மொழிபெயர்ப்பு பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். நானும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் முன்மாதிரி நூலாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். இதை யாரும் சொல்லாததால் நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் பெருமைக்காக அல்ல. மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக. தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலை நானும் தாமரைச்செல்வியும் காயத்ரியும் மொழிபெயர்த்தோம். அதுவுமே மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்தான். மொழிபெயர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று தருண் என்னைக் கேட்டபோது “உன் ஆங்கில மூலத்தை விட நன்றாக வந்திருக்கிறது” என்றேன். ஆச்சரியப்பட்டார். பிறகு நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம் சொன்னேன். “நான் எழுதும் தமிழ் ஈடு இணையில்லாதது. யாராலும் பின்பற்ற முடியாதது. நான் எழுதும் தமிழ் மயக்கும் தன்மையுடையது. உதாரணமே சொல்ல முடியாத வசீகரத்தைக் கொண்டது. Its so seducing…” என்றேன்.
பெங்களூர் சந்திப்பில் மொழிபெயர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
“என்ன இருந்தாலும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை நாம் மொழிபெயர்ப்பில்தானே படிக்க வேண்டியிருக்கிறது? ஸ்பானிஷ் மூலத்திலிருந்து நாம் எத்தனை இழந்தோமோ?” என்றார் ஒரு பெண். அப்போது ஏ.ஜே. தாமஸ் “அப்படிச் சொல்ல முடியாது. ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்கள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் அறிஞர்கள். எழுத்தாளர்கள். ஸ்பானிஷ் எழுத்தாளர்கள் அனைவருமே அந்த மொழிபெயர்ப்புகள் மூலத்தை விட நன்றாக இருப்பதாகவே கருதுகிறார்கள்” என்றார். அதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. உதாரணமாக, ஆல்பெர் கம்யூவின் ஸ்ட்ரேஞ்சர் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி கம்யூ நான் எழுதியதை விட ஆங்கில மொழிபெயர்ப்பு பிரமாதம் என்று சொன்னார்.
அப்போது கேள்வி என் பக்கம் திரும்பியது. உங்கள் தமிழ் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எப்படி என்று கேட்கப்பட்டது. ”என் தமிழ் மொழிபெயர்க்கப்படவே முடியாதது” என்றேன். ஒரே ஆகாகாரம். விளக்கினேன். “நான் பாரதி போல் எழுதுபவன். என் மொழியின் வசீகரத்தை யாராலும் ஆங்கிலத்தில் கொண்டு வர இயலாது. ஓரளவுதான் முயற்சி செய்ய முடியும்.” இதைப் போலவே ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். Serge Doubrovsky. அவருடைய ஃப்ரெஞ்ச் மொழிபெயர்க்கப்பட முடியாதது என்பதால் இன்னமும் அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஒருமுறை ஜெயமோகன் சொன்னார், ”உங்கள் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட முடியாதவை” என்று. அதையேதான் நான் பெங்களூர் சந்திப்பில் சொன்னேன்.
இதையும் மீறி நந்தினியும் அவருக்கு முன் வேறு சிலரும் என்னை மொழிபெயர்த்து அது பெரும் வரவேற்பையும் பெற்றிருப்பது அவர்களுடைய மொழித் திறமைக்குக் கிடைத்த வெற்றி. குறிப்பாக நந்தினியின் மொழிபெயர்ப்பு பலராலும் சிலாகிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியம் ஆங்கிலத்துக்குச் செல்லவில்லை. சென்றதெல்லாம் படுதோல்வி. காரணம், ஆங்கிலம் சரியில்லை. அதற்குக் காரணம், மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலப் பேராசிரியர்கள். இதற்கு விதிவிலக்காக இருந்தது கல்யாண்ராமன் ஒருவரே. அவரது அசோகமித்திரன் மொழிபெயர்ப்புகள். கல்யாண்ராமன் பற்றிப் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், 1980களில் வெளிவந்த ப்ரக்ஞை பத்திரிகையில் சிவசங்கரா என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியவர் கல்யாண்ராமன். அப்போது சிவசங்கராவின் கதைகள் பெரிதும் கொண்டாடப்பட்டன.
இப்போது பிரியம்வதா, சுசித்ரா, நந்தினி, ஜனனி என்று பல பெண்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஆங்கிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றனர்.
ஆனால் ஆங்கிலத்திலிருந்தும் ஃப்ரெஞ்சிலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் பெரும்பாலான படைப்புகள் மிக மிக மிக மோசமாக இருக்கின்றன. இதிலும் வே. ஸ்ரீராம் ஒருவர்தான் விதிவிலக்கு. ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு அற்புதமாக மொழிபெயர்க்கிறார் ஸ்ரீராம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்கள் வாசிக்கவே முடியாதவையாக இருக்கின்றன. காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கிலம் ஆங்கிலமே அல்ல என்பதுதான். ஆனாலும் பல அன்பர்கள் இலக்கியத்தின் மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் இந்தப் படு கேவலமான மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலும் சில விதிவிலக்குகள்: ஜி. குப்புசாமி, சி. மோகன். இவர்களின் மொழிபெயர்ப்புகள் வெகுவாக சிலாகிக்கத் தக்கவை. தமிழ்ச் சமூகம் இவர்களின் மொழிபெயர்ப்புக்கு மிகச் சிறந்த அங்கீகாரத்தை அளித்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்தச் சூழலில்தான் காயத்ரியின் மொழிபெயர்ப்புகள் கவனம் பெறுகின்றன. காயத்ரி ஃப்ரெஞ்சிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கிறாள். அடியேன்தான் அவளுக்கு எழுத்தறிவித்தவன். இதுவரை நான் அறிந்ததில் காயத்ரியே என் மிகச் சிறந்த மாணவி. எப்படி?
