My Life, My Text என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் Asian Review இணைய இதழில் என் சுயசரிதத்தை எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது அதன் ஆறாவது அத்தியாயம் வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடருக்காக இதுவரை உலக மொழிகளில் எழுதப்பட்டுள்ள முக்கியமான சுயசரிதங்களைப் படித்து விட்டேன். ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. ஆலன் ராப்-க்ரியே எழுதிய Ghosts in the Mirror. இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும். காத்திருக்கிறேன். அதற்கிடையில் கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய கலந்துரையாடலுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஞாபக சக்தி கம்மி. ஏற்கனவே படித்ததை வைத்து ஒப்பேற்ற முடியாது. எனக்குத் திரும்பவும் படிக்க வேண்டும். முழுமையாக அல்ல. ஓட்டினால் போதும். மார்க்கேஸ் என்றால் மார்க்கேஸ் பற்றி மட்டுமே பேச மாட்டேன். சீலேயை சேர்ந்த Maria Luisa Bombal, Juan Rulfo, Alejo Carpentier, Julio Cortazar என்று பலரையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இவர்களிடமிருந்து ஒவ்வொரு கதையைத் தேர்ந்தெடுத்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் என்னோடு சரிக்கு சரியாக அமர்ந்து கொண்டு, ”சாருவும் நானும் சமானம்” என்று நினைத்து, எனக்கு புத்திமதி சொல்லும் அன்பர்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் நான் மொழிபெயர்த்த கதைகள் உள்ளன. அதில் மழை என்று ஒரு கதை. ஆர்த்துரோ ஊஸ்லார் பியத்ரி எழுதியது. Arturo Uslar Pietri. வெனிஸுவலாவைச் சேர்ந்தவர். அப்படி ஒரு கதையை நீங்கள் அதற்கு முன்போ பின்போ வாசித்திருக்க முடியாது. இவர்கள் எல்லோரையும் பற்றிச் சுருக்கமாகப் பேசிவிட்டுத்தான் மார்க்கேஸுக்கு வர வேண்டும். மரியா லூயிஸா போம்பலின் மரம் என்ற கதை 1930களில் எழுதப்பட்டது. ஆனால் மார்க்கேஸுக்கு நோபல் கிடைத்தது இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகுதான்.
மை லைஃப், மை டெக்ஸ்ட் இருபது அத்தியாயங்கள் எழுதி முடித்து விட்டேன். அவ்வளவையும் படித்த ஸ்ரீ ஹாலிவுட் த்ரில்லர் பார்த்தது போல் இருந்ததாகச் சொன்னாள். எழுதிய எனக்குமே அப்படித்தான் இருந்தது. எல்லாம் உங்களிடம் சொன்ன கதைகள்தான். ஆங்கிலத்தில் தருகிறேன். என் தமிழ் வசீகரமானது. நுணுக்கங்கள் பல கொண்டது. ஆனால் ஆங்கிலம் அப்படி எழுத முடியவில்லை. கூட்டு வாக்கியங்கள் வரவில்லை. எளிமையாகத்தான் எழுத முடிகிறது. மூன்றாம் உலக நாடுகளில் அப்படித்தான் எழுதுவதாக ஆறுதல் கூறுகிறார்கள். இனிமேல் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் நானே என் நாவல்களையும் மொழிபெயர்த்து விடுவேன். பார்க்கலாம். இப்போது மை லைஃப், மை டெக்ஸ்ட் ஆறாம் அத்தியாயம்.
https://asian-reviews.com/2024/04/29/my-life-my-text-by-charu-nivedita-episode-06/