அராத்து, ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்

சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்குப் பிறகு வந்த காமெடியில் வடிவேலு மட்டும்தான் என் மனதில் நிற்கிறார். பிறகு அவர் வில்லனாக மாறின பிறகு அவரும் மனதிலிருந்து நீங்கி விட்டார்.  ஆக, வாழ்க்கையில் காமெடிக்குப் பஞ்சமான நிலைமைதான்.  வாசகர் வட்டத்திலும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் யாரும் இல்லை.  சீனி ஒரு புத்திசாலி.  புத்திசாலிகளுக்குக் காமெடி வராது.  ஜக்கியும் புத்திசாலி.  அவருக்கும் காமெடி வராது.  இப்படிப்பட்ட காமெடி வறட்சி மிகுந்த பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்குபவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்.  எனக்கு எப்போதெல்லாம் படித்துப் படித்து மண்டை கலங்கிய நிலை வருகிறதோ அப்போதெல்லாம் ரவிஷங்கரின் பேச்சுகளைக் கேட்பேன்.  கவுண்டரின் வாழைப்பழ ஜோக் பார்த்த மாதிரி மனம் குதூகலம் ஆகி விடும்.

சீனிக்கும் ஜக்கிக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது.  இரண்டு பேருமே macho ஆட்கள்.  எனக்கு புத்திசாலிகளையும் பிடிக்காது.  ’மேக்கோ’ ஆட்களையும் பிடிக்காது.  அப்புறம் ஏன் எனக்கு சீனியைப் பிடிக்கிறது என்று கேட்கிறீர்களா?  எனக்கே தெரியவில்லை. 

ரவிஷங்கரைப் பிடிக்க இன்னொரு காரணம், அவர் பெண்களைப் போல் பேசுகிறார்.  Womanlyயாக இருக்கிறார்.  ஆரம்பத்திலிருந்தே எனக்கு மாதொரு பாகர்களை ரொம்பவும் பிடிக்கும்.

இத்தனையும் ஏன் என்றால், சமீபத்தில் ரவியின் பேச்சில் செம ரகளையான ஒரு விஷயம் சொன்னார்.  விவேகானந்தர் அமெரிக்கா சென்ற போது நடந்தது.  ஒரு அமெரிக்கப் பணக்காரர் விவேகாவை அவமானப்படுத்த நினைக்கிறார். 

யோவ் சாமி, சாலையில் உமக்கு எதிரில் ஞானமும் பணமும் கிடந்தால் நீர் எதை எடுப்பீர்?”

சந்தேகமே இல்லாமல் பணத்தைத்தான் எடுப்பேன்.

பார்த்தீர்களா, இந்தியாவிலிருந்து இங்கே அமெரிக்காவுக்கு வந்து பணத்தைப் பொறுக்குகிறீர்கள். எத்தகையதொரு இழிநிலை உங்களுக்கு?

யாரிடம் எது இல்லையோ அதைத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும், நண்பரே? 

எழுதும்போது இதில் உள்ள பகடி உங்களுக்கு எப்படி வந்து சேர்கிறதோ, ஆனால் ரவிஷங்கர் பெண் குரலில் இதைச் சொல்லும்போது செம காமெடியாக இருந்தது. 

நானும் விவேகானந்தர் மாதிரிதான்.  வேண்டிய அளவு ஞானம் என் வசம் குவிந்து கிடக்கிறது.  பணம்தான் இல்லை. 

இதை இங்கே எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.  சமீபத்தில் வாசகர் வட்ட நண்பர் ஒருவர் என் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார்.  (ஆமாம், இப்போதெல்லாம் அந்த நண்பரின் காரணமாக சாரு வாசகர் வட்டம் சாரு விமர்சகர் வட்டம் மாதிரி ஆகிக்கொண்டு வருகிறது!)  குற்றச்சாட்டு இதுதான்:  சாருவுக்குப் பண உதவி செய்பவர்கள் மீது சாரு மென்மையாக இருக்கிறார். 

அப்படி நான் பாகுபாடு பார்ப்பதில்லை என்றாலும், அப்படிப் பார்த்தாலும் தப்பு இல்லை என்கிறேன்.  காரணம், சமூகம் பணத்தைத்தானே அதிமுக்கியமானதாகக் கருதுகிறது?  

ஒரு மனிதனுக்கு எது முக்கியம்?  அவனுடைய உயிர்.  ஆனால் மனிதர்கள் தம் உயிரை விடவும் பணத்துக்குத்தானே முக்கியத்துவம் அளிக்கிறார்கள்? 

இந்த வயதில் நான் பாத்திரம் தேய்க்கிறேன் என்று எழுதினேன் இல்லையா?  கொரோனா சமயத்திலும் நான்தான் மூன்று ஆண்டுகள் வண்டி வண்டியாகப் பாத்திரம் தேய்த்தேன்.  அப்போது ஒரு நண்பர் என்னை சந்தித்தார்.  ஐந்து நட்சத்திர ஓட்டல்.  இரண்டு பேர் சாப்பாட்டுக்கே ஆறு ஏழு ஆயிரம் ஆனது.  நண்பர் ஆயிரம் கோடிக்கு அதிபர்.  மேலேயே இருக்கும்.  அவர் சொன்னார், “சாரு, நானும் உங்களைப் போலவே என் வீட்டில் பாத்திரம் தேய்க்கிறேன்.”

வாசகர் வட்ட நண்பர்கள் யாருமே இதை நம்ப மாட்டார்கள்.  நான் நம்புகிறேன்.  கோடீஸ்வரர் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும்?  அவசியமே இல்லை. 

பிரச்சினை என்னவென்றால், பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கித் துடைக்க வந்த பணிப்பெண் பத்தாயிரம் சம்பளம் கேட்டார்.  கோடீஸ்வரர் மனைவி நாலாயிரம் தருகிறேன் என்றார்.  பணிப்பெண்ணுக்கு சம்மதம் இல்லை.  நண்பரே பாத்திரம் தேய்க்கிறார். 

இது ஏன் உண்மை என்றால், 20000 கோடிக்கு அதிபர் ஒருவர்.  அவர் வீட்டில் சமையலுக்கு ஆள் வேண்டும்.  6000 ரூ. சம்பளம் தருகிறேன் என்கிறார் வீட்டுத் தலைவி.  பத்தாயிரம் கேட்கிறார்கள் சமையல் பெண்கள்.  அதனால் ஆளே கிடைக்கவில்லை என்று புலம்பினார் அந்த வீட்டுத் தலைவர். 

இப்படி இருக்கிறது நாட்டு நடப்பு.  என்னுடைய கோடீஸ்வர நண்பர்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறு யாரும் எனக்கு ஒரு பைசா தருவதில்லை.  எனக்குப் பண உதவி செய்பவர் அத்தனை பேரும் நடுத்தர வர்க்கம்.  மற்றும், விளிம்புநிலை மக்கள். 

ஆக, இப்படிப்பட்ட சூழலில் ஒருவர் என் எழுத்துக்காக பத்தாயிரம் ரூபாய் அனுப்புகிறார், ஒரு லட்சம் அனுப்புகிறார் என்றால், அது எத்தனை பெரிய விஷயம்?