சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று இன்று யாரும் இல்லை. இப்போதைய பிரிவு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். அவ்வளவுதான். ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளையும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இப்போது அனுமதிக்கின்றன. லா.ச.ரா. மட்டும் வாழ்நாள் முழுக்கவும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். அவருக்கு ஜனரஞ்சகம் இடம் கொடுத்தது. அசோகமித்திரன் ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும் கணையாழி, தீபம் போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும் எழுதியவர். அவரையும் சிறுபத்திரிகை வட்டத்தில் குறுக்க முடியாது. சுந்தர ராமசாமி அப்படி இல்லை. தீவிர சிறுபத்திரிகைவாதி. ஆனால் அசோகமித்திரனின் நிழலைக் கூட தொட முடியாதவர் சு.ரா.
நான் எழுத வந்தது சிறுபத்திரிகைகளின் இறுதிக் கட்டம். அவர்களைப் பொருத்தவரை நான் எழுத்தாளனே இல்லை. மலம். ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. எனக்கும் வேறு வழியில்லை. அவர்களோடுதான் பழக வேண்டும். அவர்களோடுதான் குடிக்க வேண்டும். அவர்களோடுதான் மல்லுக்கு நிற்க வேண்டும். ஆனாலும் என் எழுத்தை ஆதரிக்கவும் ஒரு சாரார் இருந்தார்கள். தமிழவன், நாகார்ச்சுனன், எஸ். சண்முகம், இவர்கள் எல்லோரையும் விட பிரம்மராஜன். இதில் முதல் இருவர் ஒரு கட்டத்தில் என்னை மலம் என்று கண்டு கொண்டு விலகி விட்டனர்.
ஒரு இருபத்தைந்து ஆண்டு காலம் எனக்கு நரகமாகக் கழிந்தது. பெரும் அடிதடியெல்லாம் நடந்திருக்கிறது.
எனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் குரு. அவர்தான் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார். ஆனால் குரு ஆரம்பித்து வைத்த வாசகர் வட்டத்தை உருவாக்கியவர் சீனி (அராத்து). சீனி இல்லாவிட்டால் வாசகர் வட்டமே இருந்திருக்காது. இதற்காக சீனி போட்ட உழைப்பு மனிதர்களால் கற்பனையே செய்ய இயலாதது. நேற்று கூடப் பாருங்கள், இலங்கையிலிருந்து சென்னை வர நினைத்த ஒரு இலங்கைத் தமிழர் – என் நண்பர் – சீனியின் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள், சென்னை வருவதற்கு வீசா விண்ணப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று சீனியைக் கேட்க வேண்டும் என்றார். இப்படியே தினம் ஐம்பது ஃபோன் வருவதால் சீனி இப்போது கிட்டத்தட்ட ஒரு ட்ராகுலா மாதிரி மாறி விட்டார். ஒருத்தருக்கும் எந்த விவரமும் கொடுப்பதில்லை. அவருக்கு வரும் ஃபோன் அழைப்புகளை அவர் அருகில் இருந்து கேட்டால் எனக்கு ஒரே நாளில் பைத்தியம் பிடித்திருக்கும். சென்ற ஆண்டு கோவையில் சீனிக்கு ஒரு புதிய வாசகரை அறிமுகம் செய்து வைத்தேன். ஒரு மாதம் கழித்து நண்பர் சீனிக்கு ஃபோன் பண்ணினார். ”தல, சென்னை வந்திருக்கேன். இங்கே தி.நகரில் நல்ல மட்டன் பிரியாணி எங்கே கிடைக்கும்? சொல்லுங்க?”
இப்போது சீனி இந்தக் காரியங்களையெல்லாம் நிறுத்தி விட்டார். நானே இப்போது இது போன்ற தகவல்களுக்கு வேறு நண்பர்களைத்தான் அணுகுகிறேன். ஒன்றுமில்லை. ஏஷியன் ரெவ்யூவுக்காக ஒரு பேச்சைத் தயாரித்தேன். நானே ஐஃபோன் மூலம் விடியோ எடுத்தேன். பதின்மூன்று நிமிடம் வந்து விட்டது. அதை ஏஷியன் ரெவ்யூவுக்கு அனுப்ப முயன்றால் முடியவில்லை. அளவு அதிகம் என்கிறது. வீட்ரான்ஸ்ஃபரும் முடியவில்லை. ட்ரைவிலும் முடியவில்லை. வழக்கமாக சீனியைத்தான் கேட்பேன். இப்போதும் கேட்டேன். ட்ரைவ் மூலம் அனுப்பச் சொன்னார். ட்ரைவில் இடம் இல்லை. இடத்துக்கு 149 ரூ. கட்ட வேண்டும். கட்ட நினைத்தால் முடியவில்லை. கட்ட வேண்டியது கார்த்திக். கார்த்திக்கிடம் சொன்னேன். நான் மாதாமாதம் கட்டுகிறேனே என்றான். அத்தோடு விட்டு விட்டேன். இன்னும் அனுப்பவில்லை.
என் மகன் கார்த்திக் அவன் நண்பர்களிடையே ஸ்ட்ரீட் ஸ்மார்ட் என்று பெயர் எடுத்தவன். சீலேவுக்கு எவ்வளவு ரூபாய் டிக்கட் என்றேன். ஒண்ணே முக்கால் லட்சம் என்றான். சீனியைக் கேட்டேன். ஒண்ணேகால் என்றார். கார்த்திக்கிடம் சொன்னேன், நம்பவில்லை. லிங்க் கேட்டான். கொடுத்தேன். இதைக் கண்டு பிடிக்க எனக்கு ஒரு முழு நாள் ஆனது என்றார் சீனி. இப்போதும் ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு 2000 ரூ டிக்கட்டில் விமானத்தில் வந்தார். ரயில் டிக்கட் 1800 ரூ. (எனக்கும் போட்டுக் குடுங்க தல என்று இப்போது அவருக்கு பத்து ஃபோன் போகும்.)
பிச்சாவரத்தில் அவர் எடுத்த வாசகர் வட்ட விழா எல்லாம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது. ஒரே இலக்கிய சாட்சி கவிஞர் ராஜ சுந்தரராஜன்.
எதற்கு இத்தனையும் சொல்கிறேன் என்றால், வாசகர் வட்டம் இருந்திருக்காவிட்டால் இப்போது நான் நிற்கும் இடத்தில் நின்றிருக்க முடியாது. மன உளைச்சலிலேயே செத்திருப்பேன். இப்போதும் என்னைப் பைத்தியம் என்றும், திருடன் என்றும் சொல்லிக்கொண்டு திரியும் எழுத்தாளர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்றால், வாசகர் வட்டம் மட்டும் இருந்திருக்காவிட்டால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?
என்னைத் திருடன் என்று எழுதியவனை Son of a swine என்று திட்டி மெஸேஜ் கொடுத்திருந்தாள் ஸ்ரீ. ஏன் அவன் தாயாரைத் திட்டுகிறாய் என்றேன். ”சேசே, திட்டவில்லை. அஸ்வமேத யாகத்தில் குழந்தையில்லாத ராணிகளை அசுவத்தை விட்டுப் புணரச் சொல்வார்களாம், அந்த மாதிரி இவன் பன்றிக்குப் பிறந்தவனாக இருக்க வேண்டும்” என்றாள்.
வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நண்பரும் எனக்குச் செய்யும் உதவியை வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வேறொரு நண்பரால் செய்ய இயலாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் சிறந்து விளங்குகிறார்கள். நேற்று எனக்கு ஹூலியோ கொர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச் நாவலைப் படிக்க வேண்டுமாயிருந்தது. புத்தகம் என்னிடம் இருந்தது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. யாரிடமோ கொடுத்து விட்டேன் போலும். இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் வீணான பிறகு ஸ்ரீராமிடம் கேட்டேன். ஐந்து நிமிடத்தில் இணையத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். இதை வேறு எவராலும் செய்ய இயலாது. அதேபோல் வினித் செய்த காரியங்களைச் செய்ய அவர் ஒருவரால்தான் முடியும். நான் ஏழெட்டு இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ள வினித் தான் முக்கிய காரணம். ஔரங்ஸேப் நாவலுக்கு ஐம்பதுக்கு மேற்பட்ட மதிப்புரைகள் வந்துள்ளன. இதில் இருபத்தைந்து மதிப்புரைக்கு வினித் தான் காரணம். ”இன்னார் முக்கியமான புத்திஜீவி. இவருக்கு நாவலை அனுப்புங்கள்” என்பார். அனுப்புவேன். மதிப்புரை வரும். இதைச் செய்ய வினித்தை விட்டால் யாரும் இல்லை.
ராஜா வெங்கடேஷ், செல்வா, ராஜா, செக்கந்தர், குமரேசன், மற்றொரு குமரேசன், அருணாசலம், ஆனந்தி, மதிவாணன், முத்துக்குமார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மிக முக்கியமான உதவிகளைச் செய்து வருகின்றனர். அமெரிக்காவிலும் இதுபோல் பத்துப் பதினைந்து நண்பர்கள் இருக்கின்றனர். ராம்ஜியும் காயத்ரியும் இல்லாவிட்டால் என் புத்தகங்கள் இந்த அளவுக்கு வாசகர்களை அடைந்திருக்காது. ஏழு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் செய்த உதவி மகத்தானது.
