எழுத்தாளன் என்றால் எடுபிடியா?

எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.  அது என் நண்பகள் பலருக்கும் புரிவதில்லை.  ”உங்கள் நாவலை ஒரு லட்சம் கொடுத்து வாங்குகிறார்கள், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.  அப்படியும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என்பது அவர்கள் கேள்வி.

அப்படி வாங்குபவர்கள் என் வாசகர்கள்.  தமிழ்ச் சமூகம் அல்ல.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களைத் தங்கள் எடுபிடிகளாக நினைக்கிறது.  பிரபு தேவா என்ற சினிமாக்காரருக்காக ஐயாயிரம் குழந்தைகளை இந்தக் கொடூரமான வெய்யிலில் நிறுத்தி வதைத்திருக்கிறார்கள்.  யார்?  அக்குழந்தைகளின் பெற்றோர்.  எதற்காக?  பிரபு தேவா பாடலுக்கு அக்குழந்தைகள் ஆடுவதற்காக.  இதற்கு அந்தப் பெற்றோர் ஆயிரம் இரண்டாயிரம் ஐயாயிரம் என்று பணம் வேறு கட்டியிருக்கிறார்கள்.  காலையில் ஆறு மணிக்குத் தொடங்க இருந்த நிகழ்ச்சி காலை ஒன்பது மணிக்குக் கூட தொடங்கவில்லை.  குழந்தைகள் மயக்கமடித்து விழுந்திருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட சமூகம் உருப்படுமா?  இந்தக் கழிசடைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஞானம் வளர்வதற்காக ஒரு இலக்கியப் புத்தகத்தை வாங்கிப் படிப்பார்களா?  இலக்கியவாதிகளின் நூல்கள் நூறு பிரதிதான் விற்கின்றன.  என் நூல்கள் இருநூறு.  இதனால்தான் சொல்கிறேன், எழுத்தாளர்களை தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று.

கொண்டாடவில்லை என்பது மட்டும் அல்ல; எழுத்தாளர்களை தமிழ்ச் சமூகம் தன் எடுபிடியாக நடத்துகிறது.   சமீபத்தில் புத்தக தினம் அன்று ஒரு இணையத் தொலைக்காட்சி நிறுவனம் என்னைப் பேச அழைத்திருந்தது.  நான் ஒரு புத்தகம் பற்றிப் பேச வேண்டும்.  அதற்காக நான் ஒரு வாரம் அந்த நூலைப் படித்தேன்.  ஒரு வாரம்.  எனக்கு சன்மானம் எதுவும் இல்லை.  நானும் எதிர்பார்க்கவில்லை.  ஏனென்றால், ஒரு மாதம் முன்பு அவர்கள் என்னை ஒரு நேர்காணலுக்காக அழைத்திருந்தார்கள்.  சென்றேன்.  பேசி விட்டு வந்தேன்.  இதில் எனக்கு முந்நூறு ரூபாயும், நான்கு மணி நேரமும் செலவு.  இதையே நான் இணையம் மூலமாகப் பேசினால் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்.  கட்டணம் கூட வைக்க வேண்டாம்.  ”உங்களால் முடிந்ததை அனுப்புங்கள், நான் ஒன்றரை மணி நேரம் பேசுகிறேன், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்” என்றால் நிச்சயம் ஐம்பதாயிரம் வரும்.  நூறு ரூபாயிலிருந்து இருபத்தைந்தாயிரம் வரை அனுப்புவார்கள்.

ஜெயமோகனின் கட்டண உரை பற்றி உங்களுக்குத் தெரியும்.  முந்நூறு பேர் வருவார்கள்.  ஒருவருக்குக் கட்டணம் ஐநூறு ரூபாய்.  என் நண்பர் ஒருவர் முன்பதிவு செய்ய முயன்றார்.  இடம் இல்லை.  கட்டணமாகக் கிடைப்பது ஒன்றரை லட்சம் ரூபாய்.  இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் இதற்கெல்லாம் மணி கட்டியது நான்தான்.  எழுத்தாளன் உங்களுக்காகச் செலவிடும் நேரத்துக்கு உரிய பணத்தைக் கொடுங்கள் என்று இந்த சமூகத்துக்கு முதல் முதலாக சுரணை ஊட்டியது நான். 

