எனக்கு ஒரு பத்து வயது ஆகும் போதே நான் ஒரு வித்தியாசமான மனிதன் என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. அது பற்றியெல்லாம் விரிவாக என் நாவல்களில் எழுதி விட்டேன். மீண்டும் இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை. என் பள்ளித் தோழனான யோகநாதன் இப்போதும் என் தொடர்பில் இருக்கிறான். அவனைக் கேட்டால் சொல்லுவானாக இருக்கும். ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை என்னை மிக நன்றாக அறிந்தவன். இங்கேதான் வளசரவாக்கத்தில் சீனி வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறான். அவனும் நானும்தான் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பிரதி கூட நடத்தினோம். அந்தப் பத்திரிகையின் காரணமாக ஒரு வருடம் நான் தலைமறைவாக இருந்தேன். அப்போது எனக்குப் பதினெட்டு வயது இருக்கும்.
வித்தியாசமான மனிதன் என்றால், என் மனதுக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வது. ஒருவர் கெட்டவர், அவரோடு பேசக் கூடாது என்று தோன்றினால் அவர் மூலம் எனக்கு என்ன ஆதாயம் கிடைப்பதாக இருந்தாலும் பேச மாட்டேன். குடும்பத்திலும் நான் யார் கூடவும் ஒத்துப் போனது இல்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் “ஏன்ணே இவ்ளோ பெரிய ஆளா இருந்துக்கிட்டு வீடே கட்டிக்கல?” என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் கேட்டது என்ற காரணத்தினால் என் சிறிய தங்கையை நான் கடந்து இருபத்தைந்து ஆண்டுகளாக சந்திக்கவில்லை. இங்கே சென்னையில்தான் வசிக்கிறது.
இந்தக் காரணத்தினால்தான் என் நண்பர்கள், என் தோழிகள் யார் வீட்டுக்கும் நான் செல்வதில்லை. எனக்கு சம்பந்தமே இல்லாத என் நண்பனின் மனைவியிடம் நான் இளித்துப் பேச வேண்டும். எனக்குப் பிடிக்கவே பிடிக்காத அவன் குழந்தையிடம் இளிக்க வேண்டும். என்ன படிக்கிறாய் என்று உளற வேண்டும். நண்பனின் மாமனார், மாமியார் என்ற மூடர்களிடம் அசடு வழிய வேண்டும். அதிலும் தோழியாக இருந்து விட்டால் தொலைந்தோம். தோழியின் அம்மாவைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் மாமியார் என்ற கொடூரமான உராங் உட்டானை சமாளிப்பது மிகப் பெரிய சவால். அதுகள் கொடுக்கும் ஆறிப் போன காஃபி, யானை லத்தியால் செய்த ஆப்பம் போன்ற வஸ்துக்களைச் சாப்பிடுவதை விட தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம். ஆனாலும் நட்புக்காக இந்தக் கொடுமையையெல்லாம் சகித்துக் கொள்வது மனித இயல்பு இல்லையா?
சென்ற டிசம்பர் பதினெட்டிலிருந்து நான் மேற்கண்ட சகிப்புத்தன்மையையெல்லாம் விட்டு விடலாம் என்று முடிவு செய்து சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு நண்பரைப் பிடிக்கவில்லை. பதினைந்து ஆண்டுக் காலமாகப் பழகிக்கொண்டிருந்த அவர் முகத்தில் இனி என் ஆயுள் பரியந்தம் முழிக்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.