பின்நவீனத்துவத்தில் Author is Dead என்கிறார்கள். அப்படியென்றால், ஆசானின் அதிகாரத்தைக் குழிதோண்டிப் புதைப்பது. To Bury Our Fathers என்று ஒரு நாவலே வந்திருக்கிறது. தாய் சொல்லைத் தட்டாதே என்பது பழைய மொழி. தந்தை சொல் மீறு. ஆசான் சொல்லைத் தட்டு. இதுவே பின்நவீனத்துவம். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் காயத்ரியிடம் சொன்னேன். “என் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்.” அவளோ ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டாள். பின்நவீனத்துவம் அப்படித்தான் சொல்கிறது. நாம் ஒரு ஆசானாக – அதிலும் பின்நவீனத்துவத்தை அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி அதைக் குற்றம் சொல்ல முடியாது.
அடுத்து, மொழிபெயர்ப்பில் ஒரு அரசியல் இருக்கிறது. நான் யார் யாரையோ கண்டபடி மொழிபெயர்த்துவிடவில்லை. யாரெல்லாம் அவருடைய சமூகத்தில் தூற்றப்பட்டார்களோ, யாரெல்லாம் அவருடைய சமூகத்திலிருந்து விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டார்களோ, யாரெல்லாம் அவருடைய அரசினால் நாடுகடத்தப்பட்டார்களோ, யாரெல்லாம் அவருடைய தேசத்தில் கொல்லப்பட்டார்களோ, சிறைவைக்கப்பட்டார்களோ, தடை செய்யப்பட்டார்களோ அவர்களைத்தான் நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அந்த வகையில் ஃப்ரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டியவர்கள் ஃப்ரான்ஸில் வாழும் Francophile எழுத்தாளர்கள். உதாரணம்: தாஹர் பென் ஜெலோன், அப்துல் லத்தீஃப் லாபி. ஃப்ரான்ஸிலிருந்து மொழிபெயர்க்க வேண்டுமானால், ஜான் ஜெனேயை மொழிபெயர்க்கக் கூடாது. என்னதான் அவர் ஒரு விபச்சாரியின் மகனாக இருந்து, ஓரினச் சேர்க்கையாளராகவும், திருடனாகவும் வாழ்ந்து, சிறைத் தண்டனையெல்லாம் பெற்றவராக இருந்தாலும் ஃப்ரெஞ்ச் சமூகத்தில் மிகப் பெரிய அளவுக்குக் கொண்டாடப்பட்டவர். ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு வர வேண்டுமானால், அதற்குத் தகுதி என்ன? ஃப்ரெஞ்ச் சமூகத்தால் வெறுக்கப்பட்டிருக்க வேண்டும். செத்த பிறகு கொண்டாடப்பட்டால் அது கொண்டாட்டம் அல்ல. உயிரோடு இருக்கும்போதே சமூகத்தின் சித்ரவதையை அனுபவித்திருக்க வேண்டும். அவ்வகையில் முதல் தகுதி, அந்த்தோனின் ஆர்த்தோ. அடுத்தவர், லூயி ஃபெர்தினாந் செலின். முழுக்க முழுக்க வெறுக்கப்பட்டவர். மூன்றாமவர், பியர் க்யூத்தா (
Pierre Guyotat). இன்று ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் பிதாமகராகக் கருதப்பட்டாலும் பியர் க்யூத்தாவின் நாவல்கள் அவர் காலத்தில் ஃப்ரான்ஸில் தடை செய்யப்பட்டவை.
இந்த நிலையில் கனடாவில் வசிக்கும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவே கூடாதவர்கள் என்பது என் அரசியல். காரணம், கனடா ஒரு வளர்ச்சியடைந்த நாடு. ஃப்ரான்ஸும் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் என்னுடைய அரசியலை மேலே போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறேன். ஃப்ரெஞ்ச் சமூகத்திலேயே அந்நியனாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆர்த்தோவை ஃப்ரான்ஸ் பைத்தியக்கார விடுதியில் அடைத்துச் சித்ரவதை செய்தது. ஃபெர்தினாந் செலினை யூத வெறுப்பாளன் என்று சமூக விலக்கம் செய்தது, வெறுத்து ஒதுக்கியது. பியர் க்யூத்தாவைத் தடை செய்தது. அப்படிப்பட்டவர்களையே நாம் மொழிபெயர்க்க வேண்டும். இது என் அரசியல். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு பின்நவீனத்துவவாதி. ஆசான் ஜெயமோகன் அல்ல. காயத்ரி என் மிகச் சிறந்த மாணவி. எனவே அவள் கனடாவைச் சேர்ந்த ஆன் எபரை மொழிபெயர்த்தாள். அதுவும் மூன்று கதை. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு. கதைகளும் அற்புதமானவை. மொழிபெயர்ப்பின் அரசியலை மட்டுமே நான் விளக்கினேன். மற்றபடி ஆன் எபரின் இலக்கியத் தகுதியில் சந்தேகமே இல்லை. ஆன் எபரின் இந்த மூன்று கதைகளும் மானுட வாழ்வின் அதி தீவிரமான அசாத்தியத் தருணங்களை மொழியில் சாத்தியப்படுத்தியவை. படித்துப் பாருங்கள்.
ஆன் எபரின் மூன்று கதைகளையும் மொழிபெயர்ப்பு என்றே தெரியாதபடி ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறாள் காயத்ரி. அவளுக்கு என் வாழ்த்துகளும் ஆசீர்வாதமும். நான் மேலே குறிப்பிட்டவர்களையும் அவள் வரும் காலத்தில் ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
https://www.gayathrir.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/மொழியாக்கங்கள் – Gayathri R