ஆனாலும் என் செய்தி மக்களுக்குப் போய்ச் சேரட்டும் என்றே தொலைக்காட்சி நேர்காணல்களுக்குச் செல்கிறேன்.  ஆனால் அவர்களோ எனக்கு விளம்பரம் கொடுப்பதாக நினைக்கிறார்கள்.  இந்த விளம்பரத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  மனுஷ்ய புத்திரன்தான் இன்று தொலைக்காட்சியில் அதிகம் தெரிபவர்.  அதனால் அவர் புத்தகம் அதிகம் விற்கிறதா?  ஒரு சராசரி அவரை சென்னை புத்தக விழாவில் உயிர்மை அரங்கு வாசலில் பார்த்து விட்டு “என்ன சார், இங்கே ஒக்காந்திருக்கீங்க?” என்று கேட்டிருக்கிறது. 

நான் வாராவாரம் நீயா நானாவில் வந்தாலும் என் நாவல் பெட்டியோ ஐநூறு பிரதிதான் விற்கும்.  நீயா நோனாவுக்காக ஒரு பிரதி கூட அதிகம் விற்காது.

புத்தக தினம் வந்தது.  வடபழனி வரை போக வேண்டும்.  நிறுவனத்திலிருந்து வாகனம் அனுப்ப மாட்டார்கள்.  அவர்கள் அது பற்றிப் பேசவில்லை.  அவர்கள் எனக்கு விளம்பரம் தந்து அனுகூலம் அல்லவா செய்கிறார்கள்?  அவர்கள் எதற்கு எனக்கு வாகனம் அனுப்ப வேண்டும்?

ட்ராவல்ஸ் வைத்து நடத்தும் என் நண்பருக்கு காருக்காகக் காலையில் ஃபோன் செய்தேன்.  நேற்றே சொல்லியிருக்கலாமே என்றார் நண்பர்.  இன்றுதான் புத்தக தினம், இன்றுதான் இருபத்து மூன்றாம் தேதி என்று இன்றுதான் எனக்குத் தெரியும்.  இன்று காலைதான் நிறுவனத்திலிருந்து எனக்குச் செய்தி வந்தது என்றேன். 

தொண்ணூறு சதவிகிதம் கார் கிடைத்து விடும்.  ஆனால் பத்து சதவிகிதம் சந்தேகம் என்றார் நண்பர்.  உடனே இன்னொரு நண்பருக்கு ஃபோன் போட்டு காருக்கு சொன்னேன்.  பத்து நிமிடத்தில் செய்தி சொல்கிறேன் என்றார் நண்பர்.  அரை மணி நேரம் ஆயிற்று.  நண்பர் பலவிதமான பொறுப்புகளில் இருப்பவர்.  மீண்டும் ஃபோன் செய்து கேட்டேன்.  கார் ஏற்பாடு ஆகி விட்டது என்றார்.  என்னால் இந்த ஆட்டோக்காரர்களிடம் மல்லுக்கு நிற்க முடியாது.  வடபழனியா, ஐநூறு கொடு என்பார்கள். 

இப்போது தொண்ணூறு சதவிகிதம் சொன்ன நண்பருக்கு ஃபோன் போட்டு கார் வேண்டாம் என்று தெரிவித்தேன்.

இதற்கிடையில் ஒரு இருபது நிமிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்குக் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

மாலை ஐந்து மணிக்குக் கூட்டம்.  ஒரு மணி அளவில் செய்தி வந்தது.  “ஏழு நிமிடம் மட்டுமே பேச வேண்டும்.  அரங்கில் இருக்கும் சக எழுத்தாளர்கள் யாரையும் விமர்சிக்கக் கூடாது.”  இதுபோல் இன்னும் ஐந்தாறு உத்தரவுகள் இருந்தன.

யோவ், தானம் கொடுத்த மாட்டை பல்லையா பிடித்துப் பார்க்கிறாய் என்று நினைத்துக்கொண்டு, நண்பருக்கு ஃபோன் செய்து காரை ரத்து செய்தேன்.  அதற்குப் பிறகு தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து வந்த ஃபோனை எடுக்கவில்லை.  எழுத்தாளர்கள் என்றால் யார் என்று விளக்கி ஒரு ஏழு நிமிடம் பேசி பதிவு செய்து அனுப்பி வைத்தேன்.  அவர்களிடமிருந்து வந்த பதில் ஒலிப்பதிவை நான் கேட்கவில்லை.  மறுநாள் அவர்களே அதை ரத்து செய்து விட்டார்கள்.

இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு சினிமாக்காரர்கள் ஓசியில் வருகிறார்கள் என்றால் அவர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.  நாங்கள் உஞ்சவிருத்தி அல்லவா செய்து கொண்டிருக்கிறோம்?  எங்கள் நேரத்துக்கு யார் ஐயா காசு கொடுப்பது? 

