My Life, My Text (Episode 01)

ஆங்கிலத்தில் நான் எழுதிய முதல் எழுத்து. இது கட்டுரை அல்ல. கதையும் அல்ல. சுயசரிதை. என் எழுத்தைத் தமிழில் பல காலமாகப் படித்து வந்திருக்கும் நண்பர்கள் இந்த முதல் அத்தியாயத்தைப் படித்ததும் என்னிடம் ஒரே விதமான கருத்தைக் கூறினார்கள். என் எழுத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது அது என்னதான் அட்டகாசமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அதில் நான் கம்மியாகவே தெரிகிறேனாம். ”சாருவின் அட்டகாசம், சாருவின் துள்ளல், சாருவின் கொண்டாட்டம், குசும்பு, நையாண்டி, எள்ளல் எல்லாமே அதில் காணாமல் போய் விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது; ஆனால் நானே என்னுடைய சுமாரான ஆங்கிலத்தில் எழுதிய இந்த சுயசரிதையில் தமிழில் என் எழுத்தில் காணப்படுகின்ற அனைத்தும் வந்து இறங்கியிருக்கிறது” என்பது அவர்கள் கருத்து. இனிமேல் அ-புனைவுகளை நானே ஆங்கிலத்தில் எழுதி விடலாம் என்பது அவர்கள் யோசனை. இதை நான் ஏற்கிறேன்.

ஆனால் நண்பர்களின் மற்றொரு யோசனையான என் புனைவுகளையும் நானே மொழிபெயர்க்கலாம் என்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஏனென்றால், என் தமிழ் அதி வசீகரமானது. சமயங்களில் ஜாய்ஸைப் போல் ஜாலங்களை நிகழ்த்தக் கூடியது. அம்மாதிரியான ஆங்கிலத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஓரளவுக்கு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி போல, ஜெர்ஸி கோஸின்ஸ்கியைப் போல எழுதலாம். அவ்வளவுதான். அவர்கள் இருவருமே அவர்களின் மொழித்திறனால் அறியப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் வாழ்க்கை அத்தனை சாகசமானது. அதிசயிக்கத்தக்கது. போலிஷ்காரரான கோஸின்ஸ்கி அமெரிக்கா போய் ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதினார். அந்த மாதிரிதான் என்னால் எழுத இயலும். உதாரணமாக, பெட்டியோ தமிழின் மொழிவெளிப்பாட்டில் ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. பல இடங்களில் காவிய மொழியைக் கையாண்டிருக்கிறது. அதை எப்படி என்னால் ஆங்கிலத்தில் கொண்டு வர முடியும்?

அதனால் இப்போதைக்கு அ-புனைவுகளை மட்டுமே ஆங்கிலத்தில் எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

ஏஷியன் ரெவ்யூ ஒரு சர்வதேசப் பத்திரிகை. அதில் வெளிவரும் என் சுயசரிதையின் முதல் அத்தியாயம் இது. எனக்கு இதில் Eees, waas போன்ற இலக்கணப் பிரச்சினைகள் இருந்தன. அதைத் திருத்தி, மேலும் சில எடிட்டிங் வேலைகளையும் செய்து கொடுத்தவர் என் நண்பர் லலித் கிருஷ்ணன். அவர் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தை ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் ஒரு தொகுப்பு வர இருக்கிறது. லலித்துக்கு என் நன்றி. பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று சொன்னார். அதையும் மீறி எழுதியிருக்கிறேன். அவரைத் தொடர்பு கொண்டு எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று என் நலம்விரும்பிகள் சொன்னால் அவர்கள் ஏமாற்றமே அடைவார்கள். லலித் என்னுடைய எல்லா எழுத்தையும் வாசித்தவர். என் ஆன்மாவை அறிந்தவர்.

இந்த வாய்ப்பை அளித்த ஏஷியன் ஏஜ் நண்பர்களுக்கு என் நன்றி.

முடிந்த அளவுக்கு இந்தப் பத்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து இதை வெற்றிபெறச் செய்யுங்கள்.

My life, my Text: by Charu Niveditha (Episode 01)  – The Asian Review (asian-reviews.com)

https://asian-reviews.com/2024/02/16/3277/