தவம்

என்னிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்குதிரைக்காக ஏராளமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் ஒன்று, கடல் கன்னி என்ற கதை. கிட்டத்தட்ட குறுநாவல் அளவு வரும். ரொஹெலியோ சினான் (Rogelio Sinán) என்ற எழுத்தாளரின் கதை. பனாமாவைச் சேர்ந்தவர். இவர் பெயரெல்லாம் யாருக்கும் தெரியாது. எனக்கு எப்படித் தெரிந்தது? அந்தக் காலகட்டத்தில் கூபாவிலிருந்து க்ரான்மா என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. Tabloid. அதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத கதைகளையே க்ரான்மாவில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். அவர்களின் குறிக்கோள், க்ரான்மாவில் வரும் கதை முதல்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதாக இருக்க வேண்டும்.

கடல்கன்னி என்பது நான் வைத்த தலைப்பு. ஆங்கிலத் தலைப்பு Red Beret. சிவப்புத் தொப்பி என்றால் தமிழில் நன்றாக இருக்காது. ஒரு பெண் கடல் கன்னியாக மாறி விடுவாள். அதனால் அந்தத் தலைப்பை வைத்தேன். நீங்கள் ஆயிரக்கணக்கான கதைகளைப் படித்திருந்தாலும் ரொஹேலியோ சினானின் கடல்கன்னி போன்ற ஒரு கதையை உங்கள் ஆயுள் முழுவதுமே மறக்க இயலாது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இப்படியெல்லாம் ஒரு சமுத்திரத்தைப் போல் விஷயங்களைக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து “உங்கள் முதுகில் காக்காய் பீ பேண்டிருக்கிறது” என்றும், “ஏன் உங்கள் பூனைகளை கடல்கரையில் கொண்டு போய் விட மாட்டேன் என்கிறீர்கள்?” என்றும், “ஏன் உங்கள் தோழிகளுக்கு அதிக இடம் கொடுக்கிறீர்கள்?” என்றும் கேட்டு என்னை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இப்படிப்பட்ட அன்பர்களை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. நான் தோழமையுடன் தோளில் கை போட்டால், எனக்கு ஆசானாகி விடுகிறார்கள். உடனே நான் விரட்டியடித்து விடுகிறேன்.

எத்தனை பேர் விலகினாலும் சரி, எத்தனை பேர் எனக்கு ஆசானாக நினைத்தாலும் சரி, தோழமையுடன் தோளில் கை போடுவதை நிறுத்த மாட்டேன். என்னிடமிருந்து பெற்றுக் கொண்டால் உங்களுக்கு லாபம். உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள எனக்கு எதுவுமே இல்லை. பணம் மட்டுமே என்னிடம் இல்லை. அவ்வளவுதான். எனக்குத் தரக் கூடிய அளவுக்கு மேலே இருக்கும் ஒரு மனிதனை இதுவரை நான் சந்தித்தது இல்லை. இதில் எனக்கு எந்த கர்வமும் இல்லை. இது ஒரு எதார்த்தம், அவ்வளவுதான். அப்படி சந்தித்தால் நான் பெருமிதமே கொள்வேன். க.நா.சு.வின் ஞாபகம் வருகிறது. ஆனால் அவரது மேதமையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அப்போது நான் தேர்ச்சி பெற்றவனாக இல்லை. தேர்ச்சி அடைந்து விட்ட போது அவர் போய் விட்டார். அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் மழையில் தென்படும் விட்டில் பூச்சிகளெல்லாம் தன்னை உலகளந்தானாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

பெரியோரிடம் பணிவு வேண்டும். அசோகமித்திரனைப் பார்த்தால் நான் அவரது காலடியில்தான் அமர்ந்திருப்பேன். பணிவு என்பது ஜால்ரா தட்டுவது அல்ல. சீனி என் காலடியில் அமர்வது இல்லை. எனக்கு அவர் ஜால்ரா தட்டுவதும் இல்லை. நூறு விஷயம் பேசினால் தொண்ணூறு கருத்து மாற்றுக் கருத்துதான். நான் கூட அவரைக் கிண்டலாக மாற்றுக் கருத்து மன்னார்சாமி என்று திட்டுவதுண்டு. ஆனால் ஒருமுறை கூட அவர் என்னை ஏறி மிதித்தது இல்லை.

ஏறி மிதிப்பது என்றால்? ’யோவ், போய்யா புடுங்கி’ என்ற மனோபாவம். எனக்கே புத்திமதி சொல்ல முயல்வது. அந்தக் காரியத்தை சீனியோ, ஸ்ரீராமோ, செல்வாவோ, ராஜாவோ, ராஜா வெங்கடேஷோ, வளனோ, கார்த்திக் நாகேந்திரனோ ஒருமுறை கூட – ஆம், ஒருமுறை கூட – செய்தது இல்லை. பெண்களை விட்டு விடுகிறேன். அவர்கள் என்னைப் பார்த்தவுடனேயே எனக்கு Babysitter பொறுப்பை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள். அதுவும் நல்லதுக்குத்தானே, இல்லையா? ஒருமுறை கார்த்திக் பிச்சுமணி சொன்னார், ”சாரு ஒரு ஐகான், சாருவை மறுப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒருவர் ஐகானாக இருக்க வேண்டும்.” கார்த்திக் சொன்னது வேறு ஒரு வார்த்தை. கூச்சம் கருதி அதைத் தவிர்க்கிறேன். இதுவே எனக்குக் கூச்சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எழுதித் தொலைய வேண்டியிருக்கிறது. நேற்று முளைத்த நண்டு சிண்டெல்லாம் நம்மை நோண்ட வரும்போது இப்படித்தான் கூச்சநாச்சமின்றி எழுத வேண்டியிருக்கிறது.

La ultima niebla என்ற ஒரு குறுநாவலைப் படித்தேன். 1935இல் Maria Luisa Bombal எழுதியது. சீலேயைச் சேர்ந்தவர். இவருடைய மரம் என்ற சிறுகதையை நான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்திருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ளது. எனக்கு புத்திமதி சொல்ல முயலும் இருபத்தேழு வயது தம்பிகள் இதை கவனிக்க வேண்டும். இப்படி ஒரு குறுநாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை. தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை. நீங்களும் படித்துப் பாருங்கள். யாரோ நேற்று எழுதியது போல் உள்ளது. இதையெல்லாம் விட்டுவிட்டு எதையோ மடக்கி மடக்கி மொழியில் நோண்டிக்கொண்டிருக்கும் இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் நான் ஏன் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இத்தனை வயதிலும் 1935இல் எழுதப்பட்ட லா உல்த்திமா நியப்லா என்ற இந்தக் குறுநாவலிலிருந்து நான் கற்றுக் கொள்கிறேன்.

https://armandfbaker.github.io/translations/novels/ultima_niebla.pdf