எனக்கு அடிக்கடி வாசகர்கள் குறும்படங்களை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள்.  சரி.  அந்த நேரத்துக்குக் கட்டணம்? 

சென்ற மாதம் அனுராக் காஷ்யப் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

If someone wants to meet me for 10-15 minutes I will charge 1 lac, for half hour 2 lacs and for 1 hour 5 lacs. That’s the rate. I am tired of wasting time meeting people. If you really think you can afford it, call me or stay the f**k away. And all paid in advance (folded hands emoji).

கவனியுங்கள்.  பத்து நிமிடத்துக்கு ஒரு லட்சம்.  அரை மணி நேரத்துக்கு இரண்டு லட்சம்.  ஒரு மணி நேரத்துக்கு ஐந்து லட்சம்.  உங்களால் முடிந்தால் என்னை அழையுங்கள்.  அல்லது, stay the fuck away.  பணத்தையும் முன்கூட்டியே தந்து விட வேண்டும். 

சாரு நிவேதிதாவாகிய நான் அனுராக் காஷ்யப்பை விட முக்கியமானவன்.  130 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  இந்திய சினிமாவில் சத்யஜித் ரேயும், ரித்விக் கட்டக்கும், இந்தி சினிமாவில் அமிதாபும் எப்படியோ அப்படிப்பட்டவன் நான்.  என்னுடைய நேரத்துக்கு நீங்கள் பணம் கொடுக்க முடிந்தால் மட்டுமே என்னை சந்திக்க முடியும். கட்டணம் கட்டினால் மட்டுமே உங்கள் குறும்படங்களை நான் பார்ப்பேன்.

இவ்வளவும் எதற்கென்றால், நேற்று ஒரு மல்லி ஃபோன் பண்ணினார்.  (சிங்களத்தில் மல்லி என்றால் தம்பி).  “சார், நான் இன்னாரின் உதவி இயக்குனர்.  சார் உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பச் சொன்னாங்க.  அட்ரஸ் சொன்னீங்கன்னா எழுதிக்கிறேன்.”

இதோ எழுதிக்கிங்க.  41/75 கேஜி மெரீனா பே.

ஃபோர்ட்டீன் டொண்ட்ட்டி ஃபை, பேஜீ… மெரினா கே…  சொல்லுங்க சார். 

இல்லிங்க.  நீங்க எனக்கு ஒரு வாட்ஸப் பண்ணுங்க.  நான் வாட்ஸப்பில் அட்ரஸ் அனுப்புகிறேன்.

அனுப்பினேன்.  இன்று இயக்குனர் எழுதிய கவிதை நூல் குரியரில் வந்தது. 

இயக்குனர் என் நண்பர்.  அந்த நட்பு கருதித்தான் பெயர் குறிப்பிடாமல் எழுதுகிறேன். 

மற்ற எழுத்தாளர்களாக இருந்தால் இதைத் தமக்கு அளிக்கப்பட்ட கௌவரமாக நினைத்திருப்பார்கள்.  நான் இதை என் மீது செலுத்தப்படும் வன்முறை என்று நினைக்கிறேன்.

ஏன் என்று புரிந்து கொள்பவர்கள் பாக்கியசாலிகள்.  மற்றவர்களை நினைத்து நான் பரிதாபம் கொள்கிறேன்.  ஆனாலும் என்னால் முடிந்த வரை விளக்குகிறேன். 

தமிழ்நாட்டில் சினிமாவின் வீச்சு அதிகம்.  வீச்சு கூட அல்ல.  தமிழ்நாட்டின் காற்றே சினிமாவினால்தான் நிரம்பியுள்ளது.  இங்கே சினிமா நடிகர்கள் கடவுளுக்கு சம்ம்.  இப்போது நடக்கும் இளையராஜா பஜனை, இளையராஜா வழிபாட்டைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.  இங்கே நான் முதலமைச்சரைக் கூட விமர்சிக்கலாம்.  ஒரு சலனமும் இருக்காது.  ஆனால் ஒரு நடிகனை விமர்சித்து விட்டால் ஐயாயிரம் பேர் என் வீட்டுப் பெண்களை ரேப் பண்ணக் கிளம்புகிறார்கள்.  சமீபத்தில் நான் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்துப் பேசியதற்கு வந்த எதிர்வினைகள் அப்படித்தான் இருந்தன.  இங்கே ரஜினி கடவுள்.  கமல் கடவுள்.  அஜித் கடவுள்.  விஜய் கடவுள்.  இளையராஜா கடவுளுக்கெல்லாம் கடவுள்.  இயக்குனர்களும் அப்படியே.  குட்டிக் கடவுள்கள்.  அதில் பெரும் கடவுள் மிஷ்கின்.

