மகாராஜா – புல்ஷிட் – அராத்து

மஹாராஜா – முன்னெச்சரிக்கை

1) மஹாராஜாவுக்கு மாலை போட்டு விரதமிருந்து , மஹாராஜா தரிசனம் பார்த்து மயிர்க்கால்கள் நட்டுக்கொண்டு பரவசத்தில் நடுங்கிக்கொண்டு இருக்கும் மஹாராஜா பக்தகோடிகள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். ஏற்கனவே பேதலித்துக் கிடக்கும் உங்கள் மனம் இன்னும் கெட்டுபோய் வெறிநாயாக மாறும் வாய்ப்பு அதிகம்.

2) டூரிங் டாக்கீஸிலோ ,டிவியிலோ , ஹோம் தியேட்டரிலோ , சினிமா ஓடிக்கொண்டிருக்க , அந்த நேரத்தில் கரு உருவானதால் பிறந்தவர்களுக்கு இயற்கையாக சினிமா வெறி இருக்கும். அவர்களும் இதைப்படித்து தங்கள் விதைகளை நசுக்கிக்கொண்டு சிரமப் பட வேண்டாம் எனக் கோரப்படுகிறது.

3) ஸ்பாய்லர் அலர்ட் : விளக்கமாக விமர்சிக்க வேண்டி , படத்தின் கதையை விவாதிக்கக் கூடும். படம் பார்க்காதவர்கள் , சஸ்பென்ஸ் வேண்டும் என நினைத்தால் படிக்காதீர்கள்.

4) சினிமா பற்றி மட்டும் எங்கு பேசினாலும் பீ உருட்டி வண்டுகள் போல ஆஜராகி அரைகுறை ஜந்து மூளையுடன் உளறும் கும்பலுக்கு “பீ உருட்டி வண்டுகள் “ என்ற பட்டத்தை பெருமையுடன் வழங்கி விட்டு ……

மஹாராஜா

நம் சமூகத்திற்கு இன்னமும் கொஞ்சமாவது சுரணையும் , ஈரமும் இருக்கிறது என்றால் அது குழந்தைகள் விஷயத்தில்தான். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் இன்னும் கொஞ்சம் பாசமும் நேசமும் அதிகம்.பெரும்பாலான பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் ஒரு இளவரசி, தேவதை . பெற்றோர்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான உறவு மிகவும் எமோஷனலானது , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது . மிகவும் சென்ஸிடிவான , நுட்பமான உறவுச் சங்கிலி இது. இந்த சமூகத்தின் கேடு , பெண் குழந்தை பெற்றவர்கள் எப்போதும் ஒரு சின்ன பதட்டத்துடனும் , பயத்துடனும் இருந்துகொண்டிருப்பார்கள். குழந்தைக்கு ஏதாச்சும் ஆயிடப்போகுது , எவனாச்சும் எதாச்சும் பண்ணிடப்போறான் என்ற மெல்லிய பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட “இன் செக்யூரிட்டி” ஃபீலிங் அது.

இந்த சென்ஸிடிவான உறவை , இந்த பதட்டத்தை , பெண் குழந்தைகள் சம்மந்தப்பட்ட இந்த இன் செக்யூரிட்டி ஃபீலிங்கை வியாபாரமாக்கி , கல்லா கட்ட முயன்று அதில் இமாலய வெற்றிபெற்றிருக்கிறது மஹாராஜா.

சினிமாவை பல வகையாகப் பிரித்தாலும் கமர்ஷியல் சினிமா என்றும் மாற்று சினிமா (நல்ல சினிமா , உலக சினிமா ….) என நம் வசதிக்கு இரண்டாக எடுத்துக்கொள்வோம்.

