பெங்களூர் IIHS சந்திப்பு

இந்த முறை பெங்களூர் சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. சில சொந்த ஏமாற்றங்கள் இருந்தாலும். வியாழக்கிழமை (ஒன்பதாம் தேதி மே மாதம்) காலை பதினோரு மணிக்கு வேளச்சேரியில் உள்ள ஏ2பி போய்ச் சேர்ந்தேன். வேளச்சேரியில் சீனி சேர்ந்து கொள்வார். சீனியின் காரில் சீனி கார் ஓட்ட பெங்களூர் போக வேண்டும் என்பது திட்டம். வழியில் காஞ்சீபுரத்தில் ராஜா சேர்ந்து கொள்வார். ஏ2பியில் காஃபி குடித்துக்கொண்டிருந்த போது ராஜேஷ் வந்தார். அங்கேயே கொஞ்சம் கை முறுக்கு வாங்கிக்கொண்டேன். சீனி எப்போதுமான முன்யோசனையோடு நன்னாரி சர்பத் பாட்டில்கள் நான்கு வாங்கினார். அந்த பாட்டில்கள் பெங்களூரில் சடுதியில் மற்றவர்களால் (அந்த மற்றவர் நான்தான்) தீர்க்கப்பட்டதால், இனிமேல் வேளச்சேரி ஏ2பி போனால் ஒரு பத்துப் பன்னிரண்டு நன்னாரி சர்பத் பாட்டில்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். (சென்னை திரும்பியபின் ஸ்விக்கி மூலம் முயன்றேன். கிடைக்கவில்லை. நன்னாரி சர்பத் கான்சென்ட்ரேஷன் தான் கிடைக்கிறது. அதைத் தண்ணீரில் கலக்கிக் குடிக்க வேண்டும் போல. அது குடிப்பதற்கு லாயக்கில்லை.)

காஞ்சீபுரத்தை நெருங்கியதும் ராஜாவுக்கு ஃபோன் போட்டு எங்கே நிற்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. சரியாக அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்து சீனி அவருக்கு ஃபோன் செய்த போது ராஜா ஃபோனை எடுக்கவில்லை. அப்படித்தான் எங்கள் வாழ்வில் இதுவரை நடந்திருக்கிறது என்பதால் அது பற்றி எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் சீனி ஒரு மனிதாபிமானி. அன்பின் மொத்த வடிவம். யார் குறித்த நேரத்தில் குறித்த இடத்துக்குக் கார் வந்து சேர்ந்த பிறகும் ஃபோனை எடுக்கவில்லையோ அவரை பஸ்ஸில் வரச்சொல்லி விட்டு இவர் காரில் போய் விடுவார். ஆனால் அன்று நானும் இருந்ததால் ஒரு மரியாதை கருதி காரை நிறுத்தினார். நான் ராஜாவை அழைத்தேன். எடுத்தார். அவரை ஏற்றிக் கொண்டு கிளம்பினோம். பிற்பாடு பெங்களூர் போய்ச் சேர்ந்த பிறகு சாவகாசமாக சீனி ராஜாவிடம் ஏன் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஃபோனை எடுக்கவில்லை என்று கேட்டபோது ராஜா ஒரு பதில் சொன்னார். அது கொஞ்சம் ontology சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்ததால் எனக்குப் புரிவதற்குச் சிரமமாக இருந்தது.

IIHS உரையாடலில் ஒரு இடத்தில் நான் மலையாளிகள் அரசியலில் தீவிரம் காட்டுபவர்கள், தமிழர்கள் தத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் என்றேன். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறியிருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஒரு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியபோது ஜெயலலிதா ontological சேவைக்காகத் தருவதாக பல்கலைக்கழகம் அறிவித்தது. IIHS புத்திஜீவிகள் அதை நிச்சயம் ரசித்திருப்பார்கள். அப்போது எனக்கு அது தோன்றவில்லை.

வழியில் ஆற்காட்டில் நின்று பிரியாணி சாப்பிட எண்ணினோம். ஆனால் நாங்கள் அப்படி ஆற்காட்டில் சாப்பிட நிற்கும்போதெல்லாம் மணி இரண்டு ஆகி விடுகிறது. ஆற்காட்டின் சூப்பர் பிரியாணி கடையான ஸ்டார் பிரியாணி கடை ஒரு மணிக்கே மூடி விடுகிறார்கள். சென்ற முறை பெங்களூருக்குக் காரில் சென்ற போதும் ஆற்காடைச் சேர்ந்த போது இரண்டு மணி. ஸ்டார் பிரியாணி மூடி விட்டார்கள். சன் பிரியாணி கடைதான் இரண்டு முறையும் திறந்திருந்தது. அங்கேயும் பாடாவதி சிக்கன் பிரியாணிதான் கிடைத்தது. அங்கேயும் மட்டன் பிரியாணி ஒரு மணிக்கெல்லாம் தீர்ந்து விடுமாம். அடப்பாவிகளா…