இந்த நிலையில் சினிமாக்காரர்களாகிய நீங்கள்தானே ஐயா ”நான் கடவுள்” பட்த்தில் வரும் பிச்சைக்காரர்களைப் போல் நக்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றிப் பேச வேண்டும்?  ப்ரமோட் பண்ண வேண்டும்?  நான் கேட்கிறேன், கமல்ஹாசனைத் தவிர நீங்கள் ஒரு ஆளாவது, ஒரு எழுத்தாளனைப் பற்றியாவது எங்கேயாவது பேசியிருக்கிறீர்களா, சொல்லுங்கள்?  (இத்தனைக்கும் கமலுக்கும் எனக்கும் ஆகாது என்பதால் என் பெயரை அவர் உச்சரிக்கவே மாட்டார்.  அது வேறு விஷயம்!)

இயக்குனர் வசந்துக்குக் கமல் அளவு ரசிகர் கூட்டம் இல்லை.  ஆனால் அவரை அழைக்கும்போதெல்லாம் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்கிறார்.  எழுத்தாளர்கள் பற்றிப் பேசுகிறார்.  வேறு யாராவது?  இப்போது எனக்குக் கவிதை நூலை அனுப்பி வைத்திருக்கும் இயக்குனர் நண்பரே, நீங்கள் ஒரு இடத்திலாவது நான் எழுதியிருக்கும் 130 நூல்களில் ஏதேனும் ஒரு நூல் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? 

சென்ற ஆண்டுகளில் என்னுடைய ஆயிரம் பக்க நாவல் “என் பெயர் ஔரங்ஸேப்” வந்தது.  அதற்குப் பிறகு “அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” வந்த்து.  இந்த நாவலை இலக்கியம் தெரியாத சராசரி மனிதர்கள் கூடப் படிக்கலாம்.  படிக்க வேண்டும்.  பிறகு சென்ற ஆண்டு பெட்டியோ என்ற நாவல் வந்தது.  இப்படி அடுத்தடுத்து நாவல்களாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறேன்.  இவற்றில் ஒன்றையாவது நீங்கள் படித்தீர்களா?  அப்படிப் படிக்காமல் நீங்கள் எழுதிய கவிதை நூலை மட்டும் நான் படிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?  அதிலும் நீங்கள் தமிழ் சினிமா என்ற இமயத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.  அதிலும் நாலைந்து முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமா. தமிழர்களின் உயிர்மூச்சாக விளங்கும் தமிழ் சினிமா.  கோடிகளில் பணத்தை அள்ளித் தரும் தமிழ் சினிமா.  புதுமைப்பித்தன் கடைசி காலத்தில் க்ஷயரோகம் வந்து மருந்து வாங்கக் காசில்லாமல், சாப்பிடக் காசில்லாமல் செத்தான் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும்தானே?  இன்னமும் தமிழ் எழுத்தாளன் அப்படித்தான் இருக்கிறான் இயக்குனரே…  இன்னமும் எனக்கு ஒரு பத்திரிகையில் எழுதினால் 900 ரூபாய்தான் கிடைக்கிறது.  அந்தத் தொள்ளாயிரம் ரூபாய் கட்டுரைக்கு நான் அஞ்சாயிரம் பத்தாயிரம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 

நீங்கள் செய்வது, பிச்சைக்காரனிடம் போய் அம்பானி “எனக்குக் கொஞ்சம் அங்கீகாரம் கொடு” என்று கேட்பது போல் இருக்கிறது.  ஏன் நண்பரே, தமிழ்நாட்டையே சினிமாதான் ஆட்டிப் படைக்கிறது.  இந்த நிலையில் எழுத்தாளன்களும் உங்களுக்கு ப்ளோஜாப் செய்து விட வேண்டுமா? 

