மெதூஸாவின் மதுக்கோப்பை

அன்புள்ள சாரு,
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மறுவாசிப்புக்கு “மெதூஸாவின் மதுக்கோப்பை”யை எடுத்தேன். நான் அடுத்த வாரம் ப்ரான்ஸ்  செல்லவிருப்பதாலோ என்னவோ ! ஆனால் தற்செயல் தான். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த மட்டில் இலக்கியம் பேச வேண்டுமானால் நிறைய இருக்கிறது, அதற்கு இடமும் நேரமும் இல்லை. மேலும் முன்னுரையில் நீங்கள் தெளிவாகக் கூறிவிட்டீர்கள் “நான் படித்த ஃப்ரெஞ்ச் இலக்கியம் ஃப்ரெஞ்ச் தத்துவம் பார்த்த ஃப்ரெஞ்ச் சினிமா என்ற எல்லா  அனுபவத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று ஒரு திட்டம் தோன்றியது. அது மிகவும் சிரமமான பணி. ஏனென்றால், தாந்தேயின் சிறுத்தை போன்ற நூல்களில் பிரித்துப் பார்க்க முடியாதபடி பிரஞ்சுத் தத்துவமும் இலக்கியமும் சினிமாவும் ஒன்றாகக் கலந்து கிடக்கிறது. இதில் எதை விடுவது? எதை எடுப்பது ?”

இதில் அப்துல் லத்தீஃப் லாபியைப் பற்றிக் கூற வேண்டுமானால் ஒரு பத்து பக்கமாவது தேவைப்படும். ஆனால் நான் எடுத்துக் கொண்டது “மனப்பிறழ்வும் கலையும்” என்ற உங்களின்  அபாரமான கட்டுரையை மட்டுமே.

1656-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் great confinement என்று ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அந்நகரின் ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்தினர் நகருக்கு வெளியே தனியாக அடைக்கப்பட்டனர். அவர்களெல்லாம் பைத்தியம் பிடித்தவர்கள் என்றும் பொதுமக்களுடன் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அறிவித்தது ஃப்ரான்ஸ் அரசு.
இச்சம்பவத்தை தனது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் மிஷல் ஃபூக்கோ [Paul-Michel Foucault] இவர்களெல்லாம் யார் என்று கவனிக்கிறார். மற்றவர்களைப் போல் உழைப்பில் ஈடுபடாத சோம்பேறிகள், ஏழைகள், நோயாளிகள், பிச்சைக்காரர்கள், கட்டுப்படாத குழந்தைகள், பொறுப்பில்லாத பெற்றோர், நாஸ்திகர்கள் போன்றவர்களே அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள். ஆக பைத்தியம் என்ற ஒரு நிலையை ஒரு சமூகத்தின் கலாச்சாரமும் அறிவுசார் வர்க்கமும் [intellectuals] பொருளாதார அமைப்புகளும்தான் உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வருகிறார் ஃபூக்கோ. எனவே, உளவியலாளர்களின் மூலமோ, மருந்துகளின் மூலமோ, நாம் பைத்தியக்காரர்களின் குரலை கேட்க முடியாது. உளவியல் பகுப்பாய்வின் மூலமாக unreason-ஐப்  புரிந்து கொள்ள முடியாது என்று எச்சரிக்கிறார் அவர் – தனது madness and civilization என்ற நூலில். இந்த unreason  என்றால் என்ன என்பதற்கு நாம் நீட்ஷேவின் கோட்பாடுகளுக்குச் செல்ல வேண்டும்.

இதில் நீங்கள் பல கோட்பாடுகளை பகுப்பாய்வு செய்திருக்கிறீர்கள். அதில் ஒன்று தெளிவுக்கு எதிராக ”creative” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்னை பிரம்மிக்கவும் யோசிக்கவும் செய்தது. மேலும், இந்தப் பட்டியலில் ஒழுங்கு என்பது பாசிசத்துக்கு இட்டுச் செல்லக்கூடியது என்று கூறி இருக்கிறீர்கள். ஹிட்லரின் நாஸி கட்சியும் அப்போதைய ஜெர்மனியும் இதற்கு உதாரணம். ஹிட்லரின் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட  ஜெர்மானிய கட்டிடங்கள் ஒரு மனிதனை பீதியில் ஆழ்த்தக்கூடியதாக உள்ளன. முக்கியமாக பள்ளிகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், மனநோயாளிகள் theatre போன்ற நிறுவனங்களின் அமைப்பிலும், வடிவ ஒழுங்கிலும்  உள்ள ஒற்றுமையை அவர் குறிப்பிடுகிறார். மணி அடித்தல், சீருடை, நிறுவனத் தலைவர், மதில் சுவர்கள், தண்டனை முறை போன்றவை. மேற்கண்ட ஆய்வுக்கான மூலக்கூறுகளை  நாம் அந்தோனின் ஆர்த்தோவின் “The Theatre and its Double” என்ற நூலில் காணலாம்.

Reason  என்பது மனிதனை சுய அழிவுக்கு இட்டுச் செல்லும், மனித குலத்தையே பூண்டோடு அழித்துவிடும் என்கிறார் ஆர்த்தோ.
மேலும் இதில் நீங்கள் வரலாற்றில் மத்திய காலகட்டத்தில் பைத்தியம் பிடித்தவர்களை எல்லாம் பிடித்து ஒரு கப்பலில் போட்டு நடுக்கடலுக்கு கொண்டு சென்று கப்பலை அங்கேயே விட்டுவிட்டு மாலுமிகள் மட்டும் ஒரு படகில் திரும்பி விடுவது வழக்கமாக இருந்தது என்று சொல்லும் நாவலான The Ship of Fools  என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள், நாவலாசிரியர் Cristina Peri Rossi.
இந்தக் கட்டுரைக்காக மட்டும் நீங்கள் குறைந்தது ஆறிலிருந்து ஏழு பிரெஞ்சு எழுத்தாளர்களை  குறிப்பிட்டுள்ளது உங்களுடைய கடுமையான உழைப்பை காட்டுகிறது. இதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வளவு உழைப்புக்கான அங்கீகாரம் இந்தப் புத்தகத்திற்குக் கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மேலும் இக்கட்டுரையில் அரிஸ்ட்டாட்டில், ஷேக்ஸ்பியர் மற்றும் ஆதிசங்கரரின்பஜ கோவிந்தத்தில் இருந்தெல்லாம் கூட பாடல்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
கடைசியாக “பைத்தியம் கலைஞன் இருவருமே சிருஷ்டி கர்த்தாக்கள்தான். கற்பனையான வேறொரு உலகை சிருஷ்டிக்கிறார்கள் அவர்கள். கலைஞன் அதை வெளிப்படுத்துகிறான். பைத்தியம் அதை வெளிப்படுத்துவதை சமூக அமைப்பு தடுத்து விடுகிறது” என்ற மாபெரும் கசப்பான தத்துவத்தை வெளிப்படுத்தி முடித்துள்ளீர்கள்.

இதை நீங்கள் சுமார் 20 வருடத்திற்கு முன்பே எழுதியுள்ளீர்கள் என்பது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் உங்களின் கடுமையான உழைப்பை பறை சாற்றுகிறது.
மேலும்……
regards | Surésh | Coimbatore

டியர் சுரேஷ்,

என்னுடைய கவனிக்கப்படாத நூல்களில் ஒன்று மெதூஸாவின் மதுக்கோப்பை. இதைப் படிக்காத தமிழர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஃப்ரெஞ்சும் தமிழும் தெரிந்த தமிழர்களும் ஃப்ரெஞ்சுக்காரர்களும் சாதிக்கும் கள்ள மௌனம்தான் ஆச்சரியம் அளிக்கிறது. பொதுவாகவே மேற்கத்திய புத்திஜீவிகளும் பதிப்பாளர்களும் பெரும் சேடிஸ்டுகளாகவும் Peeping Tomகளாகவும் இருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் எல்லோரும் பட்டினி கிடந்து சாகிறார்கள் என்றோ, எங்கள் தேசத்தில் நடந்த போரில் ஒரு லட்சம் பேர் செத்தார்கள் என்றோ, எங்கள் ஊர் கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் போடலாம் என்றோ எழுதினால் கவனிக்கிறார்கள். விருது கொடுக்கிறார்கள்.

வாஸ்தவத்தில் மெதூஸாவின் மதுக்கோப்பை என்ற நூலுக்காக மட்டுமே எனக்கு ஃப்ரெஞ்சுக் குடியுரிமை கொடுக்க வேண்டும். ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் விஸிட்டிங் ப்ரொஃபஸர் பதவி அளிக்க வேண்டும். போகட்டும். வீஸா கொடுத்தாலே சலூட் அடிக்கும் நிலைமையில் இருக்கும் தமிழ் எழுத்தாளன் நான்.

ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஹெலன் சிக்ஸூஸை பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபலமான பெயர். ஆனால் அவர் எழுதிய L’Indiade ou l’Inde de leurs rêves [The Indiad or India of Their Dreams] என்ற நாடகத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது. இந்த நாடகத்தில் காந்தி பிரதான பாத்திரம். இதில் சிக்ஸூஸ் காந்தியை ஒரு மகத்தான தாயாக சித்தரித்து பெண்ணியம் பற்றிய பல விவாதத்துக்குரிய கருத்துக்களை முன்வைத்திருப்பார். இது குறித்து நான் மெதூஸாவின் மதுக்கோப்பை நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். சிக்ஸூஸின் நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஃப்ரெஞ்ச் மூலத்தை ஃப்ரெஞ்ச் தெரிந்த நண்பர்கள் மூலம் படித்தே இந்த நூலை எழுதினேன்.

இப்போது அந்த நூல் குறித்த உங்கள் கடிதம் எனக்குப் பெரும் உவகையை அளிக்கிறது.

என் உழைப்பு பற்றி ஒரு வார்த்தை: வரும் பன்னிரண்டாம் தேதி காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் பற்றி பெங்களூரில் உள்ள Indian Institute of Human Settlements என்ற கல்வி நிறுவனத்தில் ஒரு கலந்துரையாடலில் நான் பேச வேண்டும். அதிக பட்சம் பத்துப் பதினைந்து நிமிடங்கள் பேச முடியும். அதற்காக நான் ஒரு மாதமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுவே மற்ற எழுத்தாளர்கள் என்றால் படிக்காமலேயே இரண்டு மணி நேரம் சிறப்பாகப் பேசுவார்கள். அவர்களுக்கு அந்தத் தகுதியும் திறமையும் இருக்கிறது. நான் எப்போதுமே கடைசி பெஞ்ச் மாணவன். மார்க்கேஸைத் திரும்பவும் படிக்காமல் என்னால் பேச இயலாது. அதனால்தான் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் நான் மிகவும் மெதுவாகப் படிக்கும் ஆள். ஒரு புத்தகத்தைப் படிக்கவே ஒரு வாரம் ஆகிறது. என் உழைப்பு என் புத்திக்கூர்மையின்மையிலிருந்து எழுந்தது என்பதை மட்டும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.

சாரு