ஜூன் 30 அன்று நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்குக்காக நாம் உரையாட இருக்கும் படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். என்ன படங்கள் என்று இப்போதே சொன்னால் ஆர்வம் குன்றி விடும். ஆறு மணி நேரம் பேசுவேன். அந்தப் பேச்சை குறிப்புகள் எடுத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தால் ஒரு ஆண்டுக் காலத்துக்கு நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அநேகமாக இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இயக்குனர்களாக இருப்பார்கள். (சே, இந்த வாக்கியத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். வந்து விழுந்து விட்டது. கோவித்துக் கொள்ளாதீர்கள்.) ஒரே ஒரு பெயரை நாளை மறுநாள் என்னுடைய காணொலியில் சொல்கிறேன்.
மாணவர்களுக்கான கட்டணத்தை ஒரு நண்பர் அனுப்பி வைத்து விட்டார். அந்த நண்பருக்கு மிகவும் நன்றி.
என்னுடைய அண்ணா நூலகப் பேச்சிலிருந்து ஒரு நிமிடத்தை எடுத்து, அழகுற எடிட் செய்து, பின்னணி இசை கொடுத்து @in_of_cinema_ என்ற குழுவினர் ரீல்ஸில் வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை மூன்றே நாளில் சுமார் நான்கு லட்சம் பேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். ரீல்ஸ் ஒரு நம்ப முடியாத இடமாகத்தான் இருக்கிறது.
இந்த நிலையில் உங்களிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இந்தப் பயிற்சிப் பட்டறை பற்றிய செய்தியை பலருக்கும் கொண்டு சேருங்கள். என் பேச்சை ஒரு நிமிடம் கேட்ட ரீல்ஸ் நாலு லட்சம் பேரில் ஒருவருக்குக் கூட திருவண்ணாமலை பயிற்சிப் பட்டறை பற்றித் தெரியாது. தெரிந்தால் நாலு லட்சத்தில் ஒரு நாற்பது பேராவது வரக் கூடும். ஆக, இந்த செய்தியைக் கொண்டு சேர்ப்பதுதான் கடினமான காரியமாக இருக்கிறது.
இதுவரை வாசகர் வட்டத்தைச் சேர்ந்த முப்பது பேரும், எனக்குத் தெரியாது பத்து வாசகர்களும் பெயர் கொடுத்திருக்கிறார்கள். சுமார் 150 பேர் வந்தால் நல்லது. அரங்கின் கொள்ளளவு 300. படங்களிலிருந்து சில காட்சிகளைப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் போகாது.
ஒரு நண்பர் 10000 ரூ. அனுப்பியிருக்கிறார். ஆனால் பயிற்சிப் பட்டறைக்கா, இணையதளத்துக்கு சந்தாவா என்று தெரியவில்லை. வேறு எந்த விவரமும் இல்லை. பயிற்சிப் பட்டறைக்கு என்றால் பெயர் மற்றும் தொலைபேசி எண் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் இன்னொரு நண்பரும் 2000 ரூ. அனுப்பியிருக்கிறார். பெயர் மட்டும்தான் இருக்கிறது. என்ன விவரம் என்று இல்லை. எத்தனை பேர் வருகிறார்கள் என்பது சரியாகத் தெரிந்தால்தான் அதற்கேற்றபடி உணவு தயார் செய்ய முடியும். பணம் அனுப்பும்போது நீங்கள் சைவமா, அசைவமா என்பதையும் தெரிவித்து விட்டால் நலம். வீகன் மற்றும் பூண்டு வெங்காயம் கூடாது என்று சொல்லும் ”பயங்கரவாதிகள்” நீங்களே உணவுப் பொட்டலத்தை எடுத்து வந்து விட்டால் பெரிய சமூக சேவையாக இருக்கும்.
நாளை மறுநாள் ஒரு சிறிய காணொலியுடன் சந்திக்கிறேன்.