ஜூன் முப்பதாம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியற் கல்லூரியில் நான் நடத்த இருக்கும் உலக சினிமா குறித்த பயிலரங்கு பற்றிய அராத்துவின் ஃபேஸ்புக் குறிப்பில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
”இந்தப் பட்டறை மூலம் நம் ஆட்கள் உலக சினிமா எடுப்பார்கள் என தான் நம்புவதாக சாரு நிவேதிதா சொல்லியிருக்கிறார்.”
இப்போது நான் இந்தக் கருத்தை இன்னும் வலியுறுத்திச் சொல்லுகிறேன். என்னுடைய பயிலரங்கில் கலந்து கொண்டு நான் சொல்வதை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் உங்களால் உலகமே கொண்டாடக் கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும்.
இதற்கு ஆதாரமாக, சாட்சியாக ஒன்றை நான் சொல்ல முடியும். Mubi தளத்தில் ஜக்கி என்று ஒரு பஞ்சாபி படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம். ”வெளியான” என்றால் பொதுமக்களுக்கு அல்ல. பொதுமக்களுக்கான படம் என்றால் தணிக்கைச் சான்றிதழ் வாங்க வேண்டும். இந்தப் படத்துக்கு இந்தியாவில் எந்தக் காலத்திலும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்தப் படம் உலகில் உள்ள முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று கொண்டிருக்கிறது. அதனால் Mubi இந்தப் பட்த்தை விலைக்கு வாங்கி தன் தளத்தில் வெளியிட்டது. இதற்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை.
என் பயிலரங்கில் கலந்து கொண்டால் உங்களால் ஒரு உலகத் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புவதற்கு – இல்லை, கருதுவதற்குக் காரணம் என்ன?
ஜக்கி என்ற இந்தப் பஞ்சாபித் திரைபடமே காரணம். இப்படி ஒரு படத்தை உருவாக்க உங்களிடம் ஒரு முப்பது லட்சம் ரூபாய் இருந்தால் போதும். அதுதான் ஜக்கியின் பட்ஜெட் என்கிறார் அதன் இளம் இயக்குனர் அன்மோல் சித்து. திருமண நிகழ்ச்சிகளை விடியோ எடுக்கும் ஒரு நண்பர்தான் படத்தின் ஒளிப்பதிவாளர். பல இடங்களில் பாத்திரங்கள் பேசுவது ஏதோ தகரக் கொட்டகையில் பேசுவது போல் எதிரொலி கேட்பதாக இருக்கிறது. இப்படி ஜக்கியில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன.
என் இருபத்தைந்தாவது வயதிலிருந்து நான் சர்வதேசத் திரைப்படங்களைப் பார்த்து வருகிறேன். இந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் எனக்குப் பிடித்த ஒரே படம் எது என்று கேட்டால் ஜக்கி என்றே சொல்வேன்.
காரணம்? இந்தப் படத்தைப் போல் என்னை பாதித்த வேறு ஒரு படம் இல்லை. என் ஆத்மாவை உலுக்கி விட்ட படம் இது.
இந்தப் படத்தைப் பார்த்த பலரும் நான் சொல்வது போலவே சொல்கிறார்கள். இந்தப் படத்துக்குப் பலரும் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். எல்லா மதிப்புரையுமே ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன.
”ஜக்கி என்னை பாதித்த அளவுக்கு வேறு எந்தப் படமும் பாதிக்கவில்லை.”
அப்படி என்ன காண்பித்து விட்டார் அன்மோல் சித்து? எல்லாம் நம் வாழ்வில் நடந்ததுதான். இல்லாவிட்டால் நம் நண்பர்களின் வாழ்வில் நடந்திருக்கும். அதைத் திரைமொழியில் சொல்ல நமக்குத் தெரியவில்லை. நாம் அறிந்திருக்கவில்லை. அவ்வளவுதான்.
ஜக்கி பார்த்த பிறகு என்னையே நான் மிகவும் நொந்து கொண்டேன். திட்டிக் கொண்டேன். ”ஏன் நீ இப்படி ஒரு படத்தை எடுக்கவில்லை?” என்னால் எடுத்திருக்க முடியும். எடுக்கவில்லை.
ஆனால் ஒரு நாவலாக எழுதியிருக்க முடியும். எழுதப் போகிறேன் என்று சீனியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு உந்துதலாக எனக்கு இருந்தது மிஷல் ஃபூக்கோ எழுதிய முதல் புத்தகம். I, Pierre Riviére, having slaughtered my mother, my sister, and my brother: A Case of Parricide in the 19th Century.
என்னுடைய அறுபதாவது வயதிலிருந்து இன்று வரை ஜக்கி படத்தின் நாயகன் ஜக்கியின் வாழ்வைத்தான் நான் வேறோர் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பட்த்தில் வருவது பாலியல் கொடுமை. என் வாழ்வில் நடப்பது ஃபூக்கோவின் முதல் நூலில் வருவதைப் போன்றது. அதில் ஒரு சிறிய துணுக்கைத்தான் என் அன்பு நாவலில் எழுதினேன்.
என் கதையை விடுங்கள். அன்மோல் சித்துவால் முடிந்த காரியம் உங்களால் முடியும். அதற்கு நீங்கள் பயில வேண்டியது திரைப்படத் தொழில்நுட்பம் அல்ல. திரைப்படத்தின் மொழி என்பது என்ன? திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? இந்த மூன்றும் தெரிந்தால் போதும்.