வியாழன் இரவு கோரமங்களாவில் இருக்கும் சீனி வீட்டிலேயே தங்கி விட்டோம். அதிகாலை மூன்று வரை சென்றது பேச்சு. வெள்ளிக்கிழமை இரவு Ironhill Pubக்குப் போனோம். கோரமங்களாவிலிருந்து நெடுந்தூரம்தான். ஆனால் பெங்களூர் அயன்ஹில்லுக்கு அதுவரை சென்றதில்லை என்பதால் அங்கே சென்றோம். அயன்ஹில் ஒரு சொர்க்கம். ஹைதராபாத் அயன்ஹில் கூட பெங்களூர் அயன்ஹில் அருகே நெருங்க முடியாது. ஆனால் நீச்சல்குளத்தின் அருகே இடம் கிடைக்கவில்லை. ஸ்ரீ, சதீஷ், ப்ரவீன், ராஜா, சீனி மற்றும் நான். பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தும் உரையாடல் மூன்று நான்கு மணி வரை சென்றது. அந்த உரையாடலை நான் ஒரு சிறுகதையாக எழுத இருக்கிறேன். அயன்ஹில்லில் ஒரு சம்பவம் நடந்தது. அதை இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு நாவலில் சேர்க்க இருக்கிறேன்.

இந்த முறை லலித் மற்றும் தீப்தியை மாலைநேரத்தில் சாவகாசமாகச் சந்திக்க முடியவில்லை. அவர்கள் என்னைப் பார்க்க கோரமங்களா வந்த போது நான் அயன்ஹில்லில் இருந்தேன். லலித் அன்று என்னை ஒரு ஜப்பானியத் திரைப்படத்துக்கு அழைத்திருந்தார். ஆர்ட் ஃபில்ம். நான் பெங்களூர் வந்தாலே Anti Art Man என்றேன். இங்கே சென்னையில் காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை கலையாகவே வாழ்வதால் பெங்களூர், கோவா எல்லாம் எதிர்க் கலைக்கு.

மறுநாள் சனிக்கிழமை கிளம்பி ஐ.ஹெச்.எஸ்.ஸில் எனக்கு அறை போட்டிருந்த ஊருக்குப் போனோம். ஆம், பெங்களூர் மிகவும் பரந்து விரிந்த நகராகி விட்டது. வளர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஐரோப்பிய நகரங்கள் இப்படித்தான் இருக்கின்றன. சென்னை பாருங்கள். மைலாப்பூர், டி.நகர் மட்டும்தான் கோலாகலமாக இருக்கும். தாம்பரத்தில், குரோம்பேட்டையில், வண்ணாரப்பேட்டையில், பெசண்ட் நகரில் என்ன இருக்கிறது? பெங்களூர் அப்படி அல்ல. கோரமங்களாவைப் போலவே அங்கிருந்து பதினோரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாரத்திஹள்ளியும் இருக்கிறது. கோரமங்களா அளவுக்கு இல்லாவிட்டாலும் அயன்ஹில் மாரத்திஹள்ளியில்தான் உள்ளது. அதற்காகவே ஒவ்வொரு முறையும் மாரத்திஹள்ளி போகலாம் போல் இருக்கிறது.

சனிக்கிழமை இரவு ஐ.ஐ.ஹெச்.எஸ். நண்பர்கள் இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர். ஆ, சொல்ல மறந்து விட்டேன். சித்த மருத்துவர் பாஸ்கரன் சனிக்கிழமையே வந்து விட்டார். ஞாயிறு முன்னிரவு வரை என்னுடனேயேதான் இருந்தார். அவரே என்னை சனிக்கிழமை இரவு ஐ.ஐ.ஹெச்.எஸ். நண்பர்களின் இரவு விருந்து நடக்கும் இடத்துக்குக் கொண்டு போய் விட்டுவிட்டுச் செல்வதாகச் சொல்லியிருந்தார். ஏழரை மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். ஆனால் அங்கே எனக்குத் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. ஆனால் பெரும் கூட்டம் இருந்தது. எல்லோருமே ஏழெட்டு பேராக இருந்தார்கள். நான் மட்டும் தனியாக நின்றுகொண்டிருக்க விரும்பவில்லை. நான் தங்கியிருந்த துலிப் ஓட்டலில் சீனி, ராஜா, ராஜேஷ் (கருந்தேள்) மூவரும் இருந்தனர். பாஸ்கரனையே மறுபடியும் ஃபோனில் அழைத்து என்னைத் திரும்பவும் துலிப்புக்கு அழைத்துப் போகச் சொன்னேன்.

அன்றைய தினம் பன்னிரண்டு மணிக்கே உறங்கி விட வேண்டும் என்று மிகத் தீர்மானமாக முடிவு செய்திருந்தேன். ஏனென்றால், மறுநாள் ஞாயிறு மதியம் பன்னிரண்டே காலுக்கு உரையாடல் இருந்தது. ஒரு மாதமாகத் தயாரித்திருந்தேன்.

ஆனால் விவாதமோ நிற்பதாக இல்லை. பன்னிரண்டு ஒன்று ஆனது. ஒன்று இரண்டு ஆனது. இரண்டு மூன்று ஆனது. அப்படியே நான்கு மணி ஆன போது உஷார் ஆனேன். இனியும் தாமதித்தால் ஒருமாதமாக என்னதான் தயாரித்திருந்தாலும் மறுநாள் சரியாகப் பேச முடியாது. எட்டு மணிக்கு எழுப்பச் சொல்லி விட்டு உறங்கி விட்டேன். ராஜா எட்டு மணிக்கு எழுப்பினார். ஒன்பது மணிக்கு எழுந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு உறங்கினேன். ஒன்பதுக்கு நானே எழுந்து விட்டேன்.

உரையாடலைக் கேட்க பல நண்பர்கள் வந்திருந்தார்கள். பெங்களூரிலிருந்து ஆனந்த், சுந்தர் சருக்கை, அவர் நண்பரும் நடனக் கலைஞருமான ஜெயச்சந்திரன் பலாழி, வேலூரிலிருந்து மருத்துவர் பாஸ்கரன், தியோடர் பாஸ்கரன், கோவையிலிருந்து விஜயகுமார், சென்னையிலிருந்து ப்ரவீன் (ப்ரவீன் வெள்ளி, சனி இரவு உரையாடல்களிலும் இருந்தார்), புவனேஸ்வரி (ஐ.ஐ.ஹெ.எஸ். இருக்கும் இடத்திலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார்), ஸ்ரீ, சதீஷ், ராஜா, லலித் மற்றும் பல நண்பர்கள். முதல் நாள் இரவு வந்திருந்த ராஜேஷ் மட்டும் வரவில்லை.

இதுவரையில் நான் கலந்து கொண்ட பல இலக்கியச் சந்திப்புகளில் ஆகச் சிறந்ததாக இந்தச் சந்திப்பு அமைந்தது. பல காரணங்கள். சந்திப்பு காலை பத்து மணிக்கே தொடங்காமல் மதியம் தொடங்கியது முக்கியக் காரணம். இன்னொரு காரணம், சந்திப்பை ஒருங்கிணைப்பவர் எல்லோருக்கும் மத்தியில் அமர்ந்து கொண்டு என்னை ஒரு ஓரமாகத் தள்ளி வைக்காமல் இருந்தது. அப்படிச் செய்தால் என் morale கெட்டுப் போய் விடுகிறது. அதில் கார்த்திக் வெங்கடேஷ் பிரமாதமாகச் செயல்பட்டார். அவர்தான் ஓரமாக அமர்ந்து கொண்டார். அது மட்டுமல்ல. எல்லோருக்கும் சம அளவு நேரம் கொடுத்தார். பொதுவாக ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களே மொத்தமாக மொக்கை போட்டு விட்டு நம்மை ஓரம்கட்டி விடுவார்கள். அது நடக்கவே இல்லை. கார்த்திக் எங்களைப் பேச விட்டு அவர் கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, என்னென்ன பேசலாம் என்று நான் மிக நன்றாகத் திட்டமிட்டு குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். சந்திப்புக்கு முன்னால் அது எல்லாவற்றையும் ஒருமுறை படித்துக்கொண்டேன்.

நான் பேசியதை எல்லோரும் ஆரவாரமாகக் கைதட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.

ஞாயிறு இரவு எல்லோரும் கிளம்பி விட்டார்கள். நானும் சீனியும் மட்டுமே பன்னிரண்டு மணி வரை அமைதியாக அமர்ந்திருந்தோம். சீனி மட்டும் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். பன்னிரண்டு மணிக்குப் படுத்து விட்டோம். எந்தச் சிந்தனையும் திட்டமும் இல்லாமல் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நான் அந்த ஞாயிறு இரவுக்காகத்தான் பெருமளவு காத்திருந்தேன். ஒருத்தருக்கும் நேரம் இல்லை. மறுநாள் மதியம் வந்தேபாரத் பிடித்து சென்னை வந்தேன். கீழே சில புகைப்படங்களையும் விவாதம் நடந்த காணொலியையும் இணைத்திருக்கிறேன்.

இரண்டு விடுபடல்கள் நிகழ்ந்து விட்டன. சென்னையிலிருந்து ஸ்ரீராம் வந்திருந்தார். சென்னையிலிருந்து பெங்களூர் வந்து போக எத்தனை மணி நேரம் ஆகும் என்று அனைவருக்கும் தெரியும். அடுத்து, கிருஷ்ணகிரியிலிருந்து நேசராஜ் செல்வம் வந்திருந்தார். போக வர ஆறு மணி நேரப் பயணம். நேசராஜ் என்னுடன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். தொழிற்சங்கத் தலைவர். கடுமையான படிப்பாளி. என்னுடைய அரசுப் பணி காலத்திலிருந்து இன்னமும் என்னோடு நட்போடு இருக்கும் சிலரில் நேசராஜ் முக்கியமானவர்.

கலந்துரையாடலில் நான் ஒரு பதினைந்து நிமிடம் பேசியிருப்பேன். அந்தப் பேச்சை நேரில் கேட்கும் பொருட்டு இவ்வளவு சிரமம் எடுத்து நேரில் வந்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Ironhill