எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சாதனாவைச் சொன்னபோது, வளன் அரசுவைச் சொன்னபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. காயத்ரியைச் சொன்னபோது ஒரே அக்கப்போராகி விட்டது. அந்த அக்கப்போரில் எனக்கே கொஞ்சம் பயமாகிப் போனது, சிறுகதையில் தேறி விட்டாள், நாவலில் போகப் போக சொதப்பி விடுவாளோ என்று. இதுவரை பத்துப் பன்னிரண்டு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். போகப் போக என் பயம் நீங்கி விட்டது. பெயரைக் காப்பாற்றி விட்டாள். இப்போது இந்த இரண்டாம் அத்தியாயம். இதைப் படித்த போது எனக்கு சுந்தர் சருக்கையின் பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து நாவல் ஞாபகம் வந்தது. என்னை வெகுவாக பாதித்த நாவல். அதிலும் சிறுமிகள்தான். ஹெக்ஸகோனிலும் ஒரு சிறுமி. சிறுவர்கள் பற்றி எழுதியிருப்பதை நான் அதிகம் வாசித்ததில்லை. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர்கள் இருக்கிறார்களா? ராஜா வந்திருக்கிறார் மாதிரி ஒன்றிரண்டைச் சொல்லாதீர்கள். நீங்கள் சொன்னால் தேடி வாசிக்கிறேன்.
என்னைப் பொருத்தவரை சிறார் பற்றித் தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. அதிலும் சிறுமிகள் பற்றி? அதிலும் குறிப்பாக பிராமணச் சிறுமிகள் பற்றி நான் படித்ததே இல்லை. விளாசித் தள்ளியிருக்கிறாள் காயத்ரி. அதகளம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எழுத்தாளர்கள் எல்லோருமே தாம் சுயமாக அனுபவித்ததை கனஜோராக எழுதி விடுவார்கள். அடுத்தவருக்கு நடந்ததை எழுதுவதில் சொதப்பல் விழும். காயத்ரி அதில் வென்றிருக்கிறாள். இனிமேல் ஹெக்ஸகோன் பற்றி எழுத மாட்டேன். அநாவசியமாக ஊர் வாயில் விழ விரும்பவில்லை. நீங்களே காயத்ரியின் ப்ளாகில் போய் புதன்கிழமை புதன்கிழமை படித்துக் கொள்ளுங்கள்.