ஜுன் 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நான் ஒரு பயிலரங்கம் நடத்த இருப்பது பற்றி நீங்கள் அறிவீர்கள். இடைப்பட்ட எட்டு மணி நேரத்தில் தேநீர் இடைவேளை கால் மணி நேரம், மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் போக ஆறரை மணி நேரம் பயிலரங்கம் நடக்கும். ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, தென்னமெரிக்க சினிமா, புதிய சினிமா அல்லது எதிர் சினிமா என்ற நான்கு தலைப்புகளில் என் உரையை அமைத்துக் கொள்வேன். ஹாலிவுட் சினிமா பற்றி பொதுவான புரிதல் இருப்பதால் அது பற்றி அதிகம் பேச மாட்டேன். இருந்தாலும் இடையிடையே தொட்டுத் தொட்டுப் போகலாம். ஒவ்வொரு பகுதி முடிந்ததும் நண்பர்கள் கேள்விகள் கேட்கலாம். நேரம் இருப்பதால் நன்கு விரிவாகப் பேச முடியும்.
இதுவரை 62 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 40 பேர் நன்கொடை அனுப்பி விட்டார்கள். மீதிப் பேரும் நன்கொடையை அனுப்பி வைத்தால் பயிலரங்கம் அன்று பண விஷயத்தில் நேரத்தைச் செலவிடாமல் இருக்கலாம். இந்த 62இல் பத்து பேர் அமெரிக்காவில் வசிப்பவர்கள். எப்படி இருந்தாலும் பயிலரங்கம் ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது. ஆனால் யூட்யூபில் கிடைக்காது.
மேலும், உணவுக்கும் சொல்ல வேண்டியிருப்பதால் நன்கொடை அனுப்பாத நண்பர்கள் அதைச் செய்து விட்டால் பயிலரங்கத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்வது சுலபமாக இருக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம். அண்ணா நூலகத்தில் நான் பேசிய உரையின் ஒரு நிமிடத்தை இன்ஸ்டா ரீல்ஸில் சுமார் ஏழு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். எனக்காக அல்ல. நான் குறிப்பிட்ட அலெஹாந்த்ரோ இனார்ரித்துவுக்காக என்று புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்கள் யாருக்கும் நம்முடைய திருவண்ணாமலை பயிலரங்கு பற்றித் தெரியாது. அதேபோல் அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பி பயிலரங்கில் கலந்து கொள்ள இருப்பவர்களும் என் நெருங்கிய நண்பர்களே. மற்றவர்களுக்கு இந்தச் செய்தியே போய்ச் சேரவில்லை. எப்படி மற்றவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டு போய் சேர்ப்பது என்றும் தெரியவில்லை. நூறு பேராவது இதில் இணைந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் வசிப்பவர்களுக்குக் குறைந்த பட்ச நன்கொடை 2000 ரூ.
வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு 50 டாலர். (ஆனால் எனக்குப் பணம் அனுப்பிய நண்பர்கள் அனைவருமே பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)