வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் பிராணிகளைப் பிடிக்கும். வீட்டில் வளர்ப்பதுதான் பிடிக்காது. அதற்காகத் தெருவில் விட வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த தேசத்தில் பிராணிகள் தெருவில் திரிகின்றனவோ அந்த நாடு இந்த உலக வரைபடத்திலேயே இருப்பதற்கு லாயக்கில்லாதது என்று நினைக்கிறேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. துருக்கியின் தெருக்களில் எங்கு பார்த்தாலும் பூனைகள் திரியும். ஆனால் அவை பசித்திருப்பதில்லை. துருக்கி சமூகமே அந்தப் பூனைகளை வளர்க்கிறது. அப்படியிருந்தால் பிரச்சினை இல்லை.
ஆனாலும் நான் அவந்திகாவின் வாழ்வில், அவளுடைய விருப்பு வெறுப்புகளில் குறுக்கிடுவதில்லை. அது என்னை வெகுவாக பாதித்தாலும். அதன் காரணமாக, கடந்த முப்பது ஆண்டுகளாக செல்லப் பிராணிகளோடுதான் வாழ்ந்து ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. முதலில் பப்பு என்ற (நாட்டு) நாய். அடுத்து பப்பு, ஸோரோ என்ற இரண்டு நாய்கள். பப்பு லேப்ரடார். ஸோரோ க்ரேட் டேன். அவைகளுக்குப் பிறகாவது பிராணிகள் இல்லாத வாழ்க்கையை வேண்டினேன். ஆனால் என் ஊழ்வினை வேறு மாதிரி விளையாடியது. அவந்திகா ஒரு பூனையை எடுத்து வந்தாள். அது நாலு குட்டி போட்டது. பிறகு ஐந்து குட்டி போட்டது. இனியும் தாங்காது என்று எல்லாவற்றுக்கும் கர்ப்பத்தடை அறுவை செய்தாகி விட்டது. இப்போது பத்தும் என் வீட்டிலேயே வளர்கின்றன.
இதுவும் போதாது என்று எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பூனைக்கு உணவு போட்டாள் அவந்திகா. அதுவும் இப்போது பல்கிப் பெருகி பத்து பூனைகளாகியிருக்கின்றன. ஆனால் பத்துக்கு மேல் பெருகுவதில்லை. எங்காவது ஓடி விடும். இல்லாவிட்டால் செத்து விடும். எப்போதும் பத்துதான்.
இந்த இரண்டு செட்டுக்குமாக எனக்கு மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் செலவு ஆகிறது. நண்பர்களிடம் பிச்சை எடுத்துத்தான் பூனைக்ளுக்கு உணவிடுகிறேன். வேறு வழியில்லை. என் வாசகர் வட்ட நண்பர்கள் சொல்வது போல எல்லா பூனைகளையும் கொண்டு போய் மெரினா பீச்சில் விட்டுவிட்டு வர முடியாது. என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பூனைகளுக்கு உணவிட வேண்டியது என் கடமை. என் மீது திணிக்கப்பட்டதாக இருந்தாலும் இது என் கடமை. நீங்கள் யாரும் ‘சிரமமாக இருக்கிறது’ என்பதற்காக உங்கள் குழந்தைகளை பீச்சில் விட்டுவிட்டு வர மாட்டீர்கள்தானே? அந்த மாதிரிதான் எனக்குப் பூனைகளும் நாய்களும்.
Zoltan Fabri இயக்கிய The Fifth Seal என்ற படத்தை நான் 1978இல் பார்த்தேன். இன்றும் ஒவ்வொரு காட்சியும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏற்கனவே பலமுறை எழுதியும் இருக்கிறேன். புடாபெஸ்ட் நகரை நாஜிகள் கைப்பற்றி விட்டார்கள். அதன் பிறகு நாஜிகள் புடாபெஸ்ட்டில் உள்ள நாஜிகளுக்கு எதிரான புரட்சியாளர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்கிறார்கள். அதில் ஒரு புரட்சிக்காரனும் அவனுடைய இரண்டு நண்பர்களும் அடக்கம். நண்பர்களுக்கு அரசியலில் தொடர்பு இல்லை. புரட்சியாளனின் நண்பர்கள். அவ்வளவுதான்.
புரட்சிக்காரனை நாஜிகள் அடித்துச் சித்ரவதை செய்கிறார்கள். அவனைக் கொன்று விடலாமா என்று தன் அதிகாரியிடம் கேட்கிறான் ஒரு சிப்பாய். ”வேண்டாம், இந்தப் புரட்சிக்காரனை அவன் நண்பர்கள் இருவரும்தான் கொல்ல வேண்டும். அவர்கள் செய்யும் கொலை அவர்களை அவர்களின் வாழ்நாள் பூராவும் வதைக்க வேண்டும். உயிரை எடுப்பது மிகவும் சுலபம். ஆன்மாவைக் கொல்வதுதான் கடினம். நாம் இந்த இருவரின் ஆன்மாவைக் கொல்வோம்” என்று சொல்கிறான்.
பிறகு அந்த இரண்டு பேரிடமும் ”நீங்கள் எங்கள் அரசுக்கு நண்பர்களாக இருந்தால் இதோ செத்துக்கொண்டிருக்கும் புரட்சிக்காரனின் கன்னத்தில் மூன்று முறை அறைந்து விட்டு உங்கள் வீட்டுக்குச் சென்று விடுங்கள்” என்கிறான் அதிகாரி.
முதல் நண்பனால் தன் நண்பனை அறைய முடியவில்லை. சுட்டுக் கொல்லப்படுகிறான். இரண்டாவது நண்பன் அறைந்து விட்டு வீட்டுக்குச் செல்கிறான். காரணம்?
அவன் நாஜிகளால் கொல்லப்பட்ட யூதர்களின் அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்துக்கொண்டிருக்கிறான். அவன் அந்தப் புரட்சிக்காரனை அறையாமல் சுட்டுக் கொல்லப்பட்டால் அவன் வளர்க்கும் யூதக் குழந்தைகள் பட்டினி கிடந்து சாகும். அதனால்தான் அவன் தன் மனசாட்சி, அறம், தர்மம் எல்லாவற்றையும் துறக்கிறான்.
அப்படியேதான் நானும் இந்தப் பூனைகளுக்கு உணவிடும் கடமைக்காக என் விருப்பம், என் சுதந்திரம், சுய கௌரவம் எல்லாவற்றையும் துறக்கிறேன். அதனால்தான் என் விருப்பத்துக்கு மாறாக என் நண்பர்களிடம், என் வாசகர்களிடம் கையேந்துகிறேன்.
என்னிடம் நிறைய பணம் இருந்தது. அதில் இருபத்தைந்து லட்சம் தெ அவ்ட்ஸைடர் ஆவணப்படத்துக்காக செலவாகி விட்டது. அது வெட்டிச்செலவு அல்ல. எட்டு மணி நேரப் படமாக உருவாகியிருக்கிறது. சீலே பகுதியைச் சேர்க்க வேண்டும். அதனால்தான் தாமதம். மீதி இருந்த பணம் எல்லாம் மொழிபெயர்ப்புக்குப் போய் விட்டது. கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் ரூபாய் மொழிபெயர்ப்புக்கு செலவாகியிருக்கிறது. செப்டம்பரில் என் சிறுகதைத் தொகுப்பு சிங்களத்தில் வெளிவர இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்புக்குமே சில பல லட்சங்கள் ஆகியது. ஆனால் இனிமேல் மொழிபெயர்க்குப் பணம் செலவு ஆகாது. நானே மொழிபெயர்த்து விடலாம் என்று இருக்கிறேன்.
இப்போது வெய்யில் அதிகமாக இருப்பதால் கீழே உள்ள பூனைகளுக்கு அவந்திகா ஒரு ஆளால் உணவு கொடுக்க முடியவில்லை என்பதால் நானும் போகிறேன். அதில் ஒரு தாய்ப்பூனை பெர்ஷியன் பூனை போல் இருக்கும். அது உணவை எடுத்துக் கொள்ளாமல் என்னைப் பார்த்து ஏதோ சொல்ல முயன்றது. தன் முன்னங்கால்களால் என்னை இழுத்தது. வீட்டில் வளர்க்கும் பூனை போல் என்னிடம் கொஞ்சிப் பழகும். அன்றைய தினம் என்ன சொல்லியும் சாப்பிடாமல் என் வேஷ்டியைப் பிடித்து இழுத்தது. எங்கோ ஓடி, பிறகு என்னைத் திரும்பிப் பார்த்தது. கூடவே போனேன். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனது. நானும் பின் தொடர்ந்தேன். கடைசியில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு இருட்டுப் பொந்தில் போய் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தது. இப்போதுதான் அதன் குரல் வந்தது. பொதுவாக மற்ற பூனைகளைப் போல் வீச்சு வீச்சென்று குரலே எடுக்காத பூனை அப்போது அந்தத் தருணம் என்னைப் பார்த்து அழுதது. அருகில் போய்ப் பார்த்தால் இரண்டு சின்னஞ்சிறிய குட்டிகள் செத்துக் கிடந்தன. தொட்டுப் பார்த்தேன். அசைவே இல்லை. எடுத்தால் தலை தொங்கியது. ஆனால் உடலில் சூடு விலகவில்லை. சற்று முன்னர்தான் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவைகளை எடுத்துக்கொண்டு போய் ஒரு இடத்தில் புதைத்தேன். அன்றைய தினம் அந்தத் தாய்ப்பூனை சாப்பிடவே இல்லை. அன்றைய இரவும் சாப்பிடவில்லை.
மறுநாள் போனேன். அப்போதும் சாப்பிடாமல் என்னையே சுற்றிச் சுற்றி வந்தது. உணவை முகர்ந்தது. சாப்பிடவில்லை. குத்துக்காலிட்டு அமர்ந்து அதனிடம் “இன்னும் நிறைய குட்டி போடலாம், கவலைப்படாதே என்பது போல” என்னென்னவோ பேசி, என்னென்னவோ கொஞ்சி, தடவிக் கொடுத்து சாப்பிட வைத்தேன்.
என் வீட்டுப் பூனைகளின் பசி பசியே அல்ல. கேட்ட போதெல்லாம் சாப்பாடு கிடைக்கும். கீழே உள்ள பூனைகள் அப்படி அல்ல. கார் வந்து நின்றால் அவைகளால் சாப்பிட இயலாது. அந்த வேளை பட்டினிதான். அதனால் அவைகள் சாப்பிடும்போது பார்த்தால் பத்து நாள் பட்டினி கிடந்தது போல் சாப்பிடும். அப்போது என் உடலும் உள்ளமும் பிள்ளை பெற்றவளின் முலைகள் போல் ஆகி தாய்மை பொங்கிப் பெருகும். அந்த உணர்வை, அந்தப் பரவசத்தை, அந்த மகிழ்ச்சியை, அந்த நிறைவை வார்த்தைகளால் கடத்துவது அசாத்தியம்.
அந்தப் பூனைகளுக்காகத்தான் உங்களிடம் கையேந்துகிறேன். முடிந்தவர்கள் பணம் அனுப்புங்கள். பூனை உணவாக அனுப்ப நினைப்பவர்கள் அப்படியும் அனுப்பலாம். ஆனால் இந்தப் பூனைகள் சில குறிப்பிட்ட உணவையே சாப்பிட்டுப் பழகி விட்டன. அந்த உணவு விவரம் எழுதுகிறேன்.
Whiskas Tuna Jelly wet food for adult cats.
Whiskas Ocean fish flavour dry food for adult cats. 7 kg pack.
எனக்கு மின்னஞ்சல் செய்தால் என் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் தருகிறேன்.
மின்னஞ்சல்: charu.nivedita.india@gmail.com
ரேஸர்பே மூலமாக பணம் அனுப்பலாம். அல்லது வங்கி மூலம் மாற்றலாம். வங்கி விவரம் கீழே.
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai