செய்திகளும் சமூகமும்…

வணக்கம் சாரு.

எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. அதனால் உங்களிடம் கேட்கிறேன். நேற்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தேன். இந்தத் தேர்தலில் இருந்தது போல் நிம்மதியாக இதுவரை எந்தத் தேர்தலின் போதும் நான் இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அரசியல் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். எந்த சித்தாந்தத்திலும் ஆழமான பார்வையோ களச்செயல்பாடோ கிடையாது. பள்ளிக்கல்வி முடிக்கும் வரை என்னுடைய ஆர்வமெல்லாம் செய்தித்தாள்கள், ஒரு சில வெகுஜன இதழ்களை வாசிப்பது, தொலைக்காட்சியில் செய்தி விவாதங்கள் பார்ப்பது மட்டுமே. அதில் வரும் கருத்துக்களே என் கருத்துக்களாயிருந்தன.  அப்போதெல்லாம் தேர்தல் சமயத்தில் ஒரு கொந்தளிப்பான மனநிலையிலேயே இருப்பேன். அது தேர்தல் கருத்துக்கணிப்புகளைப் பார்ப்பது, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தொலைக்காட்சியின் முன் அமர்வதனால்தான்.

ஆங்கிலத்திலும் செய்திகள்,  விவாதங்கள் பார்த்து வந்தேன். அவற்றை விட நம் ஊர் நியூஸ் 7, தந்தி டிவியே மேல் என்று ஆங்கிலத் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதை விட்டுவிட்டேன். தமிழ் செய்தி சேனல்களும் மொத்தமாக பைத்தியங்களை இறக்கிவிட்டு பார்ப்பவர்களைக் கடிக்கத் தொடங்கியதால் பள்ளி முடிப்பதற்குள் அவற்றையும்  பார்ப்பதை விட்டுவிட்டேன். மொத்தமாக தொலைக்காட்சி பார்ப்பதையே விட்டுவிட்டேன் எனலாம். கல்லூரி சென்றது முதல் இந்து தமிழ், தினமணி, சில இதழ்களின் வாசிப்பின் மூலம் மட்டும் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டிருந்தேன். சமூக ஊடகங்கள் ஆரம்பத்திலேயே எனக்கு பைத்தியங்களின் கூடாரமாகத் தெரிந்ததால் அதன் பக்கம் செல்லவில்லை. யூடியூபில் சில பொழுதுபோக்குக் காணொலிகளைப் பார்ப்பதோடு சரி. தேர்விற்குத் தேவையான நடப்பு நிகழ்வுகளை அதற்கென்ற தளத்தில் பார்த்துக் கொள்வேன்.

வீட்டில் இந்து தமிழ் வாங்குவோம். அது  விலைபோகிவிட்டதாகவே

எனக்குத் தோன்றியது. கடந்த ஒரு வருடமாக, வேண்டாவெறுப்பாக ஊரில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவே பார்ப்பேன். அதனோடு அருஞ்சொல் தளத்தையும் வாசித்து வந்தேன். நீங்கள் எனக்கு அறிமுகமான பிறகு ஏராளமான எழுத்தாளர்கள் அறிமுகமாயினர். நான் அவர்களின் தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது எதற்கு இந்தக் கடிதம் என்றால், நான் கடந்த இரண்டு மாத காலமாக செய்தித்தாள்களை வாசிக்கவில்லை. தேர்தல் செய்திகள் எதனையும் தெரிந்துகொள்ளவில்லை. எனக்கு எங்கள் வீட்டைத் தாண்டி என்ன நடக்கிறது என்று சுத்தமாகத் தெரியவில்லை.  எங்கள் தொகுதி வேட்பாளர்களைக் கூட தேர்தல் ஆணையத்தின் செயலியின் மூலம்தான் தெரிந்து கொண்டு வாக்களித்தேன்.

எந்தக் கூச்சலும் என் காதில் கேட்கவில்லை, கண்ணிலும் வேண்டாதது படவில்லை. அதனால் இப்படி ஒரு நிம்மதியை நான் இதுவரை அனுபவித்ததில்லை.  இந்த நிம்மதி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் எந்தச் செய்தியையுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பதும் அவ்வளவு சரியாகப்படவில்லை. ஏற்கனவே நான் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து விலகியிருப்பதால் எனக்கு இன்னும் ஏதோ தனி உலகத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. நீங்கள் செய்தித்தாள்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் எந்த ஊடகத்தின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவது? நீங்கள் நாட்டில் நடப்பவற்றை எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்? உங்களின் நேரத்தை வீணடிக்க இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

த.செந்தமிழ்

அன்புள்ள செந்தமிழ்,

நீங்கள் இப்போது இருக்கும் மனநிலையிலேயே, வாழ்நிலையிலேயே எப்போதும் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.  யாதெனின் யாதெனின் நீங்குவான் நோதல் அதனின் அதனின் இலன் என்பது எனக்கு வேதவாக்கு. 

