ஒரு சிறிய திட்டம்

பொதுவாக லௌகீக விஷயங்களில் நான் சீனியிடம்தான் யோசனை கேட்பேன். தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அதன்படி செய்வேன். காரியம் வெற்றிகரமாக நடக்கும். சில அரிய சந்தர்ப்பங்களில் அவர் யோசனையைக் கேட்பதில்லை. அப்போதும் காரியம் வெற்றிகரமாக நடக்கும். ஒருவேளை அந்த விஷயத்தில் அவர் யோசனையைக் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குக் குறுகுறுப்பாக இருக்கும். லௌகீக விஷயங்களில் மற்றபடி நான் யார் யோசனையையும் பேச்சையும் கேட்பதில்லை.

இன்னொரு நண்பர் இருக்கிறார். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு செய்திருப்பேன். அந்த விஷயம் பற்றி சீனியிடம் கேட்டால் நான் எடுத்த முடிவையே அவரும் சொல்வார். இத்தனைக்கும் நான் எடுத்த முடிவு பற்றி அவரிடம் தெரிவித்திருக்க மாட்டேன். ஆனாலும் எனக்கு சந்தேகம் வரும். நண்பரிடம் கேட்பேன். நான் எடுத்த முடிவுக்கு நேர் எதிராகச் சொல்லுவார். அப்போதுதான் எனக்குத் திருப்தி உண்டாகும், நான் எடுத்த முடிவு சரி என்பதாக.

இந்த மூவர் கூட்டணியில் நாலாவதாக ஒரு நண்பர் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் பற்றி சீனிக்கும் தெரியாது. எனக்கு எதிர்முடிவு எடுக்கும் நண்பருக்கும் தெரியாது. தெரிவிக்கவே வேண்டாம், இவர் ரகசிய நண்பராகவே இருக்கட்டும் என்பது என் திட்டம்.

ஆச்சரியகரமாக அந்த ரகசிய நண்பர் சொல்லும் யோசனைகளும் சீனியின் யோசனைகளைப் போலவே நல்லபடியாக அமைகின்றன. திருவண்ணாமலை பயிலரங்கம் அவர் சொன்ன யோசனைகளில் ஒன்றுதான். அவர் இப்போது ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். யாரிடமும் அது பற்றி ஆலோசிக்காமல் காரியத்தில் இறங்கி விட்டேன். ஆலோசித்தால் எல்லோருமே ஒருமனதாக “விளங்காது” என்பார்கள். எதற்கு அந்த ஆசீர்வாதம் என்று உங்கள் முன் வந்து விட்டேன்.

விஷயம் சின்னதுதான். நண்பர் சொன்ன யோசனை இது: நீங்கள் எப்போதெல்லாம் என் கட்டுரைகளை இந்தத் தளத்தில் படிக்கிறீர்களோ அப்போதெல்லாம் எனக்குப் பத்து ரூபாய் அனுப்ப வேண்டும். நிரந்தரத் திட்டம் அல்ல. ஒரே ஒரு மாதம்தான். இந்த ஜூலை இருபதிலிருந்து ஆகஸ்ட் இருபது வரை மட்டுமே இந்தத் திட்டம். இந்த ஒரு மாதமும் தினமும் ஒரு கட்டுரை எழுதுவேன். முப்பது நாள்களுக்கு மட்டும். அதற்குப் பிறகு நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களை கவனிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களால் பத்து ரூபாய் அனுப்ப முடியாது. காரணம், இலங்கையைத் தவிர வேறு எங்கேயும் பத்து ரூபாய் என்பது செல்லாக்காசு. அதனால் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் வழக்கப்படி கம்மென்று இருந்து விடலாம். வெளிநாட்டில் வசிக்கும் என் நண்பர்கள் மட்டும் ஒரு மாதத்துக்கான வாசிப்புக் கட்டணத்தை நன்கொடை என்று கருதி வழக்கம்போல் அனுப்பும் விதத்தில் அனுப்பலாம். நன்கொடைதான். பத்து ரூபாயையெல்லாம் டாலரால் வகுக்க முடியாது. வகுக்கவும் மாட்டார்கள். திருவண்ணாமலை பயிலரங்கம் வெற்றிகரமாக நடந்தேறியதற்கு அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்கள் முக்கியமான காரணம்.

சாருஆன்லைன் என்ற நம் இணையதளத்துக்கு சந்தா/நன்கொடை வருவது அறவே நின்று விட்டது. ஆனால் ஆச்சரியகரமாக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை பெரிதும் கூடியிருக்கிறது. ஒரு மாதத்தில் பத்தாயிரம் பேர் வாசிக்கிறார்கள். இவர்களில் ஒரு பத்து பேர்தான் நூறு ரூபாய், இருநூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று அனுப்புகிறார்கள். அதற்கு மேல் இல்லை. அவர்களால் முடியாது. அவர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் அனுப்புகிறார்கள்.

