இன்று ஒரு இளம் நண்பனைச் சந்தித்தேன். மருத்துவ மாணவன். 26ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் நான் பேசுகிறேன், வந்து விடுங்கள் என்றேன். அப்படியா, எனக்குத் தெரியாதே என்றார். அப்படியானால் நீங்கள் என் இணையதளத்தைப் படிப்பதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். காரணத்தைப் பிறகு சொல்கிறேன் என்றார்.
எனக்குக் காரணம் தேவையில்லை. என் இணையதளத்தை தினமும் படிக்க ஐந்து நிமிடம் ஆகும். நான் இலவசமாக இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் பத்து பேர்தான் சந்தா அனுப்புகிறார்கள். அப்படி இலவசமாகக் கிடைக்கும் ஞானத்தை வாசிப்பதற்கு ஐந்து நிமிடம்கூட இல்லாதவர்கள் என் நட்புப் பட்டியலிலிருந்து விலகி விடலாம்.
அதேபோல் நான் எப்படி இந்தத் தமிழ்ச் சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் ஆயிரம் முறை எழுதி விட்டேன். நான் இருபத்தைந்து வயதில் எழுத வந்தவன். ஐம்பது வயது வரை நான் தான் என் எழுத்தைப் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது. பிரசுரம் செய்ய ஒரு பதிப்பகம்கூட முன்வரவில்லை. அவந்திகா வைத்திருந்த அத்தனை நகைகளையும் விற்றுத்தான் ஒவ்வொரு புத்தகமாகப் பதிப்பித்தேன். ஐம்பது வயதில்தான் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் என் நூல்களைப் பதிப்பிக்க முன்வந்தது. பிறகு இப்போது ஸீரோ டிகிரி பதிப்பகம்.
ஸீரோ டிகிரி நாவலை நானே அச்சிட்டு நானே விற்றேன். சென்னை சாந்தி தியேட்டர் வாசலில் அப்போது (இப்போது என்ன நிலை என்று தெரியாது) பாலியல் தொழிலாளிகளும் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் செக்ஸ் புரோக்கர்களும் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் பெண்ணின் சதையை விற்பவர்கள். நான் அந்த மாமாக்களோடும் பாலியல் தொழிலாளிகளோடும் நின்றுகொண்டு என் ஆன்மாவை விற்றுக்கொண்டிருப்பேன். ஆம், என் ஆன்மாவை உருக்கியே என் எழுத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.
அவ்வாறாகத்தான் என் எழுத்தைத் தமிழ் மக்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
இப்போது என் எழுபதாவது வயதில்தான் இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படுகிறேன். இதையும் என் நண்பர்கள் புறக்கணித்தால் அவர்களை நான் என் நட்புப் பட்டியலிலிருந்து விலக்கி விடுவேன். எனக்கு நீங்கள் கை கொடுக்க வேண்டும். நான் பெங்களூரில் Book Signing நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். மூன்று புத்தகக் கடைகளில் தலா அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். ஒருத்தர்கூட வந்து கையெழுத்து வாங்கவில்லை. காரணம், நான் பெருமாள் முருகன் இல்லை. நான் விவேக் ஷென்பக் இல்லை. என் மொழியிலும் மலையாளத்திலும் நான் சூப்பர் ஸ்டார். ஆனால் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வெளியே நான் ஒரு பெயரற்றவன்.
இப்போதும் எந்த இலக்கிய விழாக்களுக்கும் நான் அழைக்கப்படுவதில்லை. நானேதான் சென்று சென்று கேட்கிறேன். அப்படி நான் அழைக்கப்பட்டாலும், காலையில் பத்து மணிக்குத்தான் என் அமர்வுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. யார் காலை பத்து மணிக்கு வருவார்கள்?
எப்படியிருந்தாலும் என் எழுத்து தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றே ஆக வேண்டும். காரணம், நான் எழுதுவது ஆயிரம் பேருக்காக அல்ல. ஒட்டு மொத்த மானுட குலத்துக்காக நான் எழுதுகிறேன்.
துருக்கி பற்றி நிலவு தேயாத தேசம் என்று ஒரு நூலை எழுதினேன். அப்படி ஒரு நூலை ஓர்ஹான் பாமுக் கூட எழுதவில்லை. அந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. To Byzantium: A Travelogue. ஆனால் துருக்கியில் யாருக்குமே அந்த நூல் பற்றித் தெரியாது. அடப்பாவிகளா, உங்கள் தேசத்தைப் பற்றி இப்படி ஒரு நூல் உலகில் எந்த ஒரு மொழியிலும் எழுதப்பட்டதில்லை. அது கூட உங்களுக்குத் தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.
இப்படிப்பட்ட நிலையில்தான் நான் மீண்டும் மீண்டும் என்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நான் எழுதுவது நாட்குறிப்பு அல்ல, என் அலமாரியிலேயே வைத்துக் கொள்வதற்கு. நான் எழுதுவது ஒரு தேசத்தின் கதை. ஒரு சமூகத்தின் கதை. ஒரு காலகட்டத்தின் கதை. துருக்கி மொழியில்கூட கிடைக்காத துருக்கியின் கதை துருக்கி மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டாமா?
விஷயத்துக்கு வருகிறேன். மீண்டும் மீண்டும் நான் ஆங்கில உலகுக்கு நான் யார் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. பாலியல் தொழிலாளிகளோடும் மாமாக்களோடும் நின்று ஸீரோ டிகிரி நாவலை விற்ற நான் இன்று எழுபது வயதிலும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. எந்த சாதிச் சங்கமும் என் உயிரை எடுப்பேன் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் புகைப்படமும் பெயரும் நியூயார்க்கரில் வரும். அப்படி நடக்காததால் நீங்கள்தான் என்னை முன்னிறுத்த வேண்டும்.
ஹிந்து இலக்கிய விழாவுக்கு நீங்கள் வர வேண்டும். வராவிட்டால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள் என்றே புரிந்து கொள்வேன். ஏனென்றால், என் பெயரே தெரியாத ஆங்கில உலகுக்கு நான் யார் என்று என் வாசகர்களின் எண்ணிக்கையை வைத்துத்தான் நான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
சென்னையில் ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 இலிருந்து 5.55 வரை நானும் நந்தினி கிருஷ்ணனும் உரையாடுகிறோம். இடம்: மேலே அழைப்பிதழில் உள்ளது. ஸர் முத்தா வேங்கடசுப்பாராவ் கான்ஸர்ட் ஹால் (லேடி ஆண்டாள் ஸ்கூலில் உள்ளது), ஹாரிங்டன் ரோட், சென்னை.