மிகவும் சௌகர்யமான, தொந்தரவுகள் இல்லாத சில மேற்கத்திய நாடுகளில் இந்தியாவில் கிடைப்பது போன்ற செய்திகள் இருப்பதில்லை.  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கிடையாது.  எப்போதோ மிக மிக அரிதாகத்தான் வரும்.  கொலை, கொள்ளை குற்றங்களும் கம்மி.  சுழல்கள் இல்லாத தெளிந்த, நிதானமான நீரோட்டத்தைப் போன்ற வாழ்க்கை.  செய்தி என்றால் அன்றன்றைய தட்பவெப்ப நிலைதான் செய்தி.  இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத குளிர் என்பார்கள்.  ஆல்ப்ஸின் பனிப்பொழிவின் காரணமாக குளிர் அதிகரித்து விட்டது என்பார்கள்.  விடுமுறையில் ஆல்ஃப்ஸில் ஸ்கீயிங் சென்ற பதினேழு வயதுப் பெண்ணோ பையனோ ஸ்கீயிங் செய்யும்போது சறுக்கி விழுந்து இறந்து விட்ட செய்தி வரும்.  இந்தியா அப்படி இல்லை.  இங்கே ஒருவர் செய்திகளின் பின்னால் போனால் பைத்தியம்தான் பிடிக்கும்.

ஆங்கிலத்தில் Scroll.in, thewire.in போன்ற சில அருமையான இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத்தான் நான் படிக்கிறேன்.  தமிழில் அருஞ்சொல்.  இவற்றைத் தவிர நான் வேறு எதையும் படிப்பதில்லை. 

நான் எப்போதுமே தொலைக்காட்சி பார்த்ததில்லை.  இப்போது பத்துப் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக எழுதினால் மூளைக்கு ஓய்வு கொடுப்பதற்காக சில வெப்சீரீஸை நெட்ஃப்ளிக்ஸில் பார்ப்பேன்.  அதுவும் எப்படியென்றால், ஒரு சீரீஸை பத்து நிமிடம் பார்ப்பேன்.  சலிப்பாக இருக்கும்.  அடுத்த சீரீஸ் பத்து நிமிடம்.  அதுவும் சலிப்படைய வைக்கும்.  இன்னொரு சீரீஸ் இன்னொரு பத்து நிமிடம்.  அதோடு சரி.  சமீபத்தில்தான் மிஸ்டர் மாங்க் என்ற சீரீஸில் ஒன்றிரண்டு எபிசோட் பார்த்து விட்டு விட்டு விட்டேன்.  அந்த மாங்க் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தார்.  இதிலும்கூட வாரம் ஒருமுறைதான் ஈடுபடுவேன்.  அதற்கே குற்ற உணர்ச்சி வந்து விடும்.  நேரத்தை வீணடித்து விட்டோமே என்று. 

என்னுடைய இப்போதைய மனநிலை இதுதான்:  மானுட குலத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக ஒரு விஞ்ஞானி பரிசோதனைச் சாலையில் தன் முழு வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டு ஆய்வுகளில் ஈடுபடுகிறார் இல்லையா, அப்படித்தான் இருக்கிறேன் நான்.  ஏஷியன் ரெவ்யூ பத்திரிகைக்காக My Life, My Text என்ற சுயசரிதையை எழுதுவதில் பெரும்பகுதி நேரம் போய் விடுகிறது.  அது வெறும் எழுத்து வேலை மட்டும் அல்ல.  அதற்காக நிறைய படிக்கிறேன்.  உலகில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான சுயசரிதைகளைப் படித்து வருகிறேன்.  என்னென்ன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அதில் மார்க்கேஸ் எழுதிய Living to Tell the Taleஉம் ஒன்று.  ஆலன் ராப் க்ரியே (Alain Robbe-Grillet) எழுதிய சுயசரிதை Ghosts in the Mirrorக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.  அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் அதை வாங்கி புகைப்பட நகலை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். 

