ஜூ 30 பயிலரங்கம்: சில குறிப்புகள்

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது.  இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலர்.  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அரங்கசாமி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சேர்மன் கருணாநிதி, பவா செல்லத்துரை, இந்தப் பயிலரங்க யோசனையை எனக்குள் விதைத்த மதிவாணன், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கரன், கல்லூரி நிர்வாகி சக்தி கிருஷ்ணன், என்னுடைய நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரன், மற்றும் பண உதவி செய்த நண்பர்கள்.  இவர்கள் தவிர இரண்டு பேர்.  பயிலரங்கு நடக்கும் போது எந்த வில்லங்கமும் ஏற்படாமல் கவனித்துக் கொண்ட அரங்க நிர்வாகி இளையராஜா.  என் உதவியாளர் சரவணன் சிவன்ராஜா. 

எத்தனையோ விழாக்களைப் பார்த்திருக்கிறேன்.  ஆரம்பத்திலேயே மைக் வேலை செய்யாது.  இல்லாவிட்டால் யாராவது பேசும்போது மைக் மக்கர் பண்ணும்.  அம்மாதிரி எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை.  இது போல் ஒரு பயிலரங்கை காலை ஒன்பதரையிலிருந்து மாலை ஆறரை வரை நடத்த வேண்டுமென்றால், அதற்கான செலவே ஒரு லட்சம் ஆகியிருக்கும். 

தேநீர் நேரத்தில் தேநீர், மதிய உணவுக்கு வடை பாயசத்துடன் கல்யாண விருந்து என்று கல்லூரி நிர்வாகம் அமர்க்களப்படுத்தியது.

எனக்குத் தேவையான திரைப்படங்களைக் கொடுத்து உதவியவர்கள் புகழேந்தி, கருந்தேள் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் செழியன், ராஜா வெங்கடேஷ், ஸ்ரீராம்.  பயிலரங்க வேலைகளைச் செய்து உதவியவர்கள் பலர்.  அதில் முக்கியமானவர் ராஜா.  பயிலரங்கின் போது நான் பேசப் பேச என் பேச்சில் குறிப்பிடப்படும் பெயர்களையும், திரைப்படங்களின் பகுதிகளையும் திரையில் வரச் செய்தவர் சரவணன் சிவன்ராஜா.  பொறியியல் பட்டம் முடித்து விட்டு, அரசுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார்.  பணச் செலவுக்கு பூ கட்டுகிறார்.  வருங்காலத்தில் பெரிய இடத்தில் இருப்பார். 

இந்தப் பயிலரங்கிற்காக உதவியவர்களில் என் வாசகர் வட்ட நண்பர்களும் அடக்கம்.  சாரு வாசகர் வட்டம் என்றால் குடிகாரர்கள் என்ற ஒரு வதந்தி உலவுகிறது.  அப்படிச் சொல்லும் உதவாக்கரைகளுக்கு இந்தப் பயிலரங்கின் வெற்றிதான் பதில். 

இருநூறு பேர் வந்திருந்தார்கள்.  அதில் முப்பது பேர் மாணவர்கள்.  ஆச்சரியம் என்னவென்றால், காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறரை வரை பயிலரங்கில் கலந்து கொண்ட இருநூறு பேரில் இரண்டே இரண்டு பேர் தவிர வேறு ஒருவர் கூட இடையில் எழுந்து போகவில்லை.  நம்ப முடியாத அதிசயம்.  இன்னும் இரண்டு மணி நேரம் கூடப் பேசியிருப்பேன்.  ஆனால் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் நெடுந்தூரத்திலிருந்து வந்திருந்தவர்கள்.  கோயம்பத்தூரிலிருந்தும் கேரளாவிலிருந்தும் எல்லாம் வந்திருந்தார்கள்.  அதனால்தான் ஆறரைக்கு நிறுத்தி விட்டேன். 

படங்கள்: ஸ்ரீ

இன்னொரு அதிசயம் சொல்ல வேண்டும்.  இந்தப் பயிலரங்கத்துக்காக நான் ஒரு மாதம் உழைத்தேன்.  பல திரைப்படங்களைப் பார்த்தேன்.  குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.  இடையிலேயே ஒரு வாரம் கேரளத்தில் சாலைவழிப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.  எல்லாம் முடிந்து இருபத்தொன்பதாம் தேதி திருவண்ணாமலை போய்ச் சேர்ந்தேன்.  அரங்கத்தில் எல்லாம் தயாராக இருந்தது.  சென்னையில் உள்ள ஒரு நவநாகரீகமான திரையரங்கத்திற்கு ஒப்பாக இருந்தது கல்லூரியின் அரங்கம்.

