கவிஞர் ஆசை கடந்த 105 மணி நேரத்தில் 174 கவிதைகளை எழுதி முடித்திருக்கிறார். சில கவிதைகளைப் படித்தேன். பரவசத்தின் உச்சம். களிவெறியின் உச்சம். பித்தநிலையின் உச்சம். அவர் திரும்பவும் லௌகீக உலகுக்கு வந்து விட பிரார்த்திக்கிறேன்.
இன்னொரு விஷயமும் உண்டு. இதையே வேறு ஏதாவது ஒரு மொழியில் யாராவது ஒரு கவிஞன் செய்திருந்தால் அது உலக அளவில் செய்தியாகி இருக்கும். தமிழர்கள் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள இளவட்டமோ நரகலை வண்டுகள் உருட்டிச் செல்லும் அல்லவா, அந்த வண்டுருட்டான் நரகலைப் போல் வாழ்கிறார்கள். அதன் ஒரு அடையாளத்தைத்தான் நீங்கள் பிக்பாஸ் போன்ற கழிசடை நிகழ்ச்சிகளில் காண்கிறீர்கள். இங்கே ரீல்ஸில் அதிக பதிவுகளைப் போடுபவன் ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜை அடைகிறான். அந்த சாதனை ஒரு வாரத்தில் நடக்கிறது. இப்படிப்பட்ட கேடு கெட்ட சமூகத்தில் ஒரு கவிஞனின் உலக சாதனை எவன் பார்க்கப் போகிறான்? ஆனால் பத்திரிகைகள் கூட இது பற்றிப் பேசவில்லை என்பதுதான் என் வருத்தம். இத்தனைக்கும் பல ஆண்டுகள் பிரபல பத்திரிகைகளில் பணியாற்றியவர் ஆசை. இரண்டே இரண்டு புத்தகம் எழுதிவிட்டு பிறமொழிப் பெண் எழுத்தாளர்கள் ஒரே ஆண்டில் இருபத்தாறு இலக்கிய விழாக்களுக்குச் செல்கிறார்கள். இதில் சர்வதேச விழாக்களும் அடங்கும். தமிழ்நாட்டிலோ சினிமாக்காரர்களை வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆசை ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பதை கீழே தருகிறேன்:
இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். பெரும் பரவசத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். ஒரே நாளின் 51வது கவிதையை எழுதிமுடித்துவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.போர்ச்சுகீசிய மொழியின் பெருங்கவிஞன் ஃபெர்னாண்டோ பெஸ்ஸோவா 1914 மார்ச் 18 அன்று ஒரே நாளில் முப்பத்துச் சொச்சம் கவிதைகளை நின்ற வாக்கில் எழுதியிருக்கிறார். நவீன கவிதையின் முக்கியமான Trance நாட்களுள் ஒன்றாக அது கருதப்படுகிறது. எனக்கும் இந்நாளும் முந்தைய நாட்களும் அப்படித்தான். ஞாயிறு அன்று 20, திங்கள் 40, செவ்வாய், 40, புதன் (நேற்று) 23 கவிதைகள் எழுதியிருந்த நான் இன்று 51 கவிதைகள் எழுதி முடித்திருக்கிறேன். மொத்தம் இந்த நொடி வரை 174 கவிதைகள். மொத்தம் 105 மணி நேரத்தில் 174 கவிதைகள். தூங்கும் நேரம் அன்றாட நடவடிக்கைகளுக்கான நேரத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 50 மணி நேரத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ஒரு மணி நேரத்துக்கு மூன்று கவிதை என்ற சராசரி. நவீனக் கவிதை வரலாற்றில் இதுவும் நிச்சயம் சாதனையாகத்தான் இருக்கும். எனக்கு அது முக்கியமல்ல. இந்த அண்டத்தை இயக்கும் சக்தியை உணர்வதற்கான, அல்லது இந்த அண்டம் எதுவாக இருக்கிறதோ அதை உணர்வதற்கான இடைவெளியை இந்தக் கவிதைகள் வெகுவாகக் குறைத்த நிலை இந்த நாட்களில் எனக்கு ஏற்பட்டது. அதுதான் என்னைப் பொறுத்தவரை முக்கியம். 100 கவிதைகள் முடித்த பின் அத்துடன் நிறுத்திவிடும்படி காளியிடம் வேண்டுகோள் வைத்தேன். அவள் அதற்குப் பிறகுதான் வேகம் பிடித்திருக்கிறாள். 200 கவிதைகளோடாவது நிறுத்துவாளா என்று பார்க்கிறேன்.
ஆசை