ஒன்று தெரியுமா இயக்குனரே!  படு மொக்கையான கமர்ஷியல் படங்கள் எடுக்கிறார்கள் அல்லவா, அவர்களெல்லாம் உங்களை விடத் தேவலாம்.  அவர்களுக்கு எந்த்த் தமிழ் எழுத்தாளனையும் தெரியாது.  அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இலக்கியத்தையும் தெரிந்து கொண்டு வாழும் உங்களைப் போன்றவர்கள்தான் எழுத்தாளனின் குருதியை உறிஞ்ச விரும்புகிறீர்கள்.  சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர்  – இருபது ஆண்டுகளாக என்னை அறிந்தவர் – அவரும் ஒரு ’எழுத்தாளர்’ – என்னை அழைத்தார்.  ”சாரு, ஒரு நூறு எழுத்தாளர்களின் முகவரிகளைச் சேகரித்துத் தாருங்கள்.  அவர்களுக்காக “நம்முடைய” படத்தைப் போட்டுக் காண்பிப்போம்.” 

அவர் குரலில்தான் என்ன ஒரு அதிகாரம்!  என்ன ஒரு ஆணவம்!  என்ன ஒரு தன்னம்பிக்கை!  ஏண்டா, எழுத்தாளனெல்லாம் உங்கள் வீட்டு எடுபிடிகளாடா என்று நினைத்துக்கொண்டு, ”ஜமாய்த்து விடுவோம், நான் சீலே போகிறேன்.  ஆறு ஏழு லட்சம் ஆகும் போல் இருக்கிறது.  அதில் ஒரு லட்சம் நீங்கள் கொடுங்கள்” என்றேன்.  ஆள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார். 

நீங்கள் நல்லவர்.  அந்த அளவுக்குப் போகவில்லை.  உங்கள் கவிதை நூலை அனுப்பியிருக்கிறீர்கள்.  இதை ஏன் செய்தீர்கள் தெரியுமா?  என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பினால்.  ஆனால் அன்பை வெளிப்படுத்தவே தெரியாமல் நீங்கள் எப்படி அன்பு அன்பாய் படம் எடுக்கிறீர்கள் இயக்குனர்? 

அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் தெரியுமா?  இலவசமாக உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறேன்.

என்னுடைய அன்பு நாவலை ஆயிரம் பிரதிகள் வாங்கி உங்களுடைய சினிமா நண்பர்களுக்கெல்லாம் கொடுத்திருக்க வேண்டும்.  அதுதான் அன்பு.  ஏனென்றால், அந்த நாவல் எழுதப் படிக்கத் தெரிந்தவர் அத்தனை பேரும் படிக்க வேண்டியது. 

நீங்கள் என்ன சொல்வீர்கள்?  ”சார், இந்த உலகத்திலேயே என் அம்மா மட்டும்தான் நீங்கள் என்னை அழைப்பது போல் அழைப்பார்கள்.”  அப்படியானால் உங்கள் பெயரின் முதல் பகுதியால் உங்களை அழைக்கும் போதெல்லாம் நான் உங்களுக்கு உங்கள் அன்னையின் நினைவைக் கொண்டு வருகிறேன்.  அப்படிப்பட்ட ஒருவருக்கு உங்களுடைய ஒரு கவிதை நூலை அனுப்புவதுதான் அன்பா?  என்னுடைய நூலை நீங்கள் ஆயிரம் பிரதி வாங்கியிருக்க வேண்டும்.  அப்பனுக்குப் பிள்ளை தர வேண்டும் இயக்குனரே, பிள்ளை அப்பனிடமிருந்து பிடுங்கக் கூடாது.  நான் உங்கள் அப்பன்.  இந்த சமூகத்தின் அப்பன்.

நீங்கள் என்ன செய்தீர்கள்?  நீங்கள் கூட எனக்கு ஃபோன் செய்யவில்லை.  சினிமா கொடுக்கும் அதிகாரம்.  நீங்கள் பெரிய புடுங்கி.  உங்களுடைய உதவி இயக்குனர் என்னை அழைக்கிறார்.  ரஜினிகாந்துக்கு உங்கள் நூலைக் கொடுக்க வேண்டும் என்றால், உங்கள் ”உதவி”தான் ரஜினியை அழைப்பாரா?  