கமர்ஷியல் சினிமாவிலும் வன்புணர்வு காட்சி வரும். அதுவும் தற்போது குறைந்திருக்கிறது. கமர்ஷியல் சினிமாவில் வன்புணர்வு காட்சிகள் பெரும்பாலும் எப்படி வரும் ? வயதுக்கு வந்த ஹீரோயினையோ , ஹீரோவின் தங்கையையோ வில்லன் ரேப் செய்வான். ஹீரோ பழி வாங்குவான். அந்த வன்புணர்வு காட்சிகளில் சினிமாத்தனமும் நாடகீயத்தனமும் மேலோங்கி இருக்கும். படம் பார்ப்பவர்களை உணர்வு பூர்வமாக பெருமளவில் பாதிப்படையச் செய்யாது. ஒரு சின்ன பழிவாங்கும் உணர்ச்சியோடு கடந்து விடுவோம்.

சரி , சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதில்லையா ? அதை சினிமாவில் காட்டக் கூடாதா ? என்று கேட்கலாம்.

நிச்சயம் செய்யலாம்.

ஏதோ நல்ல நேரம் , பெரும்பாலும் ,கமர்ஷியல் இயக்குநர்கள் இந்த ஏரியாவைத் தொட்டு சொதப்பியதில்லை. மாற்று சினிமாவில் இதை நல்ல முறையில செய்திருக்கிறார்கள்.

2014 இல் லக்‌ஷ்மி என்றொரு படம் வந்திருக்கிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கியிருக்கிறார். முடிந்தால் அதை ஒரு எட்டு பார்த்து விடவும்.

13 வயது பெண்ணை வேலைக்கு என அழைத்துச் சென்று , வன்புணர்வு செய்யப்பட்டு , விபச்சாரத்தில் தள்ளி எனச் செல்லும் கதையில் , அந்தப் பெண் எப்படி மீண்டெழுந்து கோர்ட் மூலம் போராடி வென்று தன் வாழ்வைத் தொடர்கிறாள் என்று போகும். ஒரு சின்ன மிகை இருக்காது. பெண் குழந்தைகள் மீதான நம் உணர்வை வியாபாரமாக்கும் உத்தி இருக்காது. அதிலும் நாம் பதறுவோம். நம் சமூகத்தின் நிதர்சனம் இருக்கும். சினிமாத்தனம் அறவே இருக்காது.

பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது , அதைத் தொடர்ந்து ஏற்படும் உணர்வுகள் மிக மிகக் கொடுமையானது. அதில் சினிமாத்தனத்தை நுழைப்பது என்பது அருவருப்பானது மற்றும் ஆபாசமானது என்கிறேன்.அதிலும் வன்புணர்வுக்கு முன்பான காட்சியில் அந்தச் சிறுமி ஆடை களைவதை காட்சியாக வைத்துக் காட்டியிருப்பது கொஞ்சமும் ரசமில்லாதது.

மஹாராஜா என்ன சொல்கிறது? எங்கே சினிமாத்தனம் வருகிறது ?

ஒரு சிறுமி பாலியல் வன்முறை செய்யப்படுகிறாளா ? நீங்களே அந்தக் கயவர்களை கண்டு பிடித்து கொடூரமாகக் கொல்லுங்கள் என்கிறது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பார்த்து தியேட்டரில் பயத்தில், எரிச்சலில் வெறியேறி இருக்கும் மக்கள் கொல்லு கொல்லு என மனதுக்குள் அரற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சிறுமியின் தந்தை வில்லனைக் கொல்லும் போது ஏறிய வெறிக்கு வடிகால் கிடைக்கிறது.

நிஜத்தில் இப்போதும் பல சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எத்தனை தந்தைகளால் கத்தி எடுத்துக்கொண்டு போய் அந்தக் கயவர்களை கொல்ல முடிந்திருக்கிறது ? 5 % தந்தைகளால் கூட செய்ய முடியாது.

