சாருவின் சமீபத்திய கட்டுரையைப் படித்தேன். ஏற்கனவே பலமுறை அவர் செருப்பால் அடித்ததுதான். மீண்டும் அனைத்து செருப்படிகளையும் ஒன்றாக்கி காம்போவாக அளித்து , சாரி அடித்து இருக்கிறார். ஜெயிலில் , திடீரென்று கொத்துக் கொத்தாகக் கூப்பிட்டு அடிப்பார்கள். என்னா ஏது என யாரேனும் விசாரித்தால், ரொம்ப துளிர் விட்டுப்போச்சி, அப்பப்ப அடிச்சி தொவச்சி வச்சாதான் சரிப்பட்டு வரும் என்பார்கள்.
அதுபோல எல்லாம் சாரு செய்வதில்லை. அவ்வப்போது சீரான இடைவெளியில் யாரேனும் வந்து சென்ஸிபிளிட்டி இல்லாமல் சீண்டி தானும் செருப்படி வாங்கிக்கொண்டு , தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சாருவிடம் செருப்படி வாங்கிக்கொடுப்பது வழக்கம். சாருவும் வஞ்சனை இல்லாமல் ஏற்கனவே கொடுத்த பழைய செருப்படிகளை எல்லாம் சேகரித்து புதிதாகச் சிலதை சேர்த்து ஒட்டு மொத்தமாகக் கொடுப்பார். படித்து இன்புறுங்கள். கீழே தொடுப்பில் லிங்க் உள்ளது.
அந்த கட்டுரையில் எனக்கு சிலவற்றை சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது.சாரு ஒரு வரி இப்படி எழுதியிருக்கிறார்….
//அதிலும் நீங்கள் தமிழ் சினிமா என்ற இமயத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அதிலும் நாலைந்து முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமா. தமிழர்களின் உயிர்மூச்சாக விளங்கும் தமிழ் சினிமா. கோடிகளில் பணத்தை அள்ளித் தரும் தமிழ் சினிமா.//
//நீங்கள் செய்வது, பிச்சைக்காரனிடம் போய் அம்பானி “எனக்குக் கொஞ்சம் அங்கீகாரம் கொடு” என்று கேட்பது போல் இருக்கிறது. //
அதாவது சாரு ,வெற்றி பெற்ற சினிமாக்காரர்களுக்கு எல்லாமே இருக்கிறது. பணம், புகழ் , மரியாதை , சமூக அந்தஸ்து , செல்வாக்கு என எல்லாமே இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் இல்லை. அதுதான் இண்டெலக்சுவல் இமேஜ். அறிவுஜீவி பிம்பம். அது ஒன்றுதான் இல்லை. அந்த ஒன்றை மட்டும் ஏன் விடுவானேன் ? எவனாவது ஒரு எழுத்தாளனைப் பிடி , அதையும் ஆட்டையைப் போட்டு எடுத்துக்கொள் என்ற நினைப்புதான். இதை எல்லாம் இவர்கள் இந்த அளவுக்கு யோசித்து எல்லாம் செய்ய மாட்டார்கள். இயல்பாக ஜீனிலேயே கலந்து இருக்கும். அதிலும் இங்கேதான் சினிமாக்காரன் கூப்பிட்டால் எழுத்தாளன்கள் ஈ ஈ என இளித்துக்கொண்டு போய் ,”சாரே நல்லா கத எழுதுவாரு , கவிதல்லாம் எழுதிக் காட்னாரு ,நல்லா இருந்துச்சி , ஏன் சார் புக்கா போடுங்கன்னு சொன்னேன் , அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாரு ” என அவுத்துப்போட்டு நிர்வாணமாக நடனமாடுகிறார்களே ! அவர்களுக்குக் கேட்கவா வேண்டும் ?
இந்த எழுத்தாளன்கள் அரை மணி நேரம் ஒரு சினிமா பிரபலத்தைச் சந்தித்து வந்து விட்டு , முழு நாளுக்கும் அந்த சினிமா பிரபல நாமாவளி பாடுவதையும் பார்த்திருக்கிறோம் தானே ! அந்த சினிமா பிரபலத்துக்கேத் தெரியாத பல விஷயங்களை மிஸ்டிக்காக உருவாக்குவார்கள். நிலைமை இப்படி எல்லாம் இருக்கையில், அவ்வப்போது சமநிலையை உருவாக்க சாருவின் செருப்படி கட்டுரைகள் தேவைப்படுகின்றன.
அடுத்து
//நான் கேட்கிறேன், கமல்ஹாசனைத் தவிர நீங்கள் ஒரு ஆளாவது, ஒரு எழுத்தாளனைப் பற்றியாவது எங்கேயாவது பேசியிருக்கிறீர்களா, சொல்லுங்கள்? //
என்று சாரு எழுதி இருக்கிறார். கமல்ஹாஸன் செய்வதே ஒரு ஜாலாக்குதான். ஒரு பேட்டை ரௌடி , கட்டப்பஞ்சாயத்து பேர்விழி , மணல் கடத்தல் கோஷ்டி அல்லது கள்ளச் சாராயம் காய்ச்சி பெரும் பணக்காரனாக இருப்பவனைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களில் சிலர் , ஒரு கிரிக்கெட் டீம் வைத்திருப்பார்கள் , அல்லது கபடி டீம் வைத்திருப்பார்கள். சிலர் புறா வளர்ப்பார்கள். அவ்வப்போது அந்த கிரிக்கெட் டீமைக் கூப்பிட்டு , “டேய் எனக்கு ரெண்டு பால் போட்றா . என்ன அவுட் ஆக்கறவனுக்கு 1000 ரூவா ” என்பார்கள்.
