புத்தக விழா குறிப்புகள் – 7

நேற்று (19.1.2024) அவ்வளவாக கூட்டம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே அமர்ந்திருந்தேன். பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை. வித்யா, ராம்ஜி, காயத்ரி மூவரும் இட்லி வடை காஃபி சாப்பிட வெளியே சென்றிருந்தார்கள். அவர்கள் சென்ற சமயத்தில் நான் வேப் அடிக்க அரங்குக்கு அருகில் இருக்கும் கழிப்பறை பக்கம் சென்றிருந்தேன். வந்து பார்த்தால் யாரும் இல்லை. அரை மணி நேரம் சென்றது. பாடி ஷேமிங் செய்வதற்குத் தகுந்தாற்போல் பல விஷயங்கள் என்னிடம் இருந்தன. அதையாவது செய்து உற்சாகப்படுத்த சக எழுத்தாளர்களும் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்னால் என் கழுத்தில் ஜொலிக்கும் சங்கிலிகளைப் பார்த்து வரிச்சூர் செல்வம் மாதிரி இருக்கிறது என்று சொன்னது ஒரு பெட்டியோ என்பதால் கோபத்துக்குப் பதிலாக மகிழ்ச்சியே ஏற்பட்டது இயற்கையின் கோளாறு.

இப்படியே எவ்வளவு நேரம் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? சீனியும் அப்போது வந்திருக்கவில்லை. கிளம்பி விடலாம் என்று நினைத்தபோது வித்யா, ராம்ஜி, காயத்ரி மூவரும் வந்தார்கள். தொடர்ந்து ஒரு சம்பவமும் நடந்தது. ஒரு வாசகர் வந்து பெட்டியோ, அந்தோனின் ஆர்த்தோ நாடகம் இரண்டையும் கொண்டு வந்து என்னிடம் கையெழுத்து வாங்கி விட்டு ஒரு கத்தை ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார். எண்ணிப் பார்க்காமல் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு நன்றி சொன்னேன். இரண்டு புத்தகங்களுக்குமான விலையை வித்யாவிடம் கொடுத்தேன். வீட்டுக்கு வந்து எண்ணிப் பார்த்தபோது ஐயாயிரம் ரூபாய் இருந்தது.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரே சம்பவ மயம்தான். அதையெல்லாம் எழுத முடியாது. இப்படியாக நேற்றைய பொழுது இனிதே கழிந்தது.

***

முந்தாநாள் (18.1.2024) ரிஷான் ஷெரிஃபின் புத்தகங்களை வாங்க எதிர் வெளியீடு அரங்கு சென்றிருந்தேன். சாமிமலை (சுஜித் ப்ரசங்க எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு), ஐந்து விளக்குகளின் கதை (சிங்கள எழுத்தாளர் சுஸந்த மூனமல்ஃபே சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு), ஊழின் அடிமையாக (மரியா ரோஸா ஹென்ஸனின் சுயசரிதை மொழிபெயர்ப்பு) ஆகிய மூன்று நூல்களை வாங்கினேன். ரிஷான் ஷெரிஃப் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். தற்காலத்தியத் தமிழ் எழுத்தாளர்களின் நான் காணக்கூடிய மொழிக்கொலை எதுவுமே ரிஷானிடம் இருக்காது. மிகவும் அழகான தமிழ். எனக்கு மிக நெருக்கமான ஒரு இளைஞனின் நாவலின் அட்டையில் “க்” என்ற ஒற்றெழுத்து அநியாயமாக துருத்திக்கொண்டிருக்கக் கண்டேன். அட்டையிலேயே இருந்த தப்பு ஆபாசமாக இருந்தது. ஒற்று இல்லாமல் எழுதுவதைக்கூட மன்னிக்கலாம். ஒற்று இருக்கவே கூடாத இடத்தில் ஒற்றைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வருகிறது.

***