ஹீரோயினுடன் பனி மலைகளில் டூயட் ஆட முடியாது. பறந்து பறந்து பறந்து சண்டை இட முடியாது. இதைப்போல நிஜ வாழ்வில் செய்ய முடியாத விஷயங்களுக்கு சினிமா , கமர்ஷியல் சினிமா தீனி போடும். இந்தச் சிறுமிகள் வன்புணர்வு விஷயத்திலுமா ?

நிஜ வாழ்வில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்தால் , தந்தையும் மகளும் நீண்ட யோசனைகளுக்குப் பிறகு தயங்கித் தயங்கி காவல் நிலையம் வருவார்கள். அவ்வளவு அருவருப்புணர்வோடும் , கசப்புணர்வோடும் , பதட்டத்துடனும் , பரிதவிப்புடனும் , கையறு நிலையில் அங்கே போய் , புகார் அளித்து ….அது ஒரு வலி மிகுந்த நீண்ட துயர, அவல நாடகம்.

ஒரு நல்ல விஷயம், இந்த விஷயங்களில் மட்டுமாவது நம் காவல் துறை ஓரளவு புரிந்துணர்வோடும் ஆதரவாகவும் நடந்துகொள்கிறது. அரசும் இந்த விஷயத்தில் அந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுப்பது உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து உடன் நிற்கிறது.

பலவித சட்டப்போராட்டம் , மன நல கவுன்ஸிலிங் என மீட்டெடுப்பது என்பது இமாலய வேலை. மஹாராஜா சொல்கிறது. ரேப் ஆச்சா ? எல்லோரையும் போட்டுத் தள்ளு. மேட்டர் ஓவர். அதிலும் ஏதேனும் நம்பகத்தன்மை இருக்கிறதா என்றால் கிஞ்சித்தும் இல்லை. விஜய் சேதுபதி கேரக்டரைசேஷன் பார்த்தால் யாருக்காவது அவர் முடி திருத்துபவர் எனத் தோன்றுகிறதா ? சலூனில் அவர் இருக்கும் ஒரு சில காட்சிகளை எடுத்து விட்டால் , அவர் முடி திருத்துபவர் என்ற சின்ன க்ளூ எங்கேயும் கிடைக்காது. அவரை ப்ளம்பர் என்றாலும் ஒத்துக்கொள்ளலாம், காண்டிராக்டர் என்றாலும் ஒத்துக்கொள்ளலாம், வெல்டிங் பட்டறை ஓனர் , ஹோட்டல் முதலாளி , ஆஃபீஸ் சூப்பிரண்டண்ட் , ஈபி ஆஃபீஸ் ஏஈ , கமிஷன் மண்டி ஓனர் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். விஜய் சேதுபதியாக வருகிறார், அவ்வளவுதான். அவ்வளவுதான் மெனக்கெடல்.

இதை ஏன் மெனக்கெட்டு சொல்கிறேன் என்றால் விஜய் சேதுபதி போல சின்ன சலூன் கடை வைத்திருப்பவரிடம் போய் , சொந்த வீடும் , 15 லட்சம் ரூபாய் சேவிங்க்ஸும் இருக்கா எனக் கேட்டுப் பாருங்கள். சவரக் கத்தியால் சங்கை அறுக்க வந்து விடுவார். விக்கிற வெல வாசில , நானே 50, 100 நூறுன்னு சம்பாதிச்சி , கட வாடகை கட்ட முடியாம தவிச்சிகின்னு இருக்கேன்னு கத்துவார். இது ஒரு சின்ன விஷயம். இதைப்போல படத்தில் ஆத்தண்டிசிட்டியே இல்லை.