எவனாவது அவுட் ஆக்குவது போல பால் போடுவானா ?4 ம் 6ம் அடிப்பது போல பால் போடுவான். தொப்பையைப் போட்டுக்கொண்டு அதை தட்டி விட்டு வீரமாகப் பார்ப்பார்கள். கமல் செய்வது அதைப் போலத்தான். மற்ற சினிமாக்காரர்கள் எழுத்தாளார்களிடம் ஒரு இண்டெலக்சுவல் இமேஜ் பெற முடியுமா எனப் பார்த்தால் , கமல் , அவர்களில் சிலரைக் கூட்டி வைத்துக்கொண்டு , டீயும் பீடியும் வாங்கிக் கொடுத்து , நானே இவர்களில் ஒருவன் தான் எனக் காட்டிக்கொள்வார். ஒரு ஸ்டேட்டஸ் கோ வுக்காகவாவது சினிமாக்காரர்கள் மரியாதையுடன் இருந்தது எல்லாம் ஜெயகாந்தன் காலத்தோடு முடிந்து விட்டது. கமல்ஹாஸன் எல்லாம் ஒரு எழுத்தாளரிடமும் உண்மையான மரியாதையோடு, மதிப்போடு இருந்து நான் பார்த்ததில்லை. இல்லையில்லை , நான் மதிப்போடும் மரியாதையோடும் தான் இருக்கிறேன் எனக் கமல் சொல்லக் கூடாது. அது வெளிப்படையாக மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும், உணர வேண்டும். இவர்கள்தான் அழைத்து அமர வைத்து , டீ பிஸ்கட் கொடுத்தாலே மரியாதை என நினைத்துப் புளகாங்கிதம் அடைவதால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஞானக்கூத்தனை மேடையில் வைத்துக்கொண்டு , தன் கவிதையை வாசித்தவர்தான் கமல்ஹாஸன். சென்னை புத்தகக் கண்காட்சி காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த காலத்தில் நடந்தது இது. நான் நேரடியாகப் பார்த்த விஷயம்.
ஷங்கரை , எழுத்தாளர் என பிக் பாஸில் அழைத்தவர்தான் இந்த கமல்.
ஸ்ருதி மேடம் என்னமோ பாடல் எழுதி பாடி இருக்கிறாராம். இனி ஸ்ருதியையும் எழுத்தாளர் என அழைப்பார்.
ரைட்டர் என்றால் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என தமிழ்ச் சமூகம் நினைக்கிறது என கிண்டல் அடித்துத் திட்டிக்கொண்டு இருந்தோம். அந்த மொண்ணைச் சமூகம் எவ்வளவோ தேவலாம், அதுக்கு மேல நான் ஏறி அடிக்கிறேன் பாரு என்பதுதான் கமல் செய்துகொண்டிருப்பது.
கௌரவ டாக்டர் பட்டம் என கூவிக்கூவி விற்கிறார்கள். 50 ஆயிரம் அல்லது 1 லட்சம் கொடுத்தால் கிடைக்கும். சமயங்களில் ஸ்பெஷல் ஆஃபரில் 20 ஆயிரத்துக்கு எல்லாம் கொடுப்பார்கள். அதுபோல எழுத்தாளர் பட்டமும் ஏதேனும் நிறுவனம் 1 லட்ச ரூபாய்க்கு விற்றால் , நன்கு வியாபாரமாகும். கமலே நிறைய வாங்கி தன் சக சினிமாக்காரர்களுக்கு கிஃப்ட் கொடுப்பார்.
-அராத்து
எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. என்னைப் பற்றிய ஆவணப்படத்தை அராத்து இயக்க இருந்தபோது கேமராவைக் கையாள பல ஒளிப்பதிவாளர்களை அணுகினோம். ஒருவர் கூட அதைச் செய்வதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் எங்களுக்குத் தெரிந்த நண்பர்களைக் கொண்டே அதைச் செய்தோம். அடுத்து, எடிட் பண்ணுவதற்கு லெனினை அணுகினோம். ஆர்வத்துடன் சம்மதித்த அவர் 30000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு எங்களைப் பச்சையாக ஏமாற்றி விட்டார். அவர் சிபாரிசு செய்த கேமராமேன் எங்கள் அனைவரையும் பைத்தியமாகவே ஆக்கி விட்டார். அவரைப் போன்ற ஒரு மூடனை என் வாழ்விலேயே சந்தித்ததில்லை. அவர்தான் லெனினின் சீடன். இப்படிப்பட்டவர்கள்தான் புத்தகத்தைக் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று நம்மைக் கேட்கிறார்கள்.
சாரு