க.நா.சு.வின் பொக்கிஷங்கள்

மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,
வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:
க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.
(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)
சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு பலிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்றைய வாசகர்களால் அதிகம் வாசிக்கப்படாத க.நா.சு.வின் பல நூல்கள் வெவ்வேறு பதிப்பகங்கள் மூலம் மறுவெளியீடு கண்டுள்ளன. தொகுக்கப்படாத படைப்புகள் முதல் முறை நூலுருவம் அடைந்துள்ளன. இந்த முயற்சியில் இன்னும் சில முக்கியமான நூல்கள் இவ்வாண்டும் வரவுள்ளன.
தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் க.நா.சு. படைப்புகளைத் தொகுக்கவும் மறுபதிப்பு கொண்டுவரவும் முயற்சி நடக்கிறது. க.நா.சு. ஆங்கில ஏடுகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிக் குவித்திருந்தபோதும் அவை நூலாக்கம் பெற்றதாக எந்தத் தடயமும் இல்லை. அந்தக் கட்டுரைகளைத் திரட்ட முற்பட்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் சேகரிக்க முடிந்தது. அக்கட்டுரைகளை பேசுபொருள் அடிப்படையில் வகைப்படுத்தி நூலாக்கும் திட்டம் உள்ளது. அந்த வரிசையில் முதல் நூலாக பாரதி குறித்து க.நா.சு. ஆங்கிலத்தில் எழுதியவை ‘The Birth of a Poet’ என்ற தலைப்பில் வெளிவருகிறது. ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இந்நூலை வெளியிடுகிறது. க.நா.சு. பாரதி பற்றி எழுதிய கட்டுரைகளும் க.நா.சு. மொழிபெயர்த்த பாரதியின் கவிதைகளும் இந்நூலில் அடக்கம்.
க.நா.சு. பாரதி பற்றி தமிழில் எழுதியவையும் ‘பாரதி தோன்றிய காலம்’ என்ற தலைப்பில் எழுத்து பிரசுரம் மூலம் வெளிவர உள்ளது. நண்பர் லட்சுமிபதி மிகுந்த உழைப்பைச் செலுத்தித் திரட்டிய நூல் அது. பாரதி பற்றி க.நா.சு. உயர்வாகவோ குறையாகவோ எதுவும் சொல்லவில்லை என்ற கருத்து இத்தொகுப்புகள் மூலம் காலாவதியாகும்.
க.நா.சு.வின் ‘The Fall’ என்ற ஆங்கில நூலையும் ஜீரோ டிகிரி வெளியிடுகிறது. இது அவரது ‘வாழ்ந்தவர் கெட்டால்’ நாவலின் ஆங்கில வடிவம். மொழிபெயர்த்தவர் நகுலன். Indian Literature இதழில் வெளியான இந்த மொழிபெயர்ப்பு முதன்முறையாக இப்போது நூலுருவம் அடைகிறது. (அசோகமித்திரன் தமிழில் சிறந்த நாவல்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் ‘வாழ்ந்தவர் கெட்டால்’ நாவலை ஆங்கிலத்திலும் வாசித்திருப்பதாகச் சொல்கிறார். அந்த மொழியாக்கம் இதுவாகவே இருக்கவேண்டும்)
இந்த மூன்று நூல்களும் ஏப்ரல்-மே மாதங்களில் வெளியாகக்கூடும். க.நா.சு. அளித்திருக்கும் மகத்தான பொக்கிஷத்தில் இவை கொஞ்சமே. இருப்பினும் தேடலைத் தொடர ஊக்கம் அளிக்கும். இந்நூல்களை வரவேற்றுப் பதிப்பிக்கும் பதிப்பாளர் காயத்ரி அவர்களுக்கும் பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இவ்வெளியீடுகள் அளிக்கும் மகிழ்ச்சியை இம்மடல் மூலம் தங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றியுடன்,

ஸ்ரீநிவாச கோபாலன்

கீழநத்தம்