் மைசூர் பாகு வாங்க ஏலாது.
நேற்று ஒரு பேரழகியைச் சந்தித்தேன். என் வாழ்நாளில் அப்படி ஒரு பேரழகியைச் சந்தித்தது இல்லை. ஃபோன் நம்பர் கேட்கலாமா என்று நான்கு மணி நேரம் யோசித்து விட்டு என்னுடைய கனவான் இமேஜ் தடுத்ததால் தைரியம் வராமல் விட்டு விட்டேன். அது நேற்றைய இரண்டாவது சம்பவம்.
நேற்று சவேரா ஓட்டலில் கவிதா சொர்ணவல்லி, மஹாலட்சுமி (கடவுளே, அடுத்த ஜென்மத்தில் என்னைப் பெண்ணாகப் பிறக்க வைத்து இதே கண்களைக் கொடு!), தட்சிணாமூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கார்ல் மார்க்ஸ், அருண் மற்றும் ஒரு நண்பர் (ஆண்கள் பெயரை என் மூளை சடுதியில் மறந்து விடுகிறது, மன்னிக்கவும்!) எல்லோரையும் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நாளுக்கு நாள் கார்ல் இளைஞனாகிக் கொண்டு வருகிறார். எங்கள் ஊர் மண்ணின் மகத்துவம்தான் என்றாலும் வேறு என்ன ரகசியம் என்று அடுத்த முறை சந்திக்கும்போது கேட்க வேண்டும்.
இன்று மாலை நான்கு மணிக்கே வந்து விடுவேன். எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். 598 C.