ஃபேஸ்புக்கில் சீனி ஒரு மதிய வேளையில் கூழ் குடித்தது பற்றி எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம், நான் ஒரு நான்கு தினங்களாக கூழ் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இருபது வயது வரை கோதுமை, கேழ்வரகு பற்றி எதுவுமே தெரியாது. பார்த்தது கூட இல்லை. கம்பு பற்றி கேள்வியே பட்டதில்லை. இருபது வயதுக்கு மேல்தான் காட்பாடி பக்கம் வந்த போது அங்கே கேழ்வரகு கூழ் குடிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நான் கூழுக்கு அடிமையாகி விட்டேன் என்றே சொல்லலாம்.
இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்த காலை உணவு இட்லி. மிளகாய்த் துகையல். மிளகாய்த் துகையல் அரைப்பது பற்றி பல நூறு முறை எழுதியிருக்கிறேன். இட்லி பற்றி சுமார் முந்நூறு பக்கம் எழுதியிருப்பேன். மிளகாய்ச் சட்னி: இருபத்தைந்து சிவப்பு மிளகாயை காம்பைக் கிள்ளிப் போட்டு விட்டு மிக்ஸியில் இட வேண்டும். கூடவே மூன்று பல் பூண்டு. தோலுடன். கொஞ்சூண்டு புளி. அரை ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளலாம். ரொம்பப் போய் விடக் கூடாது. கல் உப்பு கொஞ்சம். இதையெல்லாம் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். தண்ணீர் ரொம்பவும் கொஞ்சம். அதிகமாகி விட்டால் ஆட்டம் க்ளோஸ். நன்றாக நைஸாக வரும் வரை அரைக்க வேண்டும். மிளகாய்த் துகையல் தயார். சுடச் சுட இட்லியின் மீது நல்லெண்ணெயை விட்டுக்கொண்டு இந்தத் துகையலைத் தொட்டுக் கொள்ள வேண்டும். துகையல் மீதும் நல்லண்ணெயை விட்டுக் கொள்ளலாம். அமிர்தமாக இருக்கும்.
இதை விட எனக்குக் கூழ் பிடிக்கும். வருடம் பூராவும் கூழ் குடிக்கலாம் என்றாலும் குடிப்பேன். சேலம் போனால் நான் முதலில் தேடுவது கூழ்தான். அங்கெல்லாம் கம்பங்கூழ் கிடைக்கும். எனக்குக் கம்பங்கூழும் பிடிக்கும். கூழில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு மோர் மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் நான் மூன்று லிட்டர் கூழ் குடிப்பேன்.
சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் அற்புதமான கூழ் குடித்தேன். நானுமே பிரமாதமாக கூழ் செய்வேன். கூழ் செய்வது மிகச் சுலபமான செய்முறைதான் என்றாலும் கூழ் காய்ச்சும்போது கெட்டி தட்டி விடக் கூடாது. தட்டி விட்டால் கூழ் காலி. அதனால் கூழ் காய்ச்சும்போது கெட்டி தட்டி விடாமல் கரண்டியால் கிண்டியபடியே இருக்க வேண்டும். அது ஒன்றுதான் சிரமம். தினமும் செய்து விட வேண்டும் என்று நினைத்தேன். செய்ய முடியவில்லை. நேரப் பிரச்சினைதான் காரணம். வீட்டு எடுபிடி வேலையிலேயே பெரும் நேரம் போய் விடுவதால் குற்ற உணர்ச்சி உண்டாகி கூழ் செய்ய முடியவில்லை.
ஆனால் இன்று சீனி கூழ் பற்றி எழுதியதைப் பார்த்ததும் கூழ் ஆசை மீண்டும் துளிர்த்து விட்டது. சீனியை அழைத்து எங்கே குடித்தீர்கள் என்று கேட்டேன். அவர் ஏதோ க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து என்று சொல்லி என் மனதை உடைத்து விட்டார். வேளச்சேரி, கத்திப்பாரா எல்லாம் எனக்கு க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து மாதிரிதான். மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா, சொல்லுங்கள். சீனியிடமே கேட்க பயந்து கொண்டுதான் இங்கே கேட்கிறேன். ஊரில் இருப்பவனெல்லாம் அவரிடம் மட்டன் பிரியாணி எங்கே கிடைக்கும், வீசா எப்படி வாங்குவது என்று கேட்டு கேட்டு அவரை ஒரு வழி பண்ணி விட்டதால் இப்போது நானே பதுங்க வேண்டியிருக்கிறது. சரி, நீங்கள் சொல்லுங்கள். மைலாப்பூரில் கூழ் எங்கே கிடைக்கும்?
கூழில் இன்னொரு நல்ல விஷயம். கூழில்தான் இன்னும் கலப்படம் வரவில்லை. எங்கே குடித்தாலும் கூழ் வயிற்றை ஒன்றும் செய்வதில்லை.
மில்லட் மேஜிக் என்ற உணவகத்தில் பிரமாதமான கூழ் கிடைக்கிறது. ஆனால் ஒரு டம்ளர் 150 ரூ. அநியாயம். அக்கிரமம். நான் நாலு டம்ளர் குடிப்பேன். அதற்கு 600 ரூபாயா? சாக்கேயே இதை விட மலிவு. இன்னொரு பிரச்சினை, மில்லட் மேஜிக்கில் கூழில் உப்பை அள்ளிக் கொட்டுகிறார்கள். நான் அதில் இன்னும் கொஞ்சம் தயிர் போட்டு, தண்ணீர் கலந்து உப்பின் ருசியைக் குறைக்க வேண்டியிருக்கிறது. ஒரு டம்ளர் கூழ் 30 ரூபாய்தான் வைக்கலாம். (இல்லை, வெளியே தள்ளுவண்டியில் ஒரு சொம்பு கூழே 30 ரூ என்கிற போது ஒரு டம்ளர் கூழ் 15 ரூபாய்தான் வைக்கலாம்.) ஆனால் பத்து மடங்கு அதிகமாக்கி 150 ரூ என்பது பகல் கொள்ளை. அதில் ஒரு வண்டி உப்பு வேறு.