மஹாராஜா வை மாற்று சினிமா , சூப்பர் சினிமா என்று சிலாகிப்பவர்களிடம் கேட்கிறேன். சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர் விஜய் சேதுபதி போல வாழ முடியுமா ? அவர் பெண்ணிற்கு இப்படி நடந்தால் , அவரால் இப்படி அசால்டாக தொழில்முறை கிரிமினல்களை எதிர்த்து சண்டையிட்டுக் கொல்ல முடியுமா ? அவன் எப்படி நொறுங்கிப்போய் நடைபிணமாக அமர்ந்து கிடப்பான் என யோசித்துக்கூட பார்க்க முடியாதா உங்களால் ? இதுதான் மாற்று சினிமா இல்லையா ? என்ன விஜய் போல , பாலையா போல விஜய் சேதுபதி பஞ்ச் வசனம் பேசவில்லை. இது ஒன்றைத்தவிர வேறு என்ன வித்தியாசம் ?

சரி இந்த எதிக்ஸ் , வேல்யூ எல்லாம் விட்டுவிட்டு படத்துக்கு வருவோம்.

இதை நான் லீனியர் என்கிறார்கள். இது நான் லீனியர் அல்ல. சும்மா முன்னும் பின்னும் பிய்த்துப் பிய்த்துப் போடுவது மட்டும் நான் லீனியர் அல்ல. கதை நான் லீனியரைக் கோர வேண்டும். ஒரு வீக்கான பழி வாங்கும் கதையை வைத்துக்கொண்டு , அப்படியே சொன்னால் எடுக்காது என்பதால் முன்னும் பின்னும் பிய்த்துப்போட்டு இருக்கிறார் இயக்குநர். இப்படி பிய்த்துப்போட்டதால் சுவாரசியமாய் இருக்கிறதாம். எது ? ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு , யார் செய்தார்கள் எனக் கண்டுபிடித்து போடுவதில் சுவாரசியம். ஆஹா என்னே ரசனைடா சாமிகளா?

படத்தில் மஹா கேவலமான கேரக்டரைசேஷன் அனுராக் காஷய்ப். ஐயா ஏன் அவ்வளவு திருடுகிறார்? ஏன் அவ்வளவு கொலைகள் ? திருடியதை என்ன செய்கிறார் ? படத்தில் ஒரு காரணமும் இல்லை. ஐயா திருடப் போகும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவார் , ஏன் ? ஏனா ? நாங்க ஒரு வித்தியாசமான வில்லன் கேரக்டரை உருவாக்குகிறோம். அடக் கண்றாவியே எனத் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் கோவையில் , இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரத்தில் என்கவுண்டர். சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் உள்ளே சென்றால் சக கைதிகளே அடிப்பார்கள் , உதைப்பார்கள், கேவலமாக நடத்துவார்கள் , சமயங்களில் கொன்று கூட விடுவார்கள். ஆனால் ஐயா அனுராக்& கோ பற்பல கொலைகள் , திருட்டு , எக்கச்சக்க வன்புணர்வு எல்லாம் செய்து விட்டு நோகாமல் சிறைக்குச் சென்று 15 வருடங்களில் திரும்பி வந்து அலுங்காமல் குலுங்காமல் தங்கள் லீலைகளைத் தொடர்கிறது. இதைப்போன்ற கடுமையான குற்றங்கள் செய்து விட்டு சிறையில் இருந்து ரிலீஸ் ஆனால் போலீஸ் கண்காணிப்பு கடுமையாக இருக்கும் என்பதெல்லாம் படத்தில் மயிர் அளவுக்குக் கூட மதிக்கவில்லை.

சிறையில் இருந்து ரிலீஸ் ஆன கிரிமினல் பாய்ஸ் மணிகண்டனுக்கு எப்படி தெரிந்தே மெக்கானிக் வேலை கொடுக்கிறார்கள் ? அந்த கிரிமினல் ஏன் மெக்கானிக் வேலையில் சேர வேண்டும் ? ஒரு லாஜிக்கும் இல்லை. நான் லீனியரில் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் கொடுக்க வேண்டும் அல்லவா ?