என்னுடைய மார்ஜினல் மேன் நாவலை முன்வைத்து என் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எழுதிய என் நண்பர் அஷோக் கோபால் ஒரு நீண்ட நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பி இருக்கிறார்.  நாற்பது கேள்விகள் இருக்கும்.  இதுவரை யாரும் கேட்காத கேள்விகள்.  அதற்காக பாரிஸ் ரெவ்யூ பத்திரிகையில் வந்த முக்கியமான நேர்காணல்களைப் படித்தேன்.  இரண்டு கேள்விகளுக்கு பதில் அனுப்பினேன்.  பத்துப் பதினைந்து பக்கங்கள்.  அதைப் படித்து விட்டு அஷோக் எழுதியிருந்த பதில்: ”உங்கள் கதையைச் சொல்ல உங்களுக்கு இந்த ஆயுள் போதாது.  நீங்கள் பேய் பிசாசாக மறுபடியும் வந்துதான் சொல்ல வேண்டியிருக்கும்.”  

இதையெல்லாம் தாண்டி, உல்லாசம் உல்லாசம், ரொப்பங்கி இரவுகள், தியாகராஜா, அசோகா, 1854 என்று பல நாவல்களை முடிக்க வேண்டும்.  இதில் 1854 தவிர மற்ற அனைத்தும் பாதியும், முக்கால்வாசியுமாக எழுதி வைத்திருக்கிறேன். 

இந்தப் பின்னணியில் இந்திய சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் போக்குகள் பற்றிக் கவலைப்பட நேரம் எங்கே இருக்கிறது?  ஆனாலும் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  சமீபத்தில் இந்தியத் தேர்தல் குறித்து ராமச்சந்திர குஹா எழுதியிருந்த கட்டுரை மிகவும் முக்கியமானது.  அவர் குறிப்பிட்டபடி, சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய அரசியல் வரலாற்றில் எமெர்ஜென்ஸிக்கு அடுத்ததாக வந்த தேர்தல்தான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்புக்கு ஒரு உதாரணம்.  அப்படி ஒரு தேர்தல்தான் இப்போது நடந்ததும்.  ஆனாலும் வாக்களித்தவர்கள் பலரையும் கேட்டபோது அவர்கள் காங்கிரஸ், பிஜேபி, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளையும் விட்டுவிட்டு வேறு ஊர் பேர் தெரியாத வேட்பாளர்களுக்கே வாக்களித்ததாகச் சொன்னார்கள்.  இப்படிப்பட்ட லட்சக்கணக்கான வாக்குகளுக்கு இப்போதைய தேர்தல் முறையில் எந்த அர்த்தமும் இல்லை. 

விகிதாச்சார அடிப்படையில் வாக்குகள் கணக்கிடப்பட்டால் மட்டுமே எல்லா வாக்குகளுக்கும் அர்த்தம் உண்டாகும்.  அமெரிக்காவில் இருப்பது போல.  அதற்குத் தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.  அதெல்லாம் நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. 

நான் சமூகத்திடமிருந்து பெரிதும் விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அற உணர்வு மக்களிடம் இப்போது இல்லை.  மதிப்பீடுகளே இல்லாமல் வாழப் பழகி விட்டார்கள் மனிதர்கள்.  எல்லோருக்கும் பணமே பெரிதாக இருக்கிறது.  இலக்கியமோ எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.  இலக்கியம் அறியாதவர்களை விலங்குகள் என்கிறார் பர்த்ருஹரி.  இந்த இரண்டு விஷயங்களிலுமே சமூகம் கீழ்நோக்கிப் போய் விட்டது.  ஒன்று, பணம்.  இரண்டு, இலக்கியத்தைத் துரத்தி அடித்தது. 

இப்படிப்பட்ட சமூகத்தில் நான் நேரடியாகப் பங்கு பெறுவதை விட இந்த சமூகத்தின் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான பரிசோதனைகளில் என் மீதிக் காலத்தை செலவிட விரும்புகிறேன். 

இந்தக் கடிதத்தைப் படித்துத் தளர்ந்து விட வேண்டாம் செந்தமிழ்.  உற்சாகமாக இருங்கள்.  உங்கள் கவனத்தையெல்லாம் உங்கள் மனதுக்கு எது எதெல்லாம் உவகையளிக்கிறதோ அதில் செலுத்துங்கள்.  உங்கள் வாழ்க்கை மகத்தானதாக மாறும்.

சாரு