மனித குலத்துக்கே விரோதமான செயலை அவர் மாதம் ஒருமுறையாவது செய்து கொண்டிருக்கிறார். செய்து விட்டு, கோபத்தில் செய்து விட்டேன் என்கிறார். எத்தனை முறை மன்னிப்பது? இனி இந்த ஆள் முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
இனிமேலும் நான் சில விஷயங்களில் பொறுமையாக இருப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். காரணம் என் மூர்க்கத்தனம் இல்லை. எனக்குப் பிடிக்காத விஷயங்களிலிருந்தும், என்னைக் காயப்படுத்தும் விஷயங்களிலிருந்தும் என்னை விலக்கிக் கொள்வது; அவற்றில் என் நேரத்தை வீணடிப்பதில்லை. என்னிடம் குற்றம் கண்டு பிடிப்பது, அதிகப்படியான விமர்சனம் ஆகியவற்றை இனியும் பொறுத்துக் கொள்வதாக இல்லை. என்னைப் பிடிக்காதவர்கள் மீது பிரியமாக இருப்பது, என்னை நேசிக்காதவர்கள் மீது நேசம் காட்டுவது, என்னைப் பார்த்து அன்புடன் புறுமுறுவல் செய்யாதவர்களிடமும் புன்முறுவல் செய்வது போன்றவற்றுக்கான மனோபலத்தை நான் இழந்து விட்டேன். என்னிடம் பொய் சொல்பவர்களுக்காகவும், என்னிடம் பாசாங்கு செய்பவர்களுக்காகவும் நான் இனி ஒரு நிமிடத்தைக் கூட செலவு செய்யப் போவதில்லை. மலினமாக நடந்து கொள்பவர்களையும், பொய்யாக நடிப்பவர்களையும் இனி என்னிடமிருந்து ஒதுக்கி விடப் போகிறேன். என்னிடம் தங்கள் அறிவுத் திமிரைக் காட்டுபவர்களை இனியும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. ஊர்வம்பு பேசுபவர்களின் நட்பும் இனி தேவையில்லை. அதேபோல் என்னை மறுதலிப்பவர்களிடமும் நான் இனி பேசப் போவதில்லை. முரண்பாடுகள் இருக்கும்தான். ஆனால் முரண்படுபவர்கள் இனி எனக்குத் தேவையில்லை. நட்பு என்றால் அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். துரோகிகள் இனி என்னை நெருங்க அனுமதிக்க மாட்டேன். என்னைப் பாராட்டாதவர்களோடு இனி பழகவே போவதில்லை. அதற்காக என்னை முகஸ்துதி செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. முகஸ்துதியை நான் வெறுக்கிறேன். எல்லாவற்றையும் விட முக்கியமாக பிராணிகளையும் விலங்குகளையும் வெறுப்பவர்களின் நிழல் கூட என் மிது படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதேபோல் என் பொறுமையை சோதிப்பவர்கள் தயவுசெய்து என்னிடம் வராதீர்கள்.
மேலே சாய்வெழுத்துகளில் உள்ளதைச் சொன்னவர் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப்.
எழுபது வயது ஆகிறது எனக்கு. இனிமேலும் என் மனம் சொல்வதையே கேட்பது, பேசுவது, எழுதுவது, பழகுவது என்பதை ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டேன். இன்று மெரில் ஸ்ட்ரீப் சொன்ன வாக்கியங்கள் என்னை வந்தடைந்தன. நான் நினைத்ததை அவர் சொல்லி விட்டார். இனிமேல் என் மனமே என்னை வழிநடத்தும். சமூக தர்மம், நீதி, நியாயம், நேர்மை, வாக்குத் தவறாமை, சத்தியம் போன்ற எல்லாமே என் மனதின் வார்த்தைகளுக்கு அப்பால்தான் நிற்கும். என் மனமே என் சத்தியம். என் மனமே எனக்கு தேவ வாக்கு. என் மனமே என் தர்மம். எல்லாம்.
ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அதை என்னால் விலக்க முடியவில்லை. காரணம், அது என் கையில் இல்லை. அது பற்றி மிக விளக்கமாக என் அன்பு நாவலில் எழுதியிருக்கிறேன். அன்பு இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. அன்புவில் உள்ளது எதுவும் இரண்டாம் பாகத்தில் வராது. இரண்டாம் பாகம் ஒரு மனநோய் விடுதியில் பார்வையாளனாக இருந்தவனின் அனுபவங்களாக இருக்கும்.