சாதா குற்றத்துக்காக சிறை சென்று திரும்பியவர்கள் மறுவாழ்வுக்கு வேலை கிடைக்காமல் அல்லாடுவதை பல சம்பவங்களில் கேட்டிருக்கிறோம். இதில் அனைவரும் ராஜா போல வலம் வருகிறார்கள். இதுதான் ரத்தமும் சதையுமான படம் என சிலாகிக்கப்படும் மஹாராஜாவின் லட்சணம். நிஜ வாழ்க்கைக்கு பக்கத்தில் ஒரு ஃபிரேமில் கூட மஹாராஜா வருவதில்லை.

இந்தப்படம் ஓல்ட் பாய் , இரட்டா காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் எனச் சொல்கிறார்கள். நான் அதற்குள் எல்லாம் போகவில்லை. படத்தின் ஆரம்ப கட்ட நிலையில் அனுராக் காஷ்யபே இந்த வன்புணர்வுகளைச் செய்வதாக வைத்திருந்திருப்பார்கள் என யூகிக்கிறேன். பிறகு தமிழ் ஆடியன்ஸுக்கு இந்த ஷாக் தாங்காது என விவாதித்து வன்புணர்வு செய்ய மெனக்கெட்டு ஒரு கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த கேரக்டர் கதைப்படி சுடுப்பட்டு இறந்ததும் , மீண்டும் வன்புணர்வு செய்ய வலுக்கட்டாயமாக சிங்கம்புலி கேரக்டர் நுழைக்கப்படுகிறது. படத்தின் கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது , அதைக் கடைசியாக ஹேண்டில் செய்கிறேன்.

இப்போது அடிப்படையான சில லாஜிக்குகளைப் பார்த்து விடலாம்.

1) இடைவேளையில் பாய்ஸ் மணிகண்டன் , தப்பித்துப் போகையில் , அந்த 3 பேர்ல ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன்லதான் இருக்கான் , முடிஞ்சா கண்டுபுடிச்சிக்கோ என சவால் விட்டு ஓடுகிறார். எந்தக் குற்றவாளியாவது இப்படி ஐஸ் பாய் விளையாட்டு போல க்ளூ குடுப்பானா ?

அந்தச் சிறுமி வன்புணர்வு செய்தவனின் முதுகில் கட்டி உள்ளது எனச் சொல்லியிருப்பார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அந்த ஒருவனது முதுகில்தான் கட்டி உள்ளது என்ற முடிவுக்கு வருவதற்கு எந்த துப்பும் இல்லை. அனுராக் கேரக்டர் ஸ்டேஷனிலும் , சிங்கம் புலி கேரக்டர் அனுராக் கேரக்டர் இருக்கும் இடத்தில் மாறி இருந்திருந்தால் விஜய் சேதுபதி படம் முழுக்க ஸ்டேஷனில் பலரது முதுகையும் தடவுவது வேஸ்ட் ஆகி இருக்கும்.

இந்த லாஜிக்கை இன்னும் இறுக்கி சரி செய்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை.

2) இது படத்தின் , கதையின் முக்கியமான லாஜிக். குப்பைத்தொட்டி கவிழ்ந்து உயிரைக் காப்பாற்றுகிறது. அது ஒரு தகரத் தொட்டி. அது என்ன புல்லட் ப்ரூஃப் மெட்டலா ? ஒரு லாரி அசுரத் தனமாக உள்ளே நுழைந்து நசுக்குகையில் அனைவரும் செத்து விடுவார்கள். ஆனால் இந்த டைட்டானியத் தகரக் குப்பைத் தொட்டி , ஒரு ஒடுக்கல் நசுங்கல் இல்லாமல் லாரியை எதிர்த்து நின்று உயிரைக் காப்பாற்றும். முதுகெலும்பான இதைப்போன்ற விஷயங்களில் இன்னும் மெனக்கெட்டு இருக்க வேண்டும்.

