ஒரு கடிதம் வந்தது. ”600 ரூ. விலையுள்ள புத்தகத்துக்கு ஒரு வாசகர் உங்களுக்கு 5000 ரூ. கொடுத்தால் அதை வாங்கிக் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா? நியாயமா?”
ஒரு சின்ன கணக்கு போடுங்கள். 600 ரூ. புத்தகத்துக்கு எனக்கு ராயல்டி 60 ரூ. 500 புத்தகம் விற்றால் 30000 ரூ. ராயல்டி. ஆனால் பெட்டியோ என்ற அந்த நாவலை எழுத எனக்கு ஆன செலவு மூணு லட்சம் ரூபாய். அடுத்த இலங்கைப் பயணத்துக்கு ஐந்து லட்சம் ஆகியிருக்கும். கேகே என்னை வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்தார். வந்தவர்கள் திரும்பி அவர்கள் வீட்டுக்குச் செல்ல பஸ் செலவுக்குக் கூட அவர்களிடம் காசு இல்லை. கேகேயின் வீடு ஒரு தகரக் கொட்டாய். எல்லா செலவும் நான் தான். ஆக, மூணு லட்சம் செலவு பண்ணி நாவல் எழுதி 30000 ரூ. ராயல்டி பெறும் நிலையில் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள். அவர்களை நீங்கள்தான் பராமரிக்க வேண்டும். நீங்கள் என்றால் சமூகம். பிற மொழி எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் பராமரிக்கின்றன. ஒரு வருடத்தில் ஆறு மாத காலம் அவர்கள் வருகைதரு பேராசிரியர்களாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பதால் அவர்கள் வாசகர்களிடம் பணம் கேட்கத் தேவையில்லாத நிலையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு எழுத்தாளர்களைத் தெரியாது. தெரிந்த உங்களிடம் கேட்கிறேன். முடிந்தவர்கள் கொடுங்கள். அவ்வளவுதான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் 2000 ரூ. கொடுத்து பெட்டியோவை வாங்கினார். அதில் 540 பதிப்பகத்துக்குப் போக மீதி எனக்கு வந்தது.
இந்த இரண்டு பேர்தான் இந்தப் புத்தக விழாவில் எனக்குப் பணம் கொடுத்தார்கள். இது எனக்குத் தரும் பணம் அல்ல. லட்சக்கணக்காக செலவு செய்து நாவலை உருவாக்குகிறேன். அந்த சிரமத்தை நீங்களும் கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஊர்கூடித் தேர் இழுக்கும் கதைதான்.
புரியும் என நினைக்கிறேன்.