இனிமேல் மம்முட்டி படங்களுக்கு மட்டும் வசனம் எழுத முடிவெடுத்திருக்கிறேன்…

ஊரே கொண்டாடுகிறதே என்று பிரம்மயுகம் படத்துக்குப் போனேன். ஏற்கனவே இப்படி ஊரே கொண்டாடுகிறதே என்று மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தைப் பார்த்து பதினைந்து நிமிடத்திலேயே நிறுத்தி விட்டேன். அப்படி ஒரு துர்சம்பவம் நடந்தும் பிரம்மயுகத்துக்குப் போனது என்னுடைய முட்டாள்தனம்தான். அப்படியும் சொல்ல முடியாது. என் நெருங்கிய நண்பர் ட்டி.டி. ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருப்பதால் அது எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் என் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் மட்டும் நிறைவேறி விட்டது. அடுத்து ராமகிருஷ்ணனைப் பார்த்தால் மம்முட்டி படத்துக்கு வசனம் எழுத என்னை சிபாரிசு செய்யச் சொல்லி அவரிடம் விண்ணப்பம் வைக்க வேண்டும். எனக்கு மலையாளம் தெரியாதுதான். ஆனால் படம் பூராவும் மம்முட்டி சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார். சிரிப்பில் ஆயிரம் விதமாக வித்தை காண்பிக்கிறார். அவர் நடிப்பில் உச்சம் தொட்டவர். சிரிப்பதா பெரிய வித்தை? மனிதர் சிரிப்பிலேயே விளையாடியிருக்கிறார். படம் பூராவும் சிரிப்புதான். சிரிப்பதற்கு வசனம் எழுதுவதற்கு மலையாளம் தெரிந்திருக்க வேண்டியதில்லையே? ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் சொல்கிறார். எனக்கு சம்ஸ்கிருதம் வரும். பிரச்சினை இல்லை. வில்லனைக் கொல்லும்போது பகவத் கீதையிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து விட்டு விடுவேன்.

அப்படி மலையாளப் படத்தில் மம்முட்டியின் சிரிப்புக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தால் வாசகர்களாகிய உங்களிடம் பணம் கேட்கும் லஜ்ஜையான செயலிலிருந்தும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். பார்ப்போம்.

மற்றபடி பிரம்மயுகம் பற்றி என்ன எழுதுவது? பல நண்பர்கள் தூக்கமே வரவில்லை என்று புலம்புகிறார்கள். இந்தப் படத்துக்குப் போனால் நிம்மதியாக இரண்டு மணி நேரம் தூங்கி விட்டு வரலாம். ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஒரு மோகினி வருகிறது. உங்கள் உறக்கத்தில் வருவதால் கனா மோகினி என எடுத்துக் கொண்டு விடாதீர்கள். அது நிஜ மோகினிதான். சந்தேகம் இல்லை.

ஒரு விஷயம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கேரளம் சென்ற போது எங்கே பார்த்தாலும் தெரிந்த விஜய் பட சுவரொட்டிகளைப் பார்த்து நொந்து போயிருந்தேன். மலையாள இயக்குனர்கள் அதற்குப் பழி வாங்குவதற்காகவே இம்மாதிரி படங்களை எடுத்துத் தமிழ்நாட்டுப் பக்கம் அனுப்புகிறார்கள். அந்த வகையில் அவர்களைப் பாராட்டுகிறேன்.

இனிமேல் ஊரார் பேச்சை நம்பி எந்தப் படத்துக்கும் போவதில்லை என்று சபதம் செய்து கொண்டேன்.