29 மாலை பத்தாயத்துக்குத் திரும்பி வந்தேன்.  ஒரு மாதத்தில் எடுத்த குறிப்புகளையெல்லாம் வரிசைக்கிரமமாகத் தொகுக்க வேண்டும்.  மூன்று மணி நேரம் ஆகலாம்.  அறையில் நண்பர்கள் கூடினார்கள்.  பதினைந்து பேர் இருக்கலாம்.  உலகக் கோப்பை தொடங்கியது.  எல்லோரும் பார்க்க ஆரம்பித்தார்கள்.  அதற்கு முன்னதாகவே நண்பர்கள் வேறோர் அறைக்குச் செல்ல இருந்தார்கள்.  நான் எழுதிக்கொண்டிருந்ததால் அதற்கு உலகக் கோப்பை இடையூறாக இருக்கும் என்பது அவர்கள் யோசனை.  நான் ”போக வேண்டாம், இங்கேயே இருங்கள்” என்று சொல்லி விட்டேன்.  எப்போதுமே என்னைச் சுற்றியுள்ள எதுவும் நான் எழுதுவதற்கு இடையூறாக இருக்காது.  மேலும், நண்பர்கள் இருந்தால் நான் குறிப்புகளை வரிசைப்படுத்துவதற்கு பேச்சுத் துணையாகத்தான் இருக்கும். 

நண்பர்களில் சிலர் மது அருந்தினார்கள்.  நான் மிகவும் கொஞ்சமாக வைன் அருந்தினேன்.  உலகக் கோப்பைக்கான ஆட்டம் கன ஜோராகப் போய்க் கொண்டிருக்க, நான் குறிப்புகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தேன்.  பன்னிரண்டு மணி வாக்கில் இந்தியா வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.  அதற்கு மேல் ஒன்றிரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு நண்பர்கள் அவரவர் அறைக்குச் செல்ல நான் தொடர்ந்து குறிப்புகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தேன். 

உலகக் கோப்பை ஆட்டத்தினாலோ, நண்பர்களின் பேச்சினாலோ என் வேலை ஒரு நிமிடம் கூடத் தடைப்படவில்லை.  நண்பர்கள் கிளம்பிப் போன பிறகும் என் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டே போனது. 

குறிப்புகளை எடுத்து முடித்த பிறகு மணியைப் பார்த்தால் ஐந்து.  பக்கத்துப் படுக்கையில் செல்வா உறங்கிக்கொண்டிருந்தார்.  அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன், நான் எப்போது படுத்தாலும் ஏழு மணிக்கு எழுப்பி விடுங்கள் என்று. 

ஏழுக்கு எழுப்பினார்.  இன்னும் அரை மணி நேரம் தூங்குகிறேன் என்று சொல்லி விட்டு ஏழரைக்கு எழுந்தேன்.  எட்டரைக்குக் கிளம்பினேன். 

ஒன்பதரைக்குப் பயிலரங்கம் தொடங்கியது.  மாலை ஆறரை வரை எந்த அலுப்பும் தெரியவில்லை.  உற்சாகமாகவே இருந்தது.  இரண்டரை மணி நேரம்தான் தூங்கியிருந்தேன்.  மதிய இடைவேளையின் போது ராஜா வெங்கடேஷ் என்னைப் பார்த்து “நீங்கள் மனிதனே இல்லை” என்றார்.   இறைவனுக்கு நன்றி என்றேன் சிரித்துக்கொண்டே.  மாலை ஆறரைக்குப் பயிலரங்கம் முடிந்ததும் சீனியும் அதே வார்த்தைகளைச் சொன்னார்.  

அனைவருக்கும் நன்றி.  நான் உங்களுக்காகவே வாழ்கிறேன்.  உங்களுக்காகவே எழுதுகிறேன்.  அதற்கு இறை சக்தி பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது.

***

தொலைதூரங்களிலிருந்து கட்டணம் கட்டி பயிலரங்கைக் காண முடியாதவர்களுக்கு பயிலரங்கின் ரெக்கார்டிங்கை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருந்தேன். ரெக்கார்டிங் தயாராகி வருகிறது. ஒருசில தினங்கள் எடுக்கும். காத்திருக்கவும்.

சரவணனின் கடிதம்.

அன்புள்ள சாரு,

                            வெகு நாள்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். ஏதோ ஒரு கனவு உலகத்தில் இருந்து மீண்டு வந்தது போல் உணர்கிறேன். இத்தனை நாள் காலையில் கண் விழித்து உங்கள் குறுஞ்செய்தியை பார்த்தவுடன் ஒரு அற்புதமான நாளைத் தொடங்கும் உத்வேகம் பிறக்கும். உங்களிடம் இருந்து ஒவ்வொரு முறை எனக்கு அழைப்பு வரும்போதும் அத்தனை பரவசத்தில் திளைத்தேன். இவை அனைத்தும் இப்போது ஒரு அற்புதமான நினைவுத் தொகுப்பாக என்னுள் பதிந்துவிட்டது. இதை ஒரு ஆரம்பகட்ட வாசகனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு என்றே கருதுகிறேன்.

                           பத்தாயத்தில் உங்களுடன் செலவிட்ட நாட்கள்  எனக்கு நொடியென சென்றுவிட்டன. எத்தனை எத்தனை பெரிய கருத்துகள் என்னை வந்து சேர்ந்தன என்று என்னால் தெளிவாகச் சொல்ல இயலவில்லை.

இதுபோல் எத்தனை பெரிய வேலையையும் உங்களுக்காகச் செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு மீண்டும் இதுபோல் பல வாய்ப்புகள் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

சரவணன் சிவன்ராஜா