கவிதையெல்லாம் எழுதுகிறீர்களே, எழுத்தாளன் என்றால் யார் தெரியுமா உங்களுக்கு?  இன்னும் ஆயிரம் காலத்துக்கு நிற்கப் போகும் பெயர் என்னுடையது.  கபிலனைப் போல, பரணனைப் போல, ஔவையைப் போல, கம்பனைப் போல, பாரதியைப் போல, புதுமைப்பித்தனைப் போல.  ரஜினியின் பெயருக்கு இன்னும் அதிக பட்சம் அம்பது ஆண்டுகள் ஆயுள்.  உதாரணம் இருக்கிறது.  எம்.கே.டி. எப்படி இருந்தார்?  எப்படி வாழ்ந்தார்?  தங்கத் தட்டில் சாப்பிட்டவர்.  அவர் சாலையில் காரில் போனால் சமைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் அத்தனை பேரும் சமையலை அப்படியே போட்டு விட்டு அவர் காரின் பின்னாலே ஓடுவார்கள்.  அவர் கச்சேரி செய்தால் மரத்தில் இலை தெரியாது.  மனிதத் தலைகளே தெரியும்.  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்.  இறந்து சரியாக 65 ஆண்டுகளே ஆகின்றன.  இன்று தமிழ்நாட்டில் எம்.கே.டி. என்றால் ஒரு ஆத்மாவுக்குத் தெரியுமா சொல்லுங்கள்?    

சரி, எல்லாவற்றையும் விடுங்கள்.  நீங்கள் கிராமத்து மனிதர்.  கிராமத்து மரியாதை தெரியும்தானே?  உங்கள் மகள் திருமணத்துக்கு உங்கள் மாமாவுக்கோ சித்தப்புவுக்கோ பத்திரிகை கொடுக்க வேண்டும்.  இப்படித்தான் உங்கள் உதவியை விட்டு போன் பேசி விட்டு பத்திரிகையை குரியரில் அனுப்புவீர்களா?  என்னையா அவமானப்படுத்துகிறாய் என்று கேட்டு உங்களை வெட்டிப் போட்டு விடுவார்கள்…  பத்திரிகையையும் வெறும் கையோடு கொடுக்கக் கூடாது என்பது இன்னொரு பஞ்சாயத்து.

ஒன்றுமில்லை இயக்குனர்.  இங்கே எழுத்தாளன் என்றால் வெட்டிப் புண்டை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.  அதனால்தான் இப்படியெல்லாம் எழுத்தாளர்களை அவமதிக்கிறீர்கள்.

எதற்கு நீ எதற்கெடுத்தாலும் சீலே சீலே என்கிறாய் என்பார்கள் என் நண்பர்கள்.  நான் சீலே சென்ற அன்று சாந்த்தியாகோ நகரத்தின் தினசரியை வாங்கிப் பார்க்கிறேன்.  அந்த்தோனியோ ஸ்கார்மேத்தா என்ற எழுத்தாளர் சீலே அதிபரை சந்திக்கும் புகைப்படம் முதல் பக்கத்தில் வந்திருக்கிறது.  அந்த்தோனியோ ஸ்கார்மேத்த்தாவின் I Dreamt the Snow was Burning என்ற நாவலை ஏற்கனவே நான் வாசித்திருந்ததால் அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை என்னால் உணர முடிந்தது.

உங்களுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சீலே செல்லுங்கள்.  அங்கே போய் யாரிடமாவது நான் ஒரு சினிமா இயக்குனர் என்று சொல்லுங்கள்.  மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போய் விடுவார்கள்.  அவர்களிடமே நான் ஒரு கவிஞன் என்று சொல்லுங்கள்.  உங்களோடு சேர்ந்து ஒரு காஃபியோ வைனோ அருந்தாமல் உங்களை விட மாட்டார்கள்.  உணவகங்களில் சென்று கவிஞன் என்று சொல்லிப் பாருங்கள்.  காசு வாங்க மாட்டார்கள்.  அவர்களுக்குத் தெரியாத மொழியில் எழுதினாலும் நீங்கள் கவிஞன் என்றால் அங்கே கடவுளுக்குச் சமானம்.  எந்த உணவகத்திலும் என்னிடம் காசு வாங்கவில்லை.  என் பயண வழிகாட்டி என்னைக் காண்பித்துக் காண்பித்து சொல்லிக்கொண்டே இருந்தார்.  எஸ்க்ரித்தோர் எஸ்க்ரித்தோர் என்று.  எஸ்க்ரித்தோர் என்றால் எழுத்தாளன்.  உணவகங்களில் பணிபுரியும் பணிப்பெண்கள் “வேலை முடிந்து வருகிறோம், வைன் அருந்த வாருங்கள்” என்று என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு வரவும் செய்தார்கள்.

இங்கே தமிழ்நாட்டில் அந்த மரியாதை சினிமாக்காரர்களுக்கு நடக்கிறது.  ஒரு நடிகரோடு புத்தக விழா போயிருந்தேன்.  நுழைவுச் சீட்டு எடுக்கப் போனேன். நடிகர் என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.  எல்லோரும் ஒதுங்கி வழி விட்டார்கள்.  என் வாழ்நாளில் நான் எங்கேயுமே நுழைவுச் சீட்டு வாங்கியதில்லை என்றார் நடிகர்.  சீலேயில் இலக்கியத்துக்கு மரியாதை.  தமிழ்நாட்டில் சினிமாவுக்கு மரியாதை.