நான் ஆங்கிலத்தில் எழுதினால் ஒரு வார்த்தைக்குப் பத்து ரூபாய் வாங்குகிறேன். ஆனால் இந்தத் தளத்தில் நான் எழுதும் கட்டுரைக்குப் பத்து ரூபாய்தான் விலை வைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், பத்து ரூபாய்க்கு இன்று இந்தியாவில் எந்த மதிப்பும் இல்லை. ஆனாலும் நீங்கள் எனக்கு அனுப்பும் பத்து ரூபாய் ஒரு கட்டத்தில் பெரிதும் பயனுள்ளதாக மாறும். ஒரு நூறு இருநூறு பேர் அனுப்பினால். பத்து பேர் மட்டும் பத்து ரூபாய் அனுப்பினால் இந்தத் திட்டம் செல்லாது. தூக்கிப் போட்டு விட வேண்டியதுதான். எல்லோரும் செய்தால் மட்டுமே இது செல்லுபடியாகும். தினமும் அனுப்ப முடியாதவர்கள் ஒரு மாதத்துக்கு என்று அனுப்பி விடலாம். பத்து ரூபாய் என்பதும் கட்டணம் அல்ல. நன்கொடைதான். குறைந்த பட்ச நன்கொடை. நீங்கள் நூறோ ஆயிரமோ அனுப்பினால் அது என் பயணத்துக்குத்தான் உதவும். திரும்பவும் சொல்கிறேன். உங்களிடமிருந்து நான் பெறுகின்ற அத்தனை பணமும் உங்களுக்கேதான் ஞானமாகத் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, துருக்கி பயண நூலான, நிலவு தேயாத தேசம். அம்மாதிரி பயண நூல்கள் உலகில் வெகு அரிது.

ஆங்கிலத்தில் நான் ஒரு வார்த்தைக்கு பத்து ரூபாய் வாங்கினாலும் சில சமயங்களில் அங்கேயும் நான் பணம் வாங்காமல்தான் எழுத வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஏஷியன் ரெவ்யூவில் நான் எழுதி வரும் சுயசரிதைக்குப் பணம் தருவதில்லை. காரணம், அந்தப் பத்திரிகை என் நண்பர்களின் கைக்காசில் நடத்தப்படுகிறது. எந்தவிதப் பொருள் உதவியும் யாரிடமிருந்தும் இல்லை. விளம்பரங்களும் இல்லை. அதனால் அங்கே நான் இலவசமாக எழுதுகிறேன்.

மை லைஃப் மை டெக்ஸ்ட் என்ற அந்த சுயசரிதையின் அத்தியாயங்களை நீங்கள் வாசித்திருப்பீர்கள். உலக மொழிகளில் இதுவரை எழுதப்பட்டு, ஆகச் சிறந்தவை என்று கருதப்படும் சுயசரிதங்களில் மை லைஃப் மை டெக்ஸ்ட் ஒன்றாக இருக்கும். காரணம் என்னவென்றால், நான் ஐம்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர் வாசிப்பில் இருக்கிறேன். என்னைப் பற்றி அராத்து எடுத்த ஆவணப்படமான தெ அவ்ட்ஸைடரில் என் தங்கை சொல்வதாக ஒரு சம்பவம் வரும். ”நாங்கள் பத்து மணிக்குத் தூங்கப் போகும்போதும் அண்ணன் படித்துக் கொண்டிருப்பார்கள். காலையில் நாலரை மணிக்கு நாங்கள் எழுந்து கொள்ளும்போதும் அண்ணன் படித்துக் கொண்டிருப்பார்கள்.” தங்கை சொல்லித்தான் அது எனக்கு ஞாபகமே வந்தது.

ஃப்ரெஞ்ச் இலக்கியத்தையும் ஃப்ரெஞ்ச் தத்துவத்தையும் நாற்பத்தைந்து ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். உலக சினிமாவுக்கு நான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக பார்வையாளன். என்னுடைய இருபத்து நான்காவது வயதில் நான் எழுதிய முதல் கட்டுரையே சினிமா பற்றிய கட்டுரைதான். கொல்லிப்பாவை என்ற இதழில் வெளிவந்தது. ஜான் ஆப்ரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை என்ற படத்தைப் பற்றி. ஆனால் என் நண்பர் எழுதுகிறார், ”சாருவின் இருபது ஆண்டுகளுக்கு மேலான சினிமா அனுபவம்” என்று. நாற்பத்தைந்து ஆண்டுகள். முழுமையாக நாற்பத்தைந்து ஆண்டுகள். இருபது ஆண்டுகள் அல்ல. நண்பர் என் உருவத்தைப் பார்த்து என் வயது ஐம்பது என்று நினைத்து விட்டார் போல.

நான் எழுதும் மை லைஃப் மை டெக்ஸ்ட் உலகின் ஆகச் சிறந்த சுயசரிதங்களில் ஒன்றாக இருக்கக் காரணம், இதை எழுதும்போது உலகின் ஆகச் சிறந்த சுயசரிதங்களாகக் கருதப்படும் அனைத்தையும் வாசித்து விட்டேன். கிடைப்பதற்கு மிக அரிதாக இருக்கும் அலா(ங்) ராப்-க்ரியேவின் Ghosts in the Mirror சுயசரிதம் உட்பட. இப்படிப்பட்ட கடுமையான உழைப்பைக் கைக்கொள்வதால்தான் என்னால் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்க முடிகிறது.

இதோ இப்போது மை லைஃப் மை டெக்ஸ்ட் சுயசரிதையின் அடுத்த அத்தியாயத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

பத்து ரூபாய் அனுப்புவதற்கு சஞ்சலம் அடைய வேண்டாம். நூறு பேரிடமிருந்து வந்தால் அது ஒரு பெரிய தொகை. அல்லது, உங்களால் இயன்றால் மாதச் சந்தாவாக அனுப்பி விடுங்கள். பத்து ரூபாய் என்பது குறைந்த பட்ச நன்கொடை. மற்றபடி அதை அதிகரிப்பது உங்கள் விருப்பம்.

நன்கொடையை ஜிபே மூலம் அனுப்பலாம். அதிக தொகையாக இருந்தால் என் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். ஜிபே அனுப்புவதற்கான தொலைபேசி எண்: 92457 35566. (பெயர்: ராஜா)

My Life, My Text… – The Asian Review (asian-reviews.com)

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai