நேற்றைய மாலை இனிதே கழிந்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமாதித்யனை சந்தித்தேன். கலி முற்றி விட்டதால் நானும் கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லி என் கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலையும் பெட்டியோவையும் அவரிடம் அளித்தேன். (ஸ்மாஷன் தாரா என்பது தவறு; ஸ்மஷான் தாரா என்றே வந்திருக்க வேண்டும். அடுத்தடுத்த பதிப்புகளில் (!) அந்தத் தவறை நீக்க வேண்டும்.) இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே மாதிரி இருக்கிறார். ஒரு மாற்றமும் இல்லை.
நேற்று காயத்ரி வந்திருந்ததால் ஸீரோ டிகிரி அரங்கம் கலகலப்பாக இருந்தது. பலரும் கையெழுத்து வாங்கிச் சென்றார்கள். ஆனாலும் போன வருடம் இருந்த கூட்டம் இந்த ஆண்டு இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
நேற்று ஃபோஸ்தீன் என்ற ஃப்ரெஞ்ச் பெண்மணியைச் சந்தித்தேன். காலஞ்சென்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் Serge Doubrovsky ஸீரோ டிகிரி நாவலைப் படித்து விட்டு என்னைத் தொடர்பு கொண்ட விஷயம் உட்பட தெரிந்து வைத்திருந்தார். என் எழுத்தில் ஜார்ஜ் பத்தாயின் தாக்கம் பற்றி பத்து நிமிடம் பேசினார். இந்த அளவுக்கு என் எழுத்து பற்றித் தெரிந்து வைத்திருக்கும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரரை இப்போதுதான் சந்திக்கிறேன். ஆச்சரியமாக இருந்தது.
அகிலா ஸ்ரீதர் தான் மொழிபெயர்த்த ஹெர்மன் ஹெஸ்ஸேயின் தீத்தழல் என்ற நூலைக் கொடுத்தார். விரைவில் படித்து விட்டு எழுதுகிறேன்.
நேற்று வேறு சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்தன. அதை ஒரு குறுங்கதையாக எழுதுகிறேன்.