யோகி பாபு இங்கே ஒரு ஓட்டலில் போய் இட்லி சாப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  ஓட்டல் முதலாளி அவரிடம் காசு வாங்குவாரா?  “நீங்கள் இங்கே வந்ததே கௌரவம்” என்று சொல்லி அல்லவா புகைப்படம் எடுத்துக் கொள்வார்?  அப்படித்தான் சீலேயில் எழுத்தாளர்களின் இடம். 

ஆனால் வடக்கில் இப்படி இல்லை.  தாகூரும் காந்தியும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா இயக்குனர்?  தாகூர் கால் மேல் கால் போட்டிருப்பார்.  காந்தி அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருப்பார்.  ஏனென்றால், காந்தி தாகூரை குருதேவ் என்று அழைத்தவர்.  அப்படியானால் ரஜினிக்கு முன்னே நான் கால் மேல் கால் போட்டு அமர வேண்டும்.  நினைத்தாலே அடிவயிறு கலங்குகிறது.  இங்கே நிலைமை அப்படியா இருக்கிறது?  நான் அல்லவா ரஜினிக்கு முன்னே (எனக்கு இல்லாத) வாலை ஆட்டிக்கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது?

எழுத்தாளனுக்கு மரியாதை உள்ள சமூகம் என்றால், ரஜினி போன்ற ஒருவரோடு நான் மாதம் ஒருமுறை சோளா ஹெரிடேஜ் ஓட்டலில் டின்னர் சாப்பிட வேண்டும்.  காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸும் ஃபிடல் காஸ்ட்ரோவும் அப்படித்தான் இருந்தார்கள். 

நிகானோர் பார்ரா என்று ஒரு சீலே கவிஞர்.  அவரிடம் சந்திப்புக்குத் தேதி கேட்டு தென்னமெரிக்க அதிபர்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.   

இந்தியாவிலும் நடந்திருக்கிறது.  இரண்டு சம்பவங்கள் சொல்கிறேன்.  சல்மான் ருஷ்டி ஒரு பெண்ணை மணந்தார்.  பிறகு விவாக ரத்து ஆனது.  அந்தப் பெண்ணின் பூர்வீகம் மைலாப்பூர்.  அந்தப் பெண் தன் உறவுகளைப் பார்க்க லண்டனிலிருந்து மைலாப்பூர் வந்த போது சல்மான் ருஷ்டியும் சென்னை வந்து தங்கினார்.  ஹிண்டுவில் செய்தி வந்தது.  கமல்ஹாசன் ருஷ்டியிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டார்.  ஹிண்டுவில் செய்தி வந்தது.  ருஷ்டி நேரம் கொடுத்தார்.  ஆனால் நேரமின்மையால் கமலை அவரால் சந்திக்க முடியவில்லை.  ஒரு நாகரிகம் கருதி ஃபோன் கூட செய்து வருத்தம் தெரிவிக்காமல் கிளம்பிப் போய் விட்டார் ருஷ்டி.  இதுவும் ஹிண்டுவில் வந்தது. 

நான் ருஷ்டியை விட பெரிய ஆள் இயக்குனர்.  என்ன, என் தலைக்கு விலை வைக்கவில்லை ஆதலால் நான் ருஷ்டி அளவுக்குப் பிரபலம் ஆகவில்லை.  ஆனால் என்னை வட இந்தியாவிலும் இலங்கையிலும் தென்னமெரிக்காவிலும் லண்டனிலும் விமர்சகர்கள் இந்தியாவின் ஜாய்ஸ் என்று அழைக்கிறார்கள். 

இன்னொரு சம்பவம்.  தில்லியில் 1983இல் கூட்டுசேரா நாடுகளின் சந்திப்பு நடந்தது.  அதற்கு ஃபிடல் காஸ்ட்ரோ வருவதாக இருந்தார்.  அந்தச் சந்திப்புக்கு முன்பே காஸ்ட்ரோவை ஏதோ ஒரு சந்திப்பில் பார்த்த இந்திரா காந்தி 1983 தில்லி சந்திப்பு பற்றி காஸ்ட்ரோவிடம் பேசுகிறார்.  அப்போது அவரிடம் இந்திரா ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.  “நான் உங்கள் நண்பரான கார்ஸியா மார்க்கேஸின் தீவிர ரசிகை.  இப்போது அவர் எழுதிய நூறாண்டுகளின் தனிமை நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  நீங்கள் 1983 தில்லி சந்திப்புக்கு வரும்போது மார்க்கேஸையும் அழைத்து வர முடியுமா?”