இவர்களில் சீனியின் உதவி என் எழுத்துக்கு நேரடியான பங்கை அளிக்கும் ஒன்று. அவர் ஒருவரிடம் மட்டுமே என் புதினங்களுக்கான யோசனைகளைக் கேட்கிறேன். உதாரணமாக, உல்லாசம் உல்லாசம் நாவலின் பிரதியை அனுப்பினேன். இன்னும் கடுமையாக எழுதப்பட வேண்டும், இது பலஹீனமாக இருக்கிறது என்றார். இப்போது அதைத் திரும்பவும் எழுதிக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் என் எழுத்தில் பிரவேசிக்கக் கூடிய ஒருவர் சீனி மட்டும்தான்.
இத்தனை இருந்தும் எனக்கு ஒரு மனக்குறை இருந்தது. என் சிறந்த மாணவர் என்று நான் இதுவரை ஒருவரையும் காண நேர்ந்தது இல்லை. சிறந்த மாணவர் என்றால் யார்? அதற்கு நான் வகுக்கும் தகுதி என்ன? நேற்று நான் மரியா லூய்ஸா போம்பலின் La ultima niebla (The ultimate fog) என்ற நாவலைப் படித்துப் பாருங்கள், இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் படித்ததில்லை என்று எழுதினேன். என் எழுபது வயது வரை சொல்கிறேன். யாருமே அதைப் படிக்க மாட்டார்கள். அப்படியே படித்தாலும் அது பற்றி என்னிடம் சொல்ல மாட்டார்கள். விவாதிக்கவும் மாட்டார்கள். அப்படி ஒரு நண்பரை, அப்படி ஒரு மாணவரை நான் பார்த்ததே இல்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை என் வாழ்நாள் முழுவதும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். யாரேனும் ஒரு புத்தகம் பற்றிச் சொன்னால் அதை ஒரு வாரத்தில் படித்து முடித்து விடுவேன். சொல்பவர் என் மதிப்புக்கு உரியவராக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
இப்போது அப்படி ஒரு மாணவியைப் பார்க்கிறேன். ஸ்ரீ. இன்று காலை அவளிடமிருந்து ஒரு மெஸேஜ் வந்தது. “நேற்று இரவு லா உல்த்திமா நியப்லாவைப் படித்தேன்.” நாவல் பற்றி இன்னும் நிறைய எழுதியிருந்தாள். அதைப் பிறகு பார்ப்போம். அப்படித்தான் சில தினங்களுக்கு முன் மை லைஃப், மை டெக்ஸ்ட் சுயசரிதையின் இருபது அத்தியாயங்களை அனுப்பினேன். ஒரே நாளில் படித்து முடித்தாள். இப்படி ஒருவரைச் சந்திக்க எழுபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. இத்தனைக்கும் அவள் தினமும் மூன்று மணி நேரம் ஃப்ரெஞ்ச் வகுப்புக்குச் செல்ல வேண்டும். அதற்கு மேலும் மூன்று மணி நேரம் அன்று நடத்திய பாடங்களில் வீட்டுப் பயிற்சி செய்ய வேண்டும். செய்யாவிட்டால் மறுநாள் வகுப்பைப் பின் தொடர முடியாது. இதுதவிர, இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கிறாள். அதற்கு வேண்டிய தயாரிப்பும் இருக்கிறது. இது போக, வீட்டில் இரண்டு வேளை சமைக்க வேண்டும். பணியாள் கிடையாது. சமீபத்தில்தான் தெரிந்தது, இட்லி மாவைக் கூட வெளியிலிருந்து வாங்குவது இல்லையாம். ஒரே ஒரு ஆறுதல், படித்துக்கொண்டிருப்பதன் காரணமாக அலுவலக வேலை இல்லை. வயதும் கம்மி என்பதால் சமாளிக்க முடிகிறது போலும்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரமாதமாக எழுதுகிறாள். அது மற்றொரு கூடுதல் வசதி. ஆங்கிலத்தில் எழுதுவதுதான் இப்போது அரிதான விஷயமாக இருக்கிறது.
ஏன் அடிக்கடி ஸ்ரீயின் புகைப்படத்தை மட்டுமே வெளியிடுகிறீர்கள் என்று ஒரு கொனஷ்டை கேட்டது. வேறு யாரும் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே, என்ன செய்ய? சென்ற மாதம் ஸ்ரீராமிடம் கேட்டேன். அவருடைய ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார். இப்படி மகாத்மாக்களாக இருந்தால் என்ன செய்வது? இன்னொரு புகைப்படம் கிடைத்தது. சீனியும் நானும். சீனி ஒரு பட்டாக் கத்தியால் என்னைக் குத்த வருவது போல! அதனால் ஸ்ரீயின் புகைப்படம் மட்டுமே வருவதற்கு அடியேன் காரணம் அல்ல. என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். தினமுமே வெளியிடுகிறேன்.