புத்தக விழா குறிப்புகள் – 5

பொங்கல் அன்று (15.1.2024) நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்குக்குப் போனேன்.  அமைதியாக இருந்தது.  காயத்ரி இல்லாததே காரணம் என்று வெளிப்படையாகத் தெரிந்தது.  ராம்ஜி சிந்தனையில் இருந்தார்.  வித்யா தீவிர சிந்தனையில் இருந்தார்.  பெங்களூரிலிருந்து என் வாசகியும் தோழியுமான ஸ்ரீயும் அவள் கணவர் சதீஷும் வந்திருந்தார்கள்.  கொஞ்ச நேரம் பொறுத்து ”காயத்ரி இல்லாமல் அரங்கே வெறிச்சோடின மாதிரி தெரிகிறது, அவர் இருந்திருந்தால் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும், செம பாஸிடிவ் எனர்ஜியாக இருக்கும், அவர் இல்லாமல் ‘டல்’ அடிக்கிறது” என்று என்னிடம் தனியாகச் சொன்னார் சதீஷ்.  இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து சதீஷ் சொன்னதையே ஸ்ரீயும் வேறு வார்த்தைகளில் சொன்னாள்.  சதீஷ் என்னிடம் சொன்னது ஸ்ரீக்குத் தெரியாது என்பதுதான் விசேஷம்.  இவ்வளவு காலம் பழகியும் எனக்கே நேற்று அவர்கள் சொன்ன பிறகுதான் காயத்ரியின் பாஸிடிவ் எனர்ஜி பற்றித் தெரிந்தது. 

சக எழுத்தாளர்களையும் காணவில்லை.  இப்படி ஈ ஓட்டிக்கொண்டிருப்பதைவிட யாராவது சக எழுத்தாளர் என்னை body shame பண்ணினால்கூடத் தேவலை என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்.  ”புத்தக விழா வளாகத்துக்கு உள்ளே இருப்பது மூச்சுத் திணறுகிறது” என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார் சதீஷ்.  சரி, ஜெயமோகனைப் பார்த்து ஒரு வணக்கம் போட்டுவிட்டு வரலாம் என்று விஷ்ணுபுரம் அரங்கத்துக்கு நானும் ஸ்ரீயும் சென்றோம்.   ஆனால் அங்கே ஜெ. ஒரு பத்துப் பதினைந்து பேருக்கு முன்னே நின்று ஒரு பேருரையோ சிற்றுரையோ ஆற்றிக்கொண்டிருந்தார்.  அதனால் அங்கிருந்து கிளம்பி உயிர்மை வந்தோம்.  வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் ஒரு பேரழகியோடு பேசிக்கொண்டிருந்தார்.  உடனே நான் அங்கே பில் போட்டுக்கொண்டிருந்த ’பெட்டியோ’வுக்கு ஸ்ரீயை அறிமுகப்படுத்தினேன்.  சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.  மனுஷ்யபுத்திரனின் ஒரு தொகுதி வேண்டும் என்றாள் ஸ்ரீ.  வாங்கிக்கொண்டு வந்து பில் போட்டு பணத்தைக் கொடுத்து விட்டு மனுஷிடம் வந்து கையெழுத்து வாங்கினாள் ஸ்ரீ.  புத்தகத்தில் இருந்த பில்லைப் பார்த்து விட்டு மனுஷ், எதிரே இருந்த பெட்டியோவிடம் “ஏன் பில் போட்டாய்?” என்று கோபிக்க, பெட்டியோ ஆள் காட்டி விரலைக் காண்பித்து மனுஷை மிரட்டினார். 

டென் டௌனிங் பப்பில் புதன்கிழமை தோறும் பெண்களுக்கு மதுபானம் இலவசம்.  எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.  அதேபோல் உயிர்மையிலும் பெண்களுக்கு கவிதைத் தொகுதி இலவசமா என்று கேட்க நினைத்து பெட்டியோவிடம் மாட்ட வேண்டாம் என்று கேட்காமல் விட்டுவிட்டேன்.  பிறகு மனுஷ் நடுவிலும் நானும் ஸ்ரீயும் ஒவ்வொரு பக்கமுமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு ஸீரோ டிகிரி அரங்கு திரும்பினோம்.  இருவரும் இன்னமும் தீவிர சிந்தனையில்தான் இருந்தார்கள். 

பிரகாஷ் குடும்பத்துடன்

இடையில் நைஜீரியாவில் வசிக்கும் பிரகாஷும் அவர் மனைவியும் குழந்தையும் வந்து புத்தகங்களில் கையெழுத்து வாங்கிச் சென்றார்கள்.  அப்போது பிரகாஷின் மனைவி சொன்ன வார்த்தைகளின் பலத்திலேயே என்னால் ஓராண்டுக் காலம் நிம்மதியாக எழுதிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.  ”தொடர்ந்து உங்கள் எழுத்தைப் படித்துக்கொண்டே இருக்கிறோம்.  அதனால் நீங்கள் எங்கள் குடும்பத்திலேயே ஒருவராக ஆகி விட்டீர்கள்.”  இதுதான் அவர் சொன்னதன் சாரம்.

ஆறரைக்குப் பிறகு யாரும் கையெழுத்துக்கு வரவில்லை.  ஏழுக்கு மேல் டென் டௌனிங் போகலாமா என்று கேட்டிருந்தாள் ஸ்ரீ.  ஏழு மணிக்கு ஸ்ரீக்கு ஃபோன் போட்டேன்.  கால் மணி நேரம் கழித்து வருகிறேன் என்றாள். 

எனக்கு ஆச்சரியம்.  அது என்ன கால் மணி நேரம்?  எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  ராம்ஜி, வித்யா இருவரோடு சேர்ந்து நானும் சிந்தனையில் இறங்கினேன்.  ஏழே காலுக்கு ஸ்ரீயிடமிருந்து ஃபோன்.

விஷ்ணுபுரம் அரங்குக்குச் சென்றிருந்தார்களாம்.  அப்போது ஜெயமோகனைச் சுற்றி கூட்டம் இல்லை.  கூட்டம் புதல்வரிடம் மாறியிருந்த்தாம்.  ஸ்டோரீஸ் ஆஃப் தெ ட்ரூவில் கையெழுத்து வாங்கினேன் என்றாள் ஸ்ரீ.  எப்படிப் பேசினார் என்று கேட்டேன்.  உங்களைவிட சிநேகமாகப் பேசினார் என்றாள்.  ஜெ. பேசலாம்.  ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  நான் பேசினால் கதையாகும்.  நம் பாணியிலேயே இருப்போம் என்று நினைத்துக்கொண்டேன். 

டென் டௌனிங் போனோம்.  ஈ காக்கையைக்கூட காணோம். இன்றைக்கு விடுமுறையா என்று சந்தேகம் வந்து விட்டது.  அப்போது “வாங்க சார், எங்கே ரொம்ப காலமாக காணோம்?” என்ற பணிவான குரல் கேட்டது.  டென் டௌனிங் பணியாளர்.  பத்து வருட காலம் வாரம் இரண்டு முறை மதியம் ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை காலம் கழித்திருக்கிறோம்.  அந்தப் பழக்கம்.

சென்னையில் இருக்கும்போது நான் மது அருந்துவதில்லை என்பதால் மூவரும் காக்டெயிலுக்குப் பதிலாக மாக்டெயில் அருந்தி விட்டு கொஞ்சமாக உணவு உட்கொண்டோம். டென் டௌனிங் சாப்பாடு பிரமாதமாக இருக்கும். 

ஒன்பது மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினேன்.