உலக சினிமாவையும் மாற்று சினிமாவையும் பார்த்து , வித்தியாசமாக கேரக்டர் டிசைன் செய்கிறேன், வித்தியாசமாக சீன் பிடிக்கிறேன் என வெறும் வித்தியாசத்தை மட்டும் மனதில் வைத்து செய்தால் , இப்படித்தான் நம்பகத்தன்மை இல்லாமல் , ஆத்தண்டிசிட்டி இல்லாமல் போய் விடும்.

3) படத்தில் அந்தச் சிறுமி கேம்பில் விளாயாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள் படத்தின் திரைக்கதைக்கு எதற்கு உதவுகின்றன என்பது புரியவில்லை.

4) அந்தச் சிறுமி – லக்‌ஷ்மிய சுத்தம் பண்ணிட்டியா , ஏன் பதிலே சொல்ல மாட்டேங்கிற என்பது போல அனுப்பியிருக்கும் விடியோ மெசேஜ்களை விஜய் சேதுபதி படத்தில் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருப்பார். திரைக்கதைப்படி அப்போது குப்பைத் தொட்டி காணாமல் போயிருக்காது. எனில் , அந்த விடியோக் காட்சிகள் ஏன் ? படம் பார்ப்பவர்களை சும்மா குழப்புவதற்கா ?

அடுத்த பிரச்சனை வசனங்கள். படத்தில் வரும் அல்லக்கை , கிரிமினல்கள் எல்லாம் அறிவுஜீவித்தனமாக வசனம் பேசுவது.

“எனக்கு நீ குடுத்த வலியை விட உனக்கு நான் கொடுத்த வலி அதிகம் “

இப்படியா ஒரு கிரிமினல் பேசுவான் ?

“டேய் ..எங்குடும்பத்த சீரழிச்ச இல்ல ….ஒம்மாள ஒம்பொண்ண எப்டி நாறடிச்சன் பாத்தியா ? ஒனக்கு இப்ப எப்டி இருக்கு ?”

இப்படித்தானே பேசுவான் ?

திரைக்கதையில் புதுமை , புதிர் விளையாட்டு , முன்னே பின்னே பிய்த்துப் போடுவது எல்லாம் மணி ஹீய்ஸ்ட் போன்ற படங்களுக்கு சுவாரசியமாக இருக்கும். வாழ்வில் ஏற்படும் வலி மிகுந்த நெருக்கமாக தருணங்களை எடுக்கையில் சுவாரசியப்படுத்துவதற்காக இதைப்போன்ற கண்ணா மூச்சி விளாயாட்டில் ஈடுபடுவது எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

கடசியாக ஒரு ட்விஸ்ட் என்றார்கள் அல்லவா ? அதுதான் ஓல்ட் பாய் / இரட்டா ட்விஸ்ட்.

அதில் என்ன நீதி கிடைக்கிறது என்றால் , தன் மகளை தானே வன்புணர்வுக்கு உள்ளாக்கியதற்காக வருந்துகிறான் வில்லன். நீ மற்ற பெண் குழந்தைகளை ரேப் செய்தால் உன் மகள் ரேப்புக்கும் நீயே காரணமாக இருப்பாய் அல்லது நீயே ரேப் செய்வாய்.

அடப்பாவிகளா ? உன் பொண்ணு , என் பொண்ணு என்னய்யா ? எல்லாச் சிறுமிகளும் நம் குழந்தைகள்தானே ? இன்னும் எவ்வளவு காலம் கழித்துதான் இந்த அடிப்படை சிந்தனை மாற்றமாவது நம் சினிமா ஆட்களுக்கு வரும் ?

எந்தக் கழிசடை நாய் திருந்துவதற்கும் , மனம் வருதுவதற்கும் மீண்டும் அவன் மகள்தான் வன் புணரப்பட்டு அந்த நாய்களுக்கு புத்தி வர வைக்க வேண்டுமா ? இதுதான் எல்லோராலும் கைகொட்டி பாராட்டி சிலாகிக்கப்படும் தண்டனையா ?

புல்ஷிட் !