“ஓ, தாராளமாக.  நான் சொன்னால் காபோ தட்ட மாட்டார்.  அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்கிறார் காஸ்ட்ரோ. 

சொன்னது போலவே ஃபிடல் காஸ்ட்ரோவுடன் மார்க்கேஸும் தில்லிக்கு வருகிறார்.  விமானம் தில்லி பாலம் விமான நிலையத்தில் நிற்கிறது.  மார்க்கேஸ் விமானத்தை விட்டு இறங்காமல் அரசாங்க விதிமுறைகளின்படி அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ முதலில் இறங்குவதற்காகக் காத்திருக்கிறார்.  காஸ்ட்ரோ இறங்கி விட்டார்.  காஸ்ட்ரோவிடம் ஓடி வரும் இந்திரா மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும் “ஓ, மார்க்கேஸ் வரவில்லையா?” என்று கேட்டார்.  அப்புறம்தான் சிறிது நேரத்துக்குப் பிறகு மார்க்கேஸ் விமானத்தை விட்டு இறங்குகிறார்.  அதற்குப் பிறகுதான் இந்திராவின் முகத்தில் புன்னகையே வந்தது. 

”நம்முடைய இந்தச் சந்திப்பு அரசியல் வேலைகளில் போய் விட்டது.  இன்னொரு முறை வாருங்கள், இந்தியாவை உங்களுக்கு சுற்றிக் காண்பிக்கிறேன்” என்று மார்க்கேஸிடம் சொல்கிறார் இந்திரா.  மார்க்கேஸும் வருவதாக இருந்தார்.  ஆனால் அடுத்த ஆண்டே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதால் அதற்குப் பிறகு மார்க்கேஸ் இந்தியாவுக்கே வரவில்லை. 

எழுத்தாளன் என்றால் இதுதான் இயக்குனர். 

நேற்று டி.எம். கிருஷ்ணாவின் காணொலி ஒன்றைப் பார்த்தேன்.  ஏதோ பேசுகிறார்.  அதில் சுய அறிமுகமாக “நான் ஒரு இசைக் கலைஞன், எழுத்தாளன்” என்கிறார்.

ம்ம்ம்…  பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுபவர் எழுத்தாளர் என்றால், பாத்ரூமில் பாடுகிறவன் பாடகன்.  ஆக, நானும் இனிமேல் நான் ஒரு எழுத்தாளன் மற்றும் இசைக் கலைஞன் என்று சொல்லிக் கொள்ளலாம்.  இந்த எழுத்தாளர் பைத்தியம் சினிமாக்காரர்களுக்கு மட்டுமில்லாமல் இசைக் கலைஞர்களையும் பிடித்து ஆட்டுகிறது.  எழுத்தாளனிடம் பணம் இல்லை, அதிகாரம் இல்லை, புகழ் இல்லை.  இருப்பதெல்லாம் எழுத்தாளன் என்ற பட்டம் மட்டும்தான்.  அதையும் ஏன் ஐயா சினிமாக்காரர்களும் பாடகர்களும் பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறீர்கள்?

பின்குறிப்பு: சரி இயக்குனர். உங்கள் கவிதைத் தொகுதியை நான் படித்து மதிப்புரையும் எழுதுகிறேன். அதற்கு நீங்கள் ஒரே ஒரு சின்ன காரியம் பண்ண வேண்டும். என் சாப்பாட்டுக்கு எனக்கு வரும் பென்ஷன் பணம் போதும். ஆனால் இருபது பூனைகளுக்கு உணவு அளிக்கிறேன். மாதம் அறுபதாயிரம் ஆகிறது. இதில் இரண்டு மாத செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். என் பிரியத்துக்குரிய நண்பர் என்பதால் இருபதாயிரம் சலுகை. ஒரு லட்சம் கொடுத்தால் போதும். இரண்டு மாதத்துக்கு பூனை உணவு பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்களுக்கும் புண்ணியம் சேரும். உங்களுக்குப் பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இருந்தால். இல்லாவிட்டாலும் சக உயிர்களின் பசிப்பிணி போக்குதல் நற்பணி இல்லையா?