கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நான் பல கைம்மண் அளவுகள் படித்திருக்கிறேன். அந்த வகையில் சர்வதேச அளவில் உங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு நாவலைச் சொல்லுங்கள் என்றால் ஸோர்பா தெ க்ரீக் நாவலைச் சொல்லுவேன். அந்த நாவல் மனித வாழ்க்கை குறித்த ஒருவரின் அடிப்படை நம்பிக்கைகளையே மாற்றி விடக் கூடியது.
இந்திய மொழிகளில் உங்களுக்குப் பிடித்த ஒரே நாவல் எது என்று கேட்டால் தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலைச் சொல்லுவேன். அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் பங்காற்றி இருக்கிறேன்.
இப்போது இந்திய மொழிகளிலேயே எனக்குப் பிடித்த இன்னொரு நாவலைச் சொல்ல வேண்டும் என்றால், சுந்தர் சருக்கை எழுதிய Following a Prayer என்ற நாவலைத்தான் சொல்லுவேன். மிக விரிவாக எழுத வேண்டும். ஆங்கிலப் பத்திரிகையில் எழுத இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். என்னுடைய 55 ஆண்டுக் கால வாசிப்பு அனுபவத்தில் இது போன்ற அற்புதம் ஓரிரண்டு முறைகளே நிகழ்ந்திருக்கின்றன.
பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து என்ற தலைப்பில் சீனிவாச ராமாநுஜம் இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பு என்றே சொல்ல முடியவில்லை. தமிழிலேயே எழுதியது போல் உள்ளது. எதிர் வெளியீடு. என் நண்பர்களையும் வாசகர்களையும் இந்த நாவலை உடனடியாக வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.