டியர் சாரு,
”நீங்கள் திட்டினால் திட்டு வாங்குபவர் அரிவாளால் தன் நெஞ்சைப் பிளந்து இதயத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கதறுவார்கள்” என்று ஒருமுறை அராத்து நம்முடைய கலந்துரையாடலின்போது சொன்னார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லாமல் மிகவும் மென்மையாகி விட்டீர்கள் என்றும் கூடவே சேர்த்துக்கொண்டார். ஆனால் இன்னொரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் யாரையாவது பாராட்டினால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. சாமியாரிலிருந்து ஆரம்பித்து ”இப்போது” வரை அதுதான் நடக்கிறது. இந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒருவர் அராத்துதான். இப்போது என்னைப் பாராட்டியிருக்கிறீர்கள். எனக்கு அந்தப் பைத்தியம் பிடிக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் உங்கள் பாராட்டுக்குத் தகுந்தபடி என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்கிறேன். உங்கள் நாவலில் இதுவரை மொழிபெயர்க்கப்படாததில் அல்லது இப்போது எழுதிக்கொண்டிருப்பதில் ஏதாவது ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தியாகராஜா வேண்டாம். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. சமீபத்தில்தான் நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத டி.எம். கிருஷ்ணா தியாகராஜாவை எப்படிப் பாடலாம் என்று கேட்டு ஆடியிருந்த சிலம்ப விளையாட்டைப் படித்தோம். அதனால் உங்கள் தியாகராஜாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி எனக்கு உண்டா? ஆனால், நீங்கள்தானே முன்பு சொல்லியிருந்தீர்கள், கூடு விட்டுக் கூடு பாய்தல் பற்றி. ஒரு வலதுசாரியான மரியோ பர்கஸ் ஜோஸா மிகத் தீவிரமான ஒரு புரட்சியாளனின் கதையை எழுதினார் என்று. ரியல் லைஃப் ஆஃப் அலெஹாந்த்ரோ மாய்த்தா இல்லையா? அப்படியிருக்கும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத நானும் தியாகராஜாவை மொழிபெயர்க்க முடியும் என்றே நம்புகிறேன். கூடு விட்டுக் கூடு பாய வேண்டியதுதானே?
நீங்கள் முன்பு குறிப்பிட்ட சுந்தர் சருக்கையின் Following a Prayer படித்து விட்டேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்.
உங்களை மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகவே நான் பி.ஜி. வுட் ஹவுஸ், வி.எஸ். நைப்பால் போன்றவர்களைப் பயின்று வருகிறேன். வுட் ஹவுஸிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.
உங்களுடைய இந்த எல்லா வழிகாட்டுதலுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன்.
புகைப்படம் பற்றி: இன்னமும் எனக்குப் பிடித்தபடி உங்களோடு ஒரு புகைப்படம்கூட அமையவில்லை என்பது என் மனக்குறை.
கடைசியாக ஒரு கேள்வி: உங்களின் மதிப்புக்குரியவர்கள் சொன்னால் உடனே படித்து விடுவேன் என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?
With lots and lots of love,
Shree.
டியர் ஸ்ரீ,
தியாகாராஜாவை மொழிபெயர்க்க உனக்கு ஒரு பாடத்திட்டம் தருகிறேன். அதுவும் நான் தியாகராஜாவை முடித்த பிறகு. முதலில் நீ தியாகராஜாவின் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும். பிறகு தியாகராஜாவின் எழுநூறு கீர்த்தனைகள், ராபர்ட் ஸ்வபோதா எழுதிய அகோரா, Teachings of Ramana Maharishi by Arthur Osborne, Swami Vivekananda: The Complete Biography by Sri Ananda ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இவற்றை முடிப்பதற்குள் நீ நம்பிக்கையாளராக மாறியிருப்பாய். உடனே மொழிபெயர்க்கத் தொடங்கி விடலாம்.
வாசிப்பில் என் மதிப்புக்குரியவர்கள்: ரொலாந் பார்த், தர்மு சிவராமு, அசோகமித்திரன், கே.கே. சமன் குமர. சமீபத்தில் கேகே என்னிடம் ஜேம்ஸ் ஜாய்ஸின் Finnegans Wakeஐ நான் படித்தே ஆக வேண்டும் என்று சொன்னார். படித்து விடுவேன்.
சாரு