***
ஜூன் முப்பதுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ளது. நன்கொடைப் பணம் அனுப்புபவர்கள் தயவுசெய்து ஜூன் முப்பதுக்கு முன்னதாகவே அனுப்பி விட்டால் நல்லது என நினைக்கிறேன். ஏனென்றால், பயிலரங்கு பத்து மணிக்குத் தொடங்குவதற்கு முன்பாக பண விஷயத்தில் ஈடுபடுவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. ஒன்பதரை மணிக்குக் கூடினால் பத்து மணிக்கு பயிலரங்கைத் தொடங்கி விட வேண்டும். அப்போது போய் பணத்தை வாங்கி, கொடுத்து செய்து கொண்டிருந்தால் பயிலரங்குக்கான மனநிலை கெட்டு விடும். எனவே முடிந்த வரை ஜூன் இருபதாம் தேதிக்குள் நன்கொடைக் கட்டணத்தை எனக்கு அனுப்பி விடுங்கள். குறைந்த பட்ச நன்கொடை 2000 ரூ.
இந்தப் பயிலரங்கில் நான் பேசுவது எதுவும் பிறகு யூட்யூபில் வராது என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ளவும்.
இந்திய நேரம் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் பயிலரங்கை வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் ஸூம் மூலம் காண்பதற்கும், கலந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். அமெரிக்காவில் அது சனிக்கிழமை இரவாக இருக்கும். கண் விழிக்க முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். நன்கொடை குறைந்த பட்சம் 90 யு.எஸ். டாலர். ஐரோப்பாவில் வசிக்கும் நண்பர்கள் இதை யூரோவாக்க் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவில் 2000 ரூ. நன்கொடை, வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 90 டாலரா என்ற கேள்வி வரும். நான் இந்தப் பயிலரங்குக்காக 35 தினங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டும். படங்களைப் பார்த்து, குறிப்புகள் எடுக்க ஆரம்பித்து விட்டேன். நியாயமாகப் பார்த்தால் ஒருவருக்கு 8000 ரூ. கட்டணம் வசூலிக்க வேண்டும். அதெல்லாம் இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டில் சாத்தியமே இல்லை. இங்கேயும் பெரும் பணக்காரர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருமே இலக்கியத்தின் பக்கம் திரும்புவதே இல்லை. என் வாசகர்கள் அனைவருமே ஒன்று, நடுத்தர வர்க்கம், அல்லது, அதை விடக் கீழ்த் தட்டில் வாழ்பவர்கள். அல்லது, மாணவர்கள். பல மாணவர்கள் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. என்னோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் மூன்று பேருக்கு மட்டும் வேறு சில வாசகர்கள் பணம் கொடுத்துப் பதிவு செய்தார்கள். ஆகவே, 90 டாலர் கொடுத்து இந்தப் பயிலரங்கில் நீங்கள் கலந்து கொண்டால், உங்கள் கட்டணம் 40 டாலர் என்றும் மீதி 50 டாலர் இங்கே 2000 ரூ. கொடுத்து சேர்பவர்களுக்கான மீதித் தொகையைத் தருகிறீர்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், யு.எஸ்.எஸ்ஸில் இப்படிப் பல திரைப்படப் பயிலரங்குகள் நடக்கின்றன. கட்டணம், 300 டாலரிலிருந்து 500 டாலர் வரை.
அதில் கொடுக்கப்படும் அறிவை விட என் பயிலரங்கில் நான் தரும் அறிவும் ஞானமும் பல மடங்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பதை என்னுடைய சினிமா கட்டுரைகளைப் படித்திருப்பவர்கள் உணர முடியும். உதாரணமாக, பொலிவிய இயக்குனர் Jorge Sanjines, ப்ரஸீலிய இயக்குனர் Glauber Rocha போன்றவர்களைப் பற்றி சர்வதேச அளவிலேயே அதிகம் விவாதங்கள் இல்லை.
இவர்களைப் பற்றியெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இவர்கள் மூலம்தான் நாம் எந்த விநியோகஸ்தரையும் சாராமல், தணிக்கைக் குழு பற்றிக் கவலைப்படாமல் சுதந்திரமான படங்களை (independent films) உருவாக்க முடியும். ஜக்கி அப்படி உருவான independent திரைப்படம்தான்.
என்னைச் சுற்றி இருப்பவர்கள் பெரும் மகாத்மாக்கள் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அப்படி ஒரு மகாத்மாவிடம் வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு எவ்வளவு கட்டணம் வைக்கலாம் என்று கேட்ட போது இரண்டாயிரம் ரூபாயை டாலரால் வகுத்து 23 டாலர் வைக்கலாம் என்றார். எனக்குத் தெரியும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் – குறிப்பாக யு.எஸ். – பத்து பேர்தான் பணம் அனுப்பி இந்தப் பயிலரங்கில் சேருவார்கள். அதுவே அதிக பட்சம். அவர்கள் அனைவரும் என் நெருங்கிய நண்பர்கள். அதனால்தான் 90 டாலர் வைத்தேன். மேலும், நான் இது தொடர்பாக நிறைய செலவு செய்ய வேண்டும். ஒரு மாத உழைப்பு வேறு. எல்லாவற்றையும் யோசித்தே 90 டாலர். வெளிநாடுகளிலிருந்து ஒரு நூறு பேர் சேர்வார்கள் என்றால் 30 டாலர் வைக்கலாம். அது ஒருபோதும் நடந்ததில்லை. பார்க்கலாம்.
நீங்கள் கொடுக்கும் பணம் வீணாகாது. அதற்கு நான் உத